புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்ரமணிய சுவாமி கோயில் அடிவாரத்தில் வைக்கப்பட்டிருந்த 20 சிலைகளை உடைத்து சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் விராலிமலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கோயிலுக்கு செல்லும் வழியெங்கும் சிவபெருமான், விநாயகர், முருகன் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டு அழகாக காட்சியளித்தது. இந்நிலையில் தற்போது அந்த சிலைகளை மர்ம நபர்கள் முழுவதுமாக அடித்து சேதப்படுத்தியுள்ளது பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிலைகளுக்கு அருகே யாரும் செல்ல முடியாதபடி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.