ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அறிவித்து, த.பெ.தி.க., அரியலுார் மாவட்ட தலைவர் கோபால ராமகிருஷ்ணன் என்பவர், முகநுாலில் அருவருக்கத்தக்க வகையில் இழிவுபடுத்தியும், தேச ஒற்றுமைக்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை முன்னிறுத்தியும் பதிவிட்டிருந்தார்.
அந்த கொடுஞ்செயலுக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு வந்தபோதும், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மக்கள் மனநிலை அறிந்து ஹிந்து முன்னணி பொறுப்பாளர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால், வழக்கு பதியவில்லை.
இது குறித்து கேட்ட போது, ‘அது அவருடைய கருத்து சுதந்திரம்’ என்று சொல்கின்றனர். பல்லாயிரம் பேர் ரத்தம் சிந்தி, இன்னல்கள் பட்டு போராடி பெற்ற சுதந்திரத்தை இழிவுபடுத்துவது, எந்த வகையிலும் கருத்து சுதந்திரம் ஆகாது.
இப்பிரச்னைக்காக ஆர்ப்பாட்டம் அறிவித்தோம். ஆனால், போலீசார் அனுமதி மறுத்து, பொறுப்பாளர்களை கைது செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். சுதந்திரத்தை இழிவு செய்பவர்களை வேடிக்கை பார்ப்பதும், நடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதும், தேசத்தை அவமதிக்கும் செயல். எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.