இந்திய விண்வெளித் துறை வளர்ச்சியின் அடுத்தகட்டமாக, செவ்வாய் மற்றும் நிலவுக்கு பயணிக்கும் இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான நிலையம் அமைக்க லடாக் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எதிர்கால விண்வெளி பயணங்களுக்கான முக்கியமான ஆராய்ச்சிகளை இந்த மையம் செயல்படுத்தும் என தெரியவருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அனலாக் ஆராய்ச்சி நிலையம் என்பது வேற்று கிரகங்களின் தன்மைகளை பிரதிபலிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்யேக ஆராய்ச்சி மையமாகும்.
இது விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரர்களின் வாழ்விடங்கள் மற்றும் உபகரணங்களைச் சோதனை செய்து பார்க்கும் இடமாகும்.
இந்த அனலாக் ஆராய்ச்சி நிலையத்தில், வெறும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் உட்பட பிற உயிரினங்கள், எந்தெந்த தீவிர நிலைமைகளுக்கு எப்படி எப்படி இயல்பு மாறுகிறது? என்பதைப் புரிந்து கொள்வதற்குமான ஆய்வுகள் மேற்கொள்ளப் படும்.
இதன் அடிப்படையில் செவ்வாய் மற்றும் சந்திரனை நெருக்கமாகப் பிரதிபலிக்கும் தனித்துவமான புவியியல் பண்புகளை மேற்கோள் காட்டி லடாக் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் ககன்யான் விண்வெளி வீரர்களில் ஒருவரான ஷுபன்ஷு சுக்லாவுடன் இணைந்து BSIP-ஐச் சேர்ந்த பினிதா பார்தியால் மற்றும் IISc-ஐச் சேர்ந்த அலோக் குமார் ஆகியோர் தான் லடாக்கைத் தேர்வு செய்வதற்கான அறிவியல் காரணங்களை முன் வைத்துள்ளனர்.
வேற்று கிரக நிலைமைகளை உருவகப்படுத்துவதற்கான ஏற்ற சிறந்த இடமாக லடாக் இருக்கிறது என்பதை தம் ஆய்வுகள் மூலம் இவர்கள் கண்டறிந்துள்ளனர் .
மேலான குளிர், வறண்ட பாலைவனம், பாறைகள் நிறைந்த நிலப்பரப்பு ஆகியவையே லடாக் தேர்வு செய்யப் பட்டதற்கு முக்கிய காரணங்களாகும் .
செவ்வாய் மற்றும் நிலவு பற்றிய ஆய்வுகள் செய்வதற்கும், புதிய விண்வெளி தொழில்நுட்பங்களுக்கான சோதனை தளமாக இந்த அனலாக் ஆராய்ச்சி நிலையம் அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மேம்பட்ட தொழில்நுட்ப தயார் நிலைகள் (TRL), பொறியியல் ஒருங்கிணைப்பு, மனித ஆய்வுகள் மற்றும் விண்வெளிக்குச் செல்லும் குழு பயிற்சி, புவியியல் மற்றும் வானியல் ஆராய்ச்சி ஆகியவை இந்த ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை, குறிப்பாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தைச் செயல்படுத்தவும், மற்றும் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளவும், இந்தியாவின் துருவ ஆராய்ச்சி நிலையங்களின் மாதிரிகளுடன் ஒப்பீட்டு ஆராய்ச்சி நடத்துவதற்கும் இந்த நிலையம் முக்கிய பங்காற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) விண்வெளி வீரரை இந்தியா அனுப்ப இருக்கிறது. இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் ஆகியவற்றுடன் இணைந்து ககன்யாத்ரி என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி வீரர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்ய உள்ளார். இத்தகவலை மத்திய விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் அறிவித்திருக்கிறார்.
Axiom-4 மூலமாக தற்போது இஸ்ரோவின் ககன்யான் பணிக்காக பயிற்சி பெற்று வரும் நான்கு இந்திய விமானப்படை விமானிகளில் ஒருவர் விண்ணுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வரும் ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னதாக Axiom-4 செலுத்தப்பட உள்ளது.
ரஷ்யாவில் அடிப்படை விண்வெளி பயிற்சியை பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய விண்வெளி வீரர்கள், தற்போது பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி வீரர் பயிற்சி நிலையத்தில் தங்கள் பயிற்சியைத் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், லடாக்கில் அனலாக் ஆராய்ச்சி நிலையத்தை இந்தியா கட்டமைப்பது சர்வதேச முக்கியத்துவம் பெறுகிறது.
செவ்வாய் மற்றும் சந்திரன் போன்ற வேற்று கிரக ஆராய்ச்சிகளிலும் , விண்வெளிச் சுற்றுலாத் துறையிலும் இந்தியா சாதனை படைப்பதற்கு இந்த லடாக் ஆராய்ச்சி நிலையம் பெரும் பங்கு வகிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.