ஜி. டி. பிர்லா என்றறியப்படும் கன்சியாம் தாசு பிர்லா இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலம் சூனு மாவட்டத்திலுள்ள பிலானி எனும் சிறுநகரில் 1894 ஏப்ரல் 10-ம் நாள் பிறந்தார். உள்ளூரிலேயே ஒரு ஆசிரியரிடம் எண் கணிதம் மற்றும் ஆரம்பக் கல்வியை கற்றார். தந்தை வியாபாரி என்பதால் அவரது உதவியுடன் கல்கத்தா சென்று வியாபார உலகில் அடியெடுத்து வைத்த ஜி. டி. பிர்லா, அவரது குடும்ப தொழிலான தரகு வியாபாரம் செய்தார். சணல் தொழிற்சாலையைத் தொடங்கினார். வியாபாரம் அசுர வளர்ச்சி கண்டது. 1919-ல் உலகப் போர் முடிந்தவுடன் பிர்லா அண்டு பிர்லா லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கினார். அதே ஆண்டில் குவாலியரில் சவுளி ஆலை தொடங்கினார். இது ரயான் என்கிற சிந்தடிக் ஆடைகள் பிரபலமடைய காரணமாக இருந்தது. பாரம்பரியமான வட்டிக்கடை வியாபாரத்திலிருந்து பருத்தி வியாபாரத்துக்கு மாறினார். புதிய தொழிலைச் செம்மையாகச் செய்வதற்காக, சொந்த ஊரான இராஜஸ்தானிலுள்ள பிலானியிலிருந்து, மேற்கு வங்கத்தின் தலைநகரான கல்கத்தாவுக்குப் போய்த் தங்கி வியாபாரத்தில் நல்ல லாபம் கண்டார். 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஜி.டி.பிர்லாவால் தொடங்கப்பட்ட நவீன தொழில்கள்தான் இன்றும் பிர்லா குழுமங்களின் “பெருநிறுவன’ (Corporate) கழகங்களாக வளர்ந்துள்ளன. தொழிலதிபர்களுடன் இணைந்து 1927-ல் மத்திய வர்த்தக மற்றும் தொழில் கழகத்தைத் தொடங்கி, அதன் தலைவராகவும் பதவியேற்றார். 1932-ல் காந்தியடிகள் தொடங்கிய அரிசன் சேவக் சங் என்ற அமைப்பின் தலைவரானார்.