மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம், 150 வருடங்களுக்கு பிறகு நடைபெற்றது. இங்கு ஏழு விஸ்வநாதர் கோவில்கள் அமைந்துள்ளன.
காவிரி ஆற்றின் தென்கரையில் அகஸ்தியரால் வழிபாடு செய்யப்பட்ட தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோயிலில் ஆக்கிரமிப்புகள் காரணமாக பொதுமக்கள் வழிபட முடியாத நிலைமை இருந்து வந்தது. தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு 150 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை ஒட்டி காவிரியில் இருந்து யானை மேல் தீர்த்த குடங்களில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு புனித கடங்களில் நிரப்பப்பட்டது. தொடர்ந்து 14 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு 35 சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.கொட்டும் மழையில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சிகள், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.