முதல்வர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதான மாணவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, பா.ஜ.,வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., நிர்வாகிகள், தமிழக கவர்னரை சந்தித்து மனு அளித்தனர்.
மாணவி லாவண்யா மரணத்துக்கு நீதி கோரி, ஏ.பி.வி.பி., என்ற பா.ஜ.,வின் மாணவர் அமைப்பினர், இம்மாதம் 14ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் தொடர்ச்சியாக, நாடு முழுதும் ஏ.பி.வி.பி., அமைப்பினர், தமிழக அரசுக்கு எதிராக, போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று ஏ.பி.வி.பி., அமைப்பின் தேசிய செயலர் ஆசிஷ் சவுகான், இணை செயலர் பாலகிருஷ்ணா, மண்டல செயலர் குமரேஷ் ஆகியோர், தமிழக கவர்னர் ரவியை, அவரது மாளிகையில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.