வறுமை, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு என நம்முன் பூதாகரமான சவால்கள் இருக்கின்றன என ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் சார்பு இயக்கமான ஸ்வதேசி ஜாகர்ன மஞ்ச் ஏற்பாடு செய்திருந்த வெபினார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தத்தாத்ரேயா, “வறுமை, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு என நம்முன் ஏராளமான பூதாகர சவால்கள் இருக்கின்றன. நாட்டில் 20 கோடிக்கும் மேலோனோர் ஏழ்மை நிலையில் இருக்கின்றனர். வறுமை ஓர் அசுரன் போல் நிற்கிறது. அந்த வறுமையை நாம் வீழ்த்த வேண்டும்.
23 கோடிக்கும் மேற்பட்டோர் அன்றாடம் ரூ.275 மட்டுமே சம்பாதிக்கின்றனர். நாட்டில் 4 கோடி பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். அதாவது 7.6% பேர் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கின்றனர். வேலைவாய்ப்பின்மை, கல்வியறிவு இன்மை, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதாரமான குடிநீர் இல்லாதது மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன. உள்நாட்டுப் பிரச்சினைகளும் வறுமைக்கு ஒரு அடித்தளமாக இருக்கிறது. ஆங்காங்கே அரசாங்கங்களின் திறமையின்மையும் வறுமைக்கு காரணம்” என்றார்.