1. தஞ்சாவூர் மாவட்டம், திருமருகல் என்ற ஊரில் ஆகஸ்ட் 27, 1898 ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர், பாலசுப்பிரமணியம். இவர் பிறந்த சில நாட்களிலேயே தந்தை இறந்ததால், தாய், குழந்தையுடன் நாகஸ்வர கலைஞரும், தன் சகோதரருமான நடேசப்பிள்ளையின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அவருக்கு குழந்தை இல்லை என்பதால் இந்தக் குழந்தையையே தத்து எடுத்துக்கொண்டார். ‘ராஜரத்தினம்’ என்ற புதிய பெயரைச் சூட்டி வளர்த்தார்.
2. சித்தப்பா கதிரேசன் பிள்ளையிடமும், திருக்கோடிக்காவல் கிருஷ்ண அய்யர், கோனேரிராஜபுரம் வைத்தியநாத அய்யர், கண்ணுச்சாமி பிள்ளை ஆகியோரிடமும் நாகஸ்வரம் வாசிக்கக் கற்றுக்கொண்டார். நாகஸ்வர இசையில் நிபுணத்துவம் பெற்றார். ஆரம்ப நாட்களில் திருவாடுதுறை கோயிலில் வாசித்து வந்தார்.
3. பின்னர் திருவாடுதுறை ஆதீன வித்வானாக நியமிக்கப்பட்டார். இவரது முதல் நாகஸ்வர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. ரசிகர்கள் மெய்மறந்து கேட்டனர். முதல் கச்சேரியே அபாரமான வெற்றி. அதன் பின் பல இடங்களில் கச்சேரிகள் நடைபெற்றன.
4. ‘சங்கீத அகாடமி விருது’, ‘அகில உலக நாகஸ்வர சக்ரவர்த்தி’ உள்ளிட்ட ஏராளமான பட்டங்களும் விருதுகளும் பெற்றுள்ளார். இந்தியா சுதந்தரம் அடைந்த நள்ளிரவில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் இவரது மங்கல இசை ஒலித்தது.
5. காஞ்சி பரமாச்சாரியரிடம் பக்தி கொண்டவர். ஒருமுறை மாயவரம் சென்று கொண்டிருந்தபோது தொலைவில் சுவாமிகள் பட்டனப் பிரவேசம் வருவதை அறிந்தார். உடனே காரிலிருந்து இறங்கி தெருவோரத்தில் நின்றுகொண்டு நாயனம் வாசிக்கத் தொடங்கினார்.
6. இசை ஒலித்ததைக் கேட்டவுடனேயே பரமாச்சாரியார் ‘ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே’ என்று கூறி அங்கே போகுமாறு பல்லக்குத் தூக்கிகளிடம் உத்தரவிட்டார். ஒன்றரை மணி நேரம் இவர் வாசிக்க, மாயவரம் நகரமே அங்கே கூடிவிட்டது. பரமாச்சார்யார் மெய்மறந்து கேட்டு ரசித்துவிட்டு, அவருக்கு சாத்துக்குடி பழத்தை ஆசிர்வாதமாக வழங்கினார். அதை பக்தியுடன் பெற்றுக்கொண்டு ‘இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது’ என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினாராம்.
7. ஏவி.எம். செட்டியார், பல மணி நேரம் இவர் இசைத்த ‘தோடி’ ராகத்தைப் பதிவு செய்து ஆறரை மணி நேர இசைத்தட்டை வெளியிட்டார். இது உலகம் முழுவதும் விற்பனையாகி சாதனை படைத்தது. ஈடுஇணையற்ற நாகஸ்வரக் கலைஞர் என்று போற்றப்பட்ட டி.என். ராஜரத்தினம் பிள்ளை 1956-ல் 58-ம் வயதில் மறைந்தார்.