பாரதத்தின் உச்ச நீதிமன்றத்தின் 73வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற விழாவில் சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், பாரத வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுந்தரேஷ் மேனன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், “உலகிலேயே மிகவும் பரபரப்பானது பாரதத்தின் உச்ச நீதிமன்றம். அதன் நீதிபதிகள் கடுமையாக உழைக்கின்றனர். பொதுமக்களின் நலனை மையமாகக் கொண்டு நீதி வழங்க முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நீதிமன்றங்கள் என்பது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை மட்டும் உள்ளடக்கியது அல்ல. அது, மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களையும் உள்ளடக்கியது. எனவே, நீதிமன்றங்களில் அவர்கள் தங்களது வாதத்தை சுதந்திரமாக எடுத்துரைப்பதற்கான சூழல் நிலவுவதை அவர்கள் உணர வேண்டும். தற்போதைய சிக்கலான வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் நீதிமன்றங்கள் பாரம்பரிய நடைமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க முடியாது. புதிய வழிமுறைகளுக்கு மாற வேண்டும். இல்லையெனில் நீதி வழங்குவதில் பின்னடைவு ஏற்படும். எனவே, மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நீதித்துறையினர் அவ்வப்போது பயிற்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நீதித் துறையை பொருத்தவரை நம்பிக்கையின்மை முக்கிய சவாலாக உள்ளது. எதற்காகவும் நீதிமன்றங்கள் தங்கள் சட்டப்பூர்வ தன்மையை இழக்கக் கூடாது. நீதிமன்ற தீர்ப்புகள் சட்டத்தின் அடிப்படையில் மக்கள் ஏற்கக் கூடியதாக இருக்க வேண்டும்” என கூறினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசுகையில், “பாரத மக்களின் தினசரி வாழ்க்கைப் போராட்டத்தின் வரலாறு தான் உச்ச நீதிமன்றத்தின் வரலாறு. மக்களை அநீதியிலிருந்து பாதுகாப்பது உச்ச நீதிமன்றத்தின் பணி. வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உச்ச நீதிமன்றத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 12,108 வழக்குகள் பதிவாகி உள்ளன. அதேநேரம் நீதிபதிகள் 12,471 வழக்குகளை முடித்து வைத்துள்ளனர்” என தெரிவித்தார்.