பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.,வை சேர்ந்த விஜயகுமார் சின்ஹா சபாநாயகராக பதவி வகிக்கிறார்.பீஹாரின் லக்ஹிசராய் மாவட்டத்தை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பா.ஜ., ஆதரவாளர்கள் இருவரை கடந்த மாதம் கைது செய்தார்.கொரோனா கட்டுப்பாடுகளை மீறி கலாசார நிகழ்ச்சி நடத்தியதாக இவர்கள் மீது புகார் கூறப்பட்டது. கைது நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரியை பணியிட மாற்றம் செய்யுமாறு பா.ஜ., தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதை முதல்வர் நிதிஷ் குமார் கண்டுகொள்ளவில்லை.இந்த விவகாரம் பீஹார் சட்டசபையில் சமீபத்தில் வெடித்தது. சபாநாயகருடன் முதல்வர் நிதிஷ் குமார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இந்நிலையில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியின் பணியிட மாற்ற உத்தரவில் முதல்வர் நிதிஷ் குமார் கையொப்பமிட்டார்.