உத்திரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தின் நகலா சந்திரபான் என்ற கிராமத்தில் பிறந்தார். கங்காபுரில் ஆரம்பக் கல்வியும் பின்னர் ராஜகரில் பள்ளி மேல்படிப்பும் பயின்றார். கணிதத்தில் சிறந்த மாணவராக விளங்கினார். 1937-ல் இன்டர்மீடியட் தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இதனால் மேல்படிப்புக்காக கல்வி உதவித்தொகையும் பெற்றார்.
கான்பூர் எஸ்.டி. கல்லூரியில் சேர்ந்து, 1939-ல் பட்டம் பெற்றார். எம்.ஏ. படிப்பதற்காக ஆக்ரா சென்றார். பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார்.
அரசு வேலைக்கான தேர்வு எழுதப்போன சமயத்தில் வேட்டி, குர்தா, தலையில் தொப்பி சகிதம் சென்ற இவரைப் பார்த்து சிலர் ‘பண்டிட்ஜி’ என்று கிண்டலாக அழைத்தனர். ஆனால் அதுவே பின்னாளில் இவரது பெயருடன் நிலைத்துவிட்டது.
இந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் திறம்பட எழுதக்கூடியவர். இந்தியில் மிகவும் பிரபலமான ‘சந்திரகுப்த மவுரியா’ என்ற நாடகத்தை ஒரே மூச்சில் எழுதிவிட்டார். தேசிய விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்க ‘ராஷ்ட்ர தர்ம’ என்ற மாத இதழை 1940-ல் லக்னோவில் தொடங்கினார். பின்னர் ‘பாஞ்சஜன்யா’ என்ற வார இதழையும் ‘சுதேசி’ என்ற நாளிதழையும் தொடங்கினார்.
1942-ல் ‘ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்’ சங்கத்தில் இணைந்து அதன் முழு நேர ஊழியராகப் பணியாற்றினார். ‘ஏகாத்மா மானவவாத்’, ‘லோகமான்ய திலக் கீ ராஜநீதி’, ‘ஜனசங் கா சித்தாந்த் அவுர் நீதி’, ‘ஜீவன் கா த்யேய’, ‘ராஷ்ட்டிர ஜீவன் கீ சமஸ்யாயே’, ‘பேகாரி கீ சமஸ்யா’ உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
இவரது செயல்கள், படைப்புகள், பேச்சுகள் அனைத்திலும் தேசியமே நிறைந்திருந்தது. இந்தியாவை உலக அரங்கில் உயர்த்த வேண்டும் என்ற நோக்குடன் எப்போதுமே செயல்படுவார். வீடு, குடும்பம் இவற்றைவிட தேச சேவையையே முக்கியமாக கருதினார்.
தற்கால விஷயங்கள் குறித்து ‘பொலிடிகல் டைரி’ என்ற தலைப்பில் எழுதி வந்தார். 1951-ல் சியாம் பிரசாத் முகர்ஜி, பாரதீய ஜனசங்க கட்சியை நிறுவியபோது இவர் அதன் பொதுச் செயலராக செயல்பட்டார்.
‘இரண்டே இரண்டு தீனதயாள்கள் இருந்தால் போதும், இந்தியாவின் அரசியல் முகமே மாறிவிடும்’ என்று சியாம் பிரசாத் இவரைப் பற்றிக் கூறுவார். அவர் மறைந்த பின் ஜனசங்க கட்சியின் தலைவரானார்.
தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமூகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்டிருந்த பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 1968-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார்.