1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்திய ராணுவத்துக்கு கிடைத