தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பழங்கால சிலைகள் மற்றும் கலைப் பொருட்கள் குறித்து, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில், 2008 நவம்பரில், லுயிஸ் நிக்கல்சன் என்பவர், இணையதளத்தில் கட்டுரை ஒன்றை பதிவேற்றி உள்ளார். அதில், தமிழக கோவிலில் இருந்து கடத்தப்பட்ட, குழந்தை கிருஷ்ணர், காளிங்கன் என்ற பாம்பின் மேல் நடனமாடும் நிலையில் உள்ள, கலிய கல்கி எனும், கலிய மர்த்தன கிருஷ்ணர் உலோகச் சிலையின் படம் இடம்பெற்று இருப்பதை அறிந்தனர். கலிய மர்த்தன கிருஷ்ணர் உலோக சிலையை, அமெரிக்காவை சேர்ந்த சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் என்பவரிடம் இருந்து, 2005ம் ஆண்டு, 6.20 கோடி ரூபாய்க்கு வாங்கியதும்; பிற்கால சோழர்கள் காலமான, 11 – 12ம் நுாற்றாண்டை சேர்ந்தது என்பதும் தெரியவந்துள்ளது. சுபாஷ் சந்திர கபூர் தன் கூட்டாளிகள் வாயிலாக, சிலையை அமெரிக்காவுக்கு கடத்திச் சென்றதை போலீசார் உறுதி செய்துள்ளனர். எந்த கோவிலுக்கு சொந்தமானது என்று விசாரித்து வருகின்றனர். சிலை, அமெரிக்காவில் அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பதை, போலீசார் உறுதிபடுத்தி உள்ளனர். சிலை மீட்பதற்கான முயற்சியில், ஐ.ஜி., தினகரன் தலைமையிலான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.