‘திரையிசைத் திலகம்’ என்று போற்றப்பட்ட கே.வி. மகாதேவன் பிறந்த தினம் இன்று

0
41

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன் கோவிலில் மார்ச் 14, 1918 ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயதிலேயே இவருக்கு இசையில் நாட்டம் இருந்ததால் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. தந்தையிடம் இசை பயின்றார். பிறகு பூதபாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக குருகுல முறையில் சில ஆண்டுகள் இசை பயின்றார். அங்கரை விஸ்வநாத பாகவதரின் குழுவில் இணைந்து டெல்லி, மும்பை, ஹைதராபாத், நாக்பூர் ஆகிய நகரங்களில் கச்சேரி செய்தார்.

ஸ்ரீபாலகந்தர்வ கான சபாவில் 13 வயதில் சேர்ந்தார். பெண் வேடமேற்று பாடி, நடித்தார். வேறு சில நாடக கம்பெனிகளிலும் நடித்தார். சென்னையில் சில காலம் ஒரு ஹோட்டலில் வேலை செய்தார். நாடக ஆசிரியர் சந்தானகிருஷ்ண நாயுடு சிபாரிசில் வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் வேலை கிடைத்தது.
பிரபல இசை அமைப்பாளர் டி.ஏ.கல்யாணம் இவரது இசை ஞானத்தை அடையாளம் கண்டு தன் உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். 1940-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் நிரந்தர இசை அமைப்பாளராகச் சேர்ந்தார். 1942-ல் மனோன்மணி திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்தார்.
1950-களின் மத்தியில் டவுன் பஸ், முதலாளி, மக்களைப் பெற்ற மகராசி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பேரும் புகழும் பெற்றார். பாடலுக்குப் பொருத்தமான இசையை வழங்குவது இவரது சிறப்பம்சம். சுமார் ரகப் படங்கள்கூட, கண்ணதாசன் வரிகளாலும், இவரது இசையமைப்பாலும் தோல்வியைத் தழுவாமல் தப்பித்தன.
தமிழகத்தில் மட்டுமின்றி, தெலுங்கு மண்ணிலும் பெரிதும் கொண்டாடப்பட்ட இசை அமைப்பாளராக முத்திரை பதித்தார். இவரது நீண்ட நெடிய இசைப் பயணத்தில் யார் மனதும் புண்படும்படி இவர் நடந்துகொண்டதே இல்லை. பாடலாசிரியர்கள் விரும்பும் இசையமைப்பாளர் என்றும் புகழப்பட்டார்.
‘திரையிசைத் திலகம்’ என்று போற்றப்பட்ட இவருடைய பாடல்கள் சங்கீத நுட்பம் நிறைந்ததாக இருக்கும். திரை இசையில் சாஸ்திரிய இசை, நாட்டுப்புற இசை, மெல்லிசை என்று ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்தார்.
கந்தன் கருணை, சங்கராபரணம் படங்களுக்காக இவருக்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதுகள் கிடைத்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தமிழில் 218 படங்களுக்கு இசை அமைத்தார். தனது அற்புதமான இசையமைப்பில் ஏராளமான பாடல்களை வழங்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற கே.வி.மகாதேவன் 83 வயதில் (2001) மறைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here