விவசாயத்தை லாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற வேண்டும்

0
158

பாரதிய கிசான் சங்கம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், பாரதிய வேளாண் பொருளாதார ஆராய்ச்சி மையம் இணைந்து, விவசாயம் தொடர்பான கருத்தரங்கை நடத்தின. டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே பேசுகையில், “இது மிகவும் முக்கியமான பிரச்னை. இது குறித்து தீவிரமாக ஆராய வேண்டும். தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்களின் விலை உயர்ந்தால், அதை ஏற்பதற்கு மக்கள் தயாராக உள்ளனர். அதே நேரத்தில் மிகவும் அடிப்படையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றின் விலை உயர்வதை மக்கள் விரும்பவில்லை. விலைவாசி மற்றும் உணவு பொருட்களின் விலைக்கு இடையேயான தொடர்பு குறித்து தீவிரமாக ஆராய வேண்டும். உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை கட்டுபடியாகும் விலையில் கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். கடந்த 75 ஆண்டுகளில் வேளாண் துறையின் வளர்ச்சி, நாம் பெருமைப்படக்கூடிய வகையில் உள்ளது. உணவு பொருட்களுக்கு கையேந்தும் நிலையில் இருந்த நாம், தற்போது ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளோம். அதே நேரத்தில் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். விவசாயத்தை மக்கள் நாடும் வகையில் அதில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் படையெடுப்பதை தடுக்க முடியும். மழை போன்ற இயற்கை இடர்பாடுகளை சந்திக்கும் விவசாயிகள், இடுபொருட்கள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயத்தை லாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற வேண்டும். சமூகத்திலும் அவர்களுக்கு சரியான அந்தஸ்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சிறிய சிறிய விழாக்களுக்கு வழக்கறிஞர்கள், பள்ளி தலைமையாசிரியர்களை அழைக்கின்றனர். ஆனால், விவசாயிகளை அழைப்பதில்லை. இந்த போக்கு மாற வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுவதாக இருந்து விடக்கூடாது” என்று பேசினார். ‘அமுல்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சோதி, விலைவாசி மற்றும் உணவு பொருட்களின் விலைக்கு இடையேயான தொடர்பு குறித்து இந்நிகழ்ச்சியில் விளக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here