உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு வாக்களித்ததற்காக நஜ்மா உஸ்மா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நஜ்மா உஸ்மா, “மார்ச் 10 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.கவுக்கு வாக்களித்ததை எனது குடும்பத்தினரிடம் பெருமையாக வெளிப்படுத்தினேன். இது சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களித்த எனது கணவர் முகமது தயாப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர்கள் என்னை தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றினர். எனது கணவர் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்து விடுவதாக மிரட்டினார். முத்தலாக் வழக்கில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உதவியை நாடுமாறு பரிகாசம் செய்தனர்” என தெரிவித்தார். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஃபர்ஹத் நக்வி விடுத்துள்ள கோரிக்கையில், “நஜ்மாவின் குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் முஸ்லிம் பெண்களுக்கும் தாங்கள் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் பெண்களின் உரிமைகளைப் பறிக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு வாக்களிக்கும் உரிமைகூட இல்லை என்பது மிகவும் வெட்கக்கேடானது” என்று கூறினார்.