யு.என்.சி.டி.ஏ.டி உலக முதலீட்டு அறிக்கை 2022ன்படி, கடந்த நிதியாண்டில் பாரதத்தின் அந்நிய நேரடி முதலீட்டு பங்கு வரத்துகள் பட்டியலில், அதிகபட்சமாக சிங்கப்பூர் (27.01%), அமெரிக்கா (17.94%), மொரிஷியஸ் (15.98%), நெதர்லாந்து (7.86%) மற்றும் ஸ்விட்சர்லாந்து (7.31%) நாடுகளில் இருந்து கிடைத்துள்ளன. அந்நிய நேரடி முதலீட்டு வரத்துகளின் சர்வதேச நிலவரத்தில் 2021ம் ஆண்டிற்கான முதல் 20 பொருளாதாரங்களுள் பாரதம் ஒரு இடம் முன்னேறி 7ம் இடம் வகிக்கிறது. உற்பத்தித் துறையில் அந்நிய முதலீடுகளுக்கு உகந்த நாடாக பாரதம் வேகமாக வளர்ந்து வருகிறது. பெருந்தொற்று மற்றும் சர்வதேச சூழல்களுக்கு இடையேயும் கடந்த ஆண்டின் முதலீட்டு வரத்துகளை விட நிதியாண்டு 21-22ல் 84,835 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற வகையில் மிக அதிகபட்ச வரத்துகள் பாரதத்துக்கு கிடைத்துள்ளது. இதில், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் முதலிடத்திலும் அடுத்ததாக சேவைகள் துறை, வாகனங்கள் துறை, வணிகம் மற்றும் உள்கட்டமைப்பு, ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரையில் கடந்த நிதியாண்டில் கர்நாடகா முதலிடத்திலும், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ஹரியானாவில் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.