நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் கொல்கத்தாவில் விழா நடைபெற்றது. விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், அம்மாநில பா.ஜ.க தலைவர் சுகந்த மஜும்தார், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய மோகன் பாகவத், ”நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு நாம் கடமைபட்டவர்கள். சுதந்திரப் போராட்டத்திற்காக அவர் ஆற்றிய மிகப்பெரிய பங்களிப்பிற்காக மட்டுமல்ல, அவருடைய பண்புகளை நாம் உள்வாங்கிக் கொள்வதை உறுதிசெய்வதற்காகவும் ஆர்.எஸ்.எஸ் அவரை நினைவுகூருகிறது. அவர் கட்டமைக்க நினைத்த பாரதம் என்ற அவரது கனவு இன்னும் நிறைவேறவில்லை. அதை அடைய நாம் உழைக்க வேண்டும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் சத்தியாகிரகப் போராட்டங்களில் பங்கேற்றார். ஆனால், தேசம் சுதந்திரம் அடைவதற்கு அதுமட்டுமே போதுமானது அல்ல என்பதை அவர் உணர்ந்தார். இதையடுத்தே, சுதந்திரத்திற்கான தனது பாதையை அவர் தேர்ந்தெடுத்தார். காங்கிரசின் பாதையும் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பதையும் வேறானது. என்றாலும், நோக்கம் ஒன்று தான். சுபாஷ் சந்திரபோசின் இலக்குகளும் ஆர்.எஸ்.எஸ் கொண்டிருக்கும் இலக்குகளும்கூட ஒன்றுதான். உலகின் சிறிய வடிவம்தான் பாரதம். உலகிற்கு பாரதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நேதாஜி கூறியிருந்தார். அதை நோக்கி நாம் அனைவரும் உழைக்க வேண்டும்” என தெரிவித்தார்.