தத்தோபந்த் தெங்கடி1920 நவம்பர் 10-ல் அன்றைய மராட்டியத்தின் வார்தா மாவட்டத்தில் ஆர்வி கிராமத்தில் பிறந்தார். தேசத்தின் சமூக, அரசியல், கலாசாரச் சூழலில் மாற்றம் நிகழ்த்திய பாரதீய சிந்தனையாளர்களுள் முதன்மையானவர். எம்.ஏ., எல்.எல்.பி. பட்டம் பெற்ற பின், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் இணைந்து,முழுநேர ஊழியரானார். ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர்கள் பிரசாரகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் குடும்ப வாழ்வைத் தியாகம் செய்து, வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக இருக்கிறார்கள். தெங்கடி அவர்களும் 1942 முதல் இறக்கும் வரை (2004) ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரசாரகராகவே, 62 ஆண்டுகள் இருந்தார். தெங்கடி மிகச் சிறந்த செயல்வீரர். தன்னுடன் பழகுவோரை ஈர்ப்பதுடன், அவர்களையும் சமூகப்பணியில் ஈடுபடுத்தும் ஆற்றலும் கொண்டவர். அவரது திறமையை உணர்ந்த RSS இன் இரண்டாவது தலைவர் குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர், அவரை சங்கத்தின் சிந்தனைகள் பிற துறைகளில் பரவுவதற்கான பணிகளில் ஈடுபடுமாறு பணித்தார். அதையேற்று தொழிலாளர்களை ஒன்றுபடுத்த, 1955-ல் பாரதீய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.)நிறுவினார். இன்று உலக அளவில் புகழ் பெற்றதாகவும், தேசிய அளவில் அதிக உறுப்பினர்களைக் கொண்டதாகவும் பி.எம்.எஸ். வளர்ந்திருக்கிறது. அதற்கு முன்னதாகவே (1949) மாணவர்களுக்கான அமைப்பின் தேவையை உணர்ந்து அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) துவங்கப்பட்டது. அதன் நிறுவன உறுப்பினராக பால்ராஜ் மதோக், எஸ்.எஸ்.ஆப்தே ஆகியோருடன் செயல்பட்டார் தெங்கடி. இன்று தேசத்தின் முதற்பெரும் மாணவர் அமைப்பாக ஏ.பி.வி.பி. உள்ளது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் நலனுக்காக அவர் 1979-ல் பாரதீய கிசான் சங்கத்தை நிறுவினார். அதேபோல, நாட்டின் பொருளாதார சிந்தனை சுதேசிமயமாக வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்வதேசி ஜாக்ரண் மஞ்ச் அமைப்பை 1991-ல் நிறுவினார்.