குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், சமஸ்கிருதம் தெய்வீக மொழி என்றும், நமது ஆன்மிகத் தேடலில், தெய்வீகத்தை இணைக்கும் புனிதப் பாலமாக அது செயல்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர்,
சமஸ்கிருதம் மனித நாகரிகத்திற்கான கலாச்சார நங்கூரம் என்று விவரித்தார். “இன்றையக் காலகட்டத்தில், சமஸ்கிருதம் அறிவார்ந்த கடுமை, ஆன்மீக அமைதி மற்றும் தனக்கும் உலகிற்கும் ஆழமான இணைப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு தனித்துவமான ஆறுதலை வழங்குகிறது” என்று அவர் கூறினார். “திருப்பதியில் தான் ஒருவர் தெய்வீகம், ஆன்மீகம் மற்றும் மேன்மைக்கு மிக அருகில் வருகிறார்.
கோவிலில் தரிசனம் செய்த போது இதை அனுபவித்தேன். நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன், அனைவருக்கும் பேரின்பத்தை நாடினேன்” என்று கூறினார்.
குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், டாக்டர் சுதேஷ் தன்கருடன் இணைந்து வெங்கடேஸ்வரரிடம் பிரார்த்தனை செய்தார்.
பின்னர் அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “இன்று திருமலையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.
சேஷாசலம் மலைகளின் அமைதியான சூழலுக்கு மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் இந்த புனித இருப்பிடம் பாரதத்தின் வளமான ஆன்மீகப் பாரம்பரியத்தின் ஒளிரும் சின்னமாகும்.
எனது சக குடிமக்கள் அனைவரின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தேன்”.
இந்திய அறிவு முறைகளின் மறுமலர்ச்சி மற்றும் பரப்புதலில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களின் பங்கை வலியுறுத்தினார்.
சமஸ்கிருதத்தின் வளமான பாரம்பரியத்திற்கும் நவீன கல்வித் தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில், புதுமையான பாடத்திட்டங்களை உருவாக்கவும், பலதுறை ஆராய்ச்சியை வளர்க்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.
“சமஸ்கிருதம் என்னும் புனித மொழி நம்மை தெய்வீகத்துடன் இணைப்பது மட்டுமல்லாமல், உலகைப் பற்றிய முழுமையான புரிதலை நோக்கிய பாதையை ஒளிரச் செய்யட்டும்” என்று குடியரசு துணைத் தலைவர் மேலும் கூறினார். விலைமதிப்பற்ற பழங்கால கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாப்பதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் தன்கர் வலியுறுத்தினார்.
நமது கலாச்சார பாரம்பரியத்தின் கருவூலமாக சமஸ்கிருதம் திகழ்கிறது என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், அதைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் தேசிய முன்னுரிமை மற்றும் கடமை என்று குறிப்பிட்டார்.
சமஸ்கிருதம் இன்றைய தேவைக்கேற்ப வளர்க்கப்பட வேண்டும் என்றும் அதை எளிமையாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எந்தவொரு மொழியும் சமூகத்தால் பயன்படுத்தப்படும் போதும், அதில் இலக்கியங்கள் இயற்றப்பட்டால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்று குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், நம் அன்றாட வாழ்க்கையில் சமஸ்கிருத பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தினார்.
மத மற்றும் தத்துவ நூல்கள் மட்டுமல்லாமல், மருத்துவம், நாடகம், இசை மற்றும் அறிவியல் குறித்த மதச்சார்பற்ற படைப்புகளையும் உள்ளடக்கிய சமஸ்கிருதத்தின் வளமான மற்றும் மாறுபட்ட இலக்கியத் தொகுப்பைப் பற்றி குறிப்பிட்ட திரு தன்கர், பிரதான கல்வியில் சமஸ்கிருதத்தின் ஒருங்கிணைப்பு குறைவாகவே உள்ளது, இது பெரும்பாலும் இந்திய அறிவு முறைகளை நிராகரிக்கும் நீடித்த காலனித்துவ மனநிலையால் தடுக்கப்படுகிறது என்று எடுத்துரைத்தார்.
சமஸ்கிருதத்தைப் படிப்பது வெறுமனே ஒரு கல்வித் தேடல் அல்ல என்று கூறிய அவர், அதை சுய கண்டுபிடிப்பு மற்றும் அறிவொளியின் பயணம் என்று விவரித்தார்.
“சமஸ்கிருதத்தின் பாரம்பரியத்தை எடுத்துச் செல்லுங்கள் – கல்வி அறிவை மட்டுமல்ல, மாற்றத்திற்கான பாதையையும்” என்று அவர் அறைகூவல் விடுத்தார், மேலும் இந்த விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் தூதர்களாக மாறுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார், இதன் பொக்கிஷங்கள் எதிர்கால சந்ததியினரை சென்றடைவதை அவர் உறுதி செய்தார்.
தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் என். கோபாலசுவாமி, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, திருப்பதியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) இயக்குநர் பேராசிரியர் சாந்தனு பட்டாச்சார்யா, ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.