இருபதாம் நூற்றாண்டில் சிறந்த இந்திய கணிதவியலாளர் சு.சி.பிள்ளை பிறந்த தினம் இன்று

0
1641

சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை, ஏப்ரல் 5, 1901ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில், குற்றாலத்திற்கருகிலுள்ள வல்லம் என்ற சிற்றூரில் பிறந்தார். இவர் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இந்தியக் கணிதவியலாளர். அவருக்கு ஒரு வயது ஆகுமுன்பே தாயார் கோமதி அம்மாள் காலமாகிவிட்டார். தந்தை சுப்பையா பிள்ளை தான் வயதான உறவினப் பெண்மணி ஒருவரின் உதவியுடன் குழந்தையை வளர்த்தார்.
செங்கோட்டை நடுத்தரப்பள்ளியில் பையன் படிக்கும்போதே சாஸ்திரியார் என்ற ஒர் ஆசிரியர் இவருடைய புத்தி வல்லமையையும் உழைப்பையும் பார்த்துப் பூரித்துப் போனார். இவருடைய பள்ளிப்படிப்பு முடிவதற்குள்ளேயே சுப்பையாபிள்ளை காலமானபோது, அவர்தான் சிவசங்கரநாராயணனின் கல்லூரிப் படிப்பிற்கு உதவிசெய்தார். இடைநிலைக் கல்வி பயின்றது நாகர்கோயிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில். திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் கல்விச் சலுகை பெற்று நன்றாக படித்து B.A. பட்டம் பெற்றார். மேற்படிப்பிற்காக சென்னைக்குச் சென்றார். சென்னை மாகாணக் கல்லூரியில் 1927 இல் ஆனந்தராவின் கீழ் ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்து முதல்தர ஆராய்ச்சி மாணவன் என்று பெயர் எடுத்தார். ஆனந்தராவுடன் கூட பேராசிரியர் வைத்தியநாதசுவாமியும் இவருக்கு வழிகாட்டினார். சென்னைப் பல்கலைக்கழகம் இவருடைய ஆராய்ச்சிகளைப் பாராட்டி இவருக்கு அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் (D.Sc.) பட்டமே வழங்கியது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் (D.Sc.) பெற்றவர். எண் கோட்பாட்டில் பல நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த வாரிங் பிரச்சினையில் அவருடைய சாதனை மிகப்பெரிதாகப் பேசப்பட்டது. இந்தியா அவருடைய அகால மரணத்தினால் இன்னும் பல சாதனைகள் புரிந்து நாட்டுக்குப் புகழ் சேர்க்கக்கூடிய ஒருவரை இழந்தது.

#சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here