12-8-24 இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்து முன்னணி
மாநில செயலாளர் மணலி த. மனோகர், மாநில செய்தி தொடர்பாளர் ஏ.டி. இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த மூன்று வாரங்களாக பங்களாதேஷ் தீ பற்றி எரிந்து வருகிறது. அங்கு வாழும் இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். சுமார் 52 மாவட்டங்களில் இனவாத வன்முறையானது நடைபெற்றுள்ளது. இந்துக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் பெண்கள் பொது இடத்தில் மானபங்கப்படுத்தப்பட்ட வீடியோக்கள் தொலைக்காட்சி/ சமூக ஊடங்களில் பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது. இஸ்கான் கோவில் உட்பட 50க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்துக்களின் புனித நூல்களை எரித்து தங்கள் மதவெறியை வெளிப்படுத்தியதை பார்க்கிறோம். இந்திராகாந்தி கலாச்சார மையம், இந்திய அரசால் இலவசமாக தரப்பட்ட ஆம்புலன்ஸ் ஊர்திகள் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் உயிரையும் உடமைகளையும் இழந்து இந்துக்கள் அச்சுறுத்தும் அவலம் தொடர்கிறது.
இத்தகைய நிலையில் பாரதம் முழுவதும், உலக நாடுகள் பலவற்றிலும் பங்களாதேஷ் இந்துக்களைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது. ஆனால் தமிழகத்தின் நிலை என்ன?
இந்து முன்னணியும் கடந்த 5 நாட்கள் முன்பு பங்களாதேஷ் இந்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு அளித்தது. ஆனால், நேற்று நள்ளிரவு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
பங்களாதேஷ் நடைபெறுவது இன படுகொலையால், திட்டமிட்ட வன்முறைகளால் அங்குள்ள இந்துக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நமது பாரதத்தின் ஒருபகுதியாக இருந்து மதவெறி வன்முறையால் தனிநாடாக பிரிக்கப்பட்டது பங்களாதேஷ் நாடு. பூர்வீக இந்தியர்களான அங்கு வாழும் இந்துக்கள் அடையும் துயரத்திற்கு ஆறுதல் கூறும் வகையிலும், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் தமிழகத்தில் “ஒப்பாரி” வைத்து அழக்கூட இந்து விரோத திமுக அரசு தடை விதித்துள்ளகைக் கண்டிக்கிறோம்.
பங்களாதேஷில் நடைபெறும் இனப்படுகொலை வன்முறையானது நாட்டை துண்டாட நடைபெற்ற முகமது அலி ஜின்னாவின் நேரடி நடவடிக்கைபோல் அப்பாவிகள் மேல் வன்முறையானது நடத்தப்படுகிறது.
இத்தகைய அவலம் கண்முன் பார்த்த பின்னரும் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் வருத்தமோ, கண்டித்தோ அறிக்கைக்கூட வெளியிடவில்லை. இது எத்தகைய துரதிருஷ்டவசமானது!
எதற்கெடுத்தாலும் மனிதாபிமான முறையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் தமிழக முதல்வர் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லையே ஏன்? பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் என்பதாலா?
இந்த இனப்படுகொலைகளை கண்டித்தும் பங்களாதேஷ் அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தவும் தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.
ஆளும் திமுக அரசு தொடர்ந்து பாசிச போக்கைக் கடைப்படித்து, சர்வாதிகாரமாக ஜனநாயாகத்தின் குரல் வளையை நெறித்து வருகிறது.
பாலீஸ்தீனம் இஸ்லாமியர்களுக்கு தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக அனுமதி அளிக்கிறது. அங்கு நடப்பது இரு நாடுகளுக்கிடையேயான போர். அதே சமயம், கண்முன்னே நமது அண்டை நாட்டில் நடத்தப்படும் வன்முறையை தடுக்க வலியுறுத்தக்கூடாது என்பது எந்தவிதத்தில் நியாயம்?
பாரத அரசின் பட்ஜெட் பற்றி பாராளுமன்றத்தில் தமிழகத்தின் தேவைகள் குறித்து பேசவில்லை. நிதி குழுவின் கூட்டத்தில் தமிழகத்தின் தேவை குறித்து எடுத்து உரைக்க முதல்வர் போகவில்லை. ஆனால் மத்திய அரசை எதிர்ப்பதாக, கண்டிப்பதாக பிரிவினைவாத விஷ கருத்துக்களை பேச திமுக நடத்திய ஜனநாயக விரோத ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டந்தோறும் காவல்துறை அனுமதி அளித்தது.
