ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, 2019 ஆக., 5ல் ரத்து செய்யப்பட்டது. இதன் பின், பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, பிரதமர் மோடி, ஜம்மு – காஷ்மீருக்கு முதல் முறையாக சென்றார். அங்கு, கிஷ்த்வாரில் உள்ள செனாப் ஆற்றில், 9,800 கோடி ரூபாயில், இரு நீர்மின் திட்டங்களுக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதை, அண்டை நாடான பாகிஸ்தான் வெளியுறவுத் துறை விமர்சனம் செய்து புலம்பி உள்ளது. இது தொடர்பாக, அவர்கள் தரப்பில் வெளியான அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடியின் காஷ்மீர் பயணம், அங்கு இயல்பு நிலை திரும்பி இருப்பதாக காட்டிக்கொள்ளும் மற்றொரு முயற்சியாகும். அங்கு, நீர்மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது, 1960ம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நேரடியாக மீறுவதாக உள்ளது. இந்த நீர் மின் திட்டங்களால், பாக்.,கிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். காஷ்மீரில் உள்ள மக்களின் சுய உரிமை மீட்பு போராட்டங்களுக்கு, பாக்., தொடர்ந்து ஆதரவு அளிக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.