ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் மாதத்துக்கு ஒரு உறுப்பு நாடு தலைமை வகிக்கும்.அவ்வகையில் டிசம்பர் மாதத்துக்கு பாரதம் தலைமை தாங்குகிறது.இதனை முன்னிட்டு வரும் 14, 15 ஆகிய தேதிகளில் இரண்டு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதங்களை பாரதம் நடத்தவுள்ளது.இதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமை தாங்குகிறார். இந்நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஐ.நா சபையில், வரும் 15ம் தேதி ‘சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு அணுகுமுறை கொள்கைகள் மற்றும் முன்னோக்கிய பாதை’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஐ.நாவுக்கான பாரதத் தூதர் ருச்சிரா கம்போஜ், ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில், “கடந்த 2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வர்த்தக மைய கட்டடத்தை பயங்கரவாதிகள் விமானம் மூலம் தகர்த்தனர்.பிறகு லண்டன், மும்பை, பாரிஸ் என பல பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. பயங்கரவாதிகளுடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுபவர்கள், நிதியுதவி செய்பவர்கள் என பலரும் சர்வதேச அளவில் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனர். இதனை தடுத்து முறியடிக்க அனைத்து ஐ.நா உறுப்புநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.அப்போதுதான் சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தலை தோற்கடிக்க முடியும்.பயங்கரவாதத்தை எந்த ஒரு குறிப்பிட்ட இனம், மதம், நாடு என தொடர்புபடுத்த முடியாது.பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதைத் தடுக்க வேண்டும், கண்டிக்க வேண்டும்.அரசியல் காரணங்களுக்காக பயங்கரவாதிகளை நல்லவர்கள், கெட்டவர்கள் என வகைப்படுத்தும் நடவடிக்கைகள், பயங்கரவாதத்துக்கு எதிரான போரை நீர்த்து போகச் செய்துவிடும்.எனவே இதனை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.