இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.இங்கு வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து செயல்படும்விதத்தில் ‘சூரத் வைர பங்குச்சந்தை’ என்ற மகா பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.சூரத் வைர நகரில், 35 ஏக்கர் நிலப்பரப்பில், தலா 15 மாடிகளை கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை இணைக்கும் முதுகெலும்பு போல ஒரு மைய கட்டிடம் அமைந்திருக்கிறது.இந்த அலுவலக கட்டிட வளாகத்தின் மொத்த தள பரப்பளவு 70 லட்சத்து 10 ஆயிரம் சதுரஅடி ஆகும்.சுமார் 80 ஆண்டுகளாக உலகிலேயே மிகப் பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த பென்டகனை சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தியுள்ளது.