ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவரும் முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் புரவலருமான இந்திரேஷ் குமார், ‘வெறுப்புப் பேச்சு என்பது ஊழலை போன்றது. எந்த ஒரு சமூகம் அல்லது அமைப்புக்கு எதிராகவும், வெறுப்பை துாண்டும் வகையில் பேசக் கூடாது. அதனை நியாயப்படுத்தவும் கூடாது. ஹரித்வாரில் நடந்த ‘தர்ம சன்சத்’ மாநாட்டில், சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் சிலர் பேசியது கண்டனத்துக்குரியது. மஹாத்மா காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தொடர்பு உள்ளதற்கான ஒரு ஆதாரமும் வெளியாகவில்லை. காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தொடர்பில்லை என நீதிமன்றமே தெரிவித்துவிட்டது. ஆனாலும் அதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தொடர்புப்படுத்தி காங்கிரஸ் கட்சியினர் 70 ஆண்டுகளுக்கு மேலாக பேசி வருகின்றனர். காந்தியை ஹிந்துத்துவவாதிகள் கொன்றனர் என, காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறியதும் வெறுப்புப் பேச்சு தான். இப்படி வெறுப்புப் பேச்சு பேசுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு அமைப்பின் மீது வெறுப்பை ஏற்படுத்தும் நோக்கில் பேசும் காங்கிரஸ் கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறினார்.