உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டம், நாராபத் பூர் கிராமத்தில் உள்ள ஹனுமான் கோயிலில் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஹனுமான் சிலையை சேதப்படுத்தினர். மேலும் அங்கிருந்த சிவலிங்கம், திரிசூலம் மற்றும் நந்தி சிலை ஆகியவையும் உடைத்து அகற்றினர். உண்டியலும் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு சென்ற பக்தர்கள், கருவறையில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் சிதைக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். கோயில் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை காவலர்கள் சமாதானம் செய்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். இதற்கு முன்னர், மேற்கூறிய சம்பவம் நடந்த இடத்திற்கு மிக அருகில் இருக்கும் திஹ் பாபா கோயிலில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நுழைந்து கோயில் உண்டியல்களை உடைத்து சுமார் 10 லட்ச ரூபாயை கொள்ளையடித்துள்ளனர். மேலும், கோயிலின் சிசிடிவியுடன் இணைக்கப்பட்டிருந்த டி.வி.ஆரையும் பிடுங்கிச் சென்றுவிட்டனர். கடந்த ஆண்டு, உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள திடாவி கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகளை சேதப்படுத்திய யாகூப் என்ற இளைஞரை உள்ளூர் மக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.