ஆளும் திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் இடதுசாரி கட்சிகள் கூட திமுக ஆட்சியில் தொடர்ந்து ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவது குறித்து புலம்பி உள்ளது. அத்தகைய அவல நிலையில் திமுகவின் ஆட்சி இருக்கிறது.
திமுக அரசு சிறுபான்மையினரை தாஜா செய்வதாக நினைத்து பெரும்பான்மையான தமிழர்களின் கருத்துரிமையை நசுக்குகிறது.
தமிழகத்தில் ஆளும்கட்சியை விமர்சனம் செய்தால் குண்டர் சட்டம், சிறையில் அடைப்பது, பல குற்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இழுத்தடிப்பது என்ற ஆங்கிலேய அடக்குமுறையை திமுக கையாளுகிறது.
காங்கிரஸ் போராட்டம் என்ற பெயரில் தொடர்ந்து ஜனநாயக விரோதமாக, தான்தோன்றி தனமாக ஆர்ப்பாட்டம் நடத்தி, பொதுமக்களுக்கும் பொது போக்குவரத்திற்கும் இடையூறை செய்யும் போது காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்க வைக்கிறது திமுக அரசு.
முஸ்லிம் அமைப்புகள் / கட்சிகள் மதவாதமாக, தேசவிரோதமாக பேசுவதன் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் திமுக அரசின் தவறான செயல்பாட்டை பேசும் தனி நபர் மீது கடும் நடவடிக்கை பாய்கிறது. இத்தகைய செயல்பாடு ஜனநாயகத்தை கேலிகூத்தாகிறது. தேச விரோத செயலுக்கு திமுக துணைபோகிறது என்பதை மக்கள் உணர வேண்டும்.
தமிழகத்தில் நடக்கும் அராஜகங்களான மணல் கொள்ளை, அரசியல் அடாவடித்தனம் போன்ற பல உண்மை சம்பவங்களை படம்பிடித்து மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த, சமூக பொறுப்புணர்வோடு செயல்பட்ட பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டு, அவமானபடுத்தப்பட்டனர். தமிழக ஆளும் கட்சியினர் அராஜகத்தை தட்டிக்கேட்கும் ஊடகத்தினர் மிரட்டப்படுகின்றனர். இத்தகைய செயல்பாடு சர்வாதிகாரத்தின் உச்சம். சர்வாதிகாரம் ஒருநாளும் வெற்றி பெற்றதில்லை, வீழ்ந்ததாக தான் சரித்திரம்.
மனிதாபிமானமில்லாமல் வன்முறை நடக்கும் பங்களாதேஷில் கூட இந்துக்கள் ஆயிரக்கணக்கில் கூடிய தங்கள் வன்முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் நடக்கும் காட்டாட்சி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு ஜனநாயகத்திற்கு எதிராக, பங்களாதேஷ் இந்துக்கள் பாதுகாப்பை வலியுறுத்த ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி பேரியக்கத்திற்கு
தமிழ்நாடு முழுவதும் அனுமதி மறுத்து உள்ளது.
கடந்த மாதம் இந்து கோவில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போதும் அனுமதி மறுத்து, கைது செய்து வழக்கு பதிவு செய்தது.
ஜனநாயகத்தை மதிக்காத திமுக ஆட்சியின் அவலத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறது இந்து முன்னணி. திமுகவின் ஜனநாயக விரோத செயலை புரிந்துகொண்டு, ஜனநாயக வழியில் போராட இந்திய அரசியல் சாசனம் கொடுத்துள்ள உரிமையை நீதிமன்றம் நிலைநாட்டும் என்று நம்புகிறோம்.
மதவெறி வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிரை மானத்தை பாதுகாத்து கொள்ள எல்லை தாண்டி வரும் நமது பூர்விக உறவான இந்துகளை மத்திய அரசு அன்பாக, இரு கைகளால் அரவணைக்க வேண்டும். மேலும் தற்காலிக/அவசர தீர்வாக பங்களாதேஷ் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.