திருமாலின் அடியவராய்த் திகழ்ந்த பார்க்கவ முனிவருக்கும் கனகாங்கி என்னும் தேவமங்கைக்கும் திருமழிசை என்ற ஊரில் பெருமாளின் சுதர்சன சக்கரத்தின் அம்சமாய் அவதரித்தவர் திருமழிசையாழ்வார்.
கை, கால்கள் இன்றிப் பிறந்ததால் பெற்றோர் இக்குழந்தையை ஒரு பிரம்புப்புதரின் கீழ் போட்டுவிட்டுச் செல்ல, பிறகு பெருமாளின் அருளால் உறுப்புகள் வளர்ந்து, பசி மிகுதியால் அழுத போது திருமகளே பாலமுது தந்தார்.
திருமழிசையில் தோன்றியதால் ‘திருமழிசையாழ்வார்’ என்ற பெயர் பெற்ற இவருக்குப் ‘பக்திசாரர்’, ‘மழிசைப் பிரான்’ என்ற திருநாமங்கள் உண்டு. ‘பிரான்’ என்ற சொல் பெருமாளை குறிக்கும். ஆழ்வார்களில் ‘பிரான்’ என்ற ஏற்றத்தை பெற்றவர் இவர் ஒருவரே.
திருமழிசையாழ்வாரின் பெருமையை உணர்த்தும் வகையில் பல கதைகள் கூறப்படுவதுண்டு. அவற்றுள் முக்கியமானது அவருடைய சீடன் கணிகண்ணன் பற்றி கதை.
களிக்கண்ணன் பல்லவ மன்னனின் ஆணைப்படிக் கச்சியை விட்டு வெளியேறிய போது, திருமழிசை ஆழ்வாரின் பாட்டுக்கு ஏற்ப, பள்ளி கொண்டிருந்த பெருமாள் தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு இவர் பின் சென்றார். பிறகு மனம் வருந்தி மன்னன் மன்னிப்பு கேட்க, இவரது வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஊர் திரும்பினார்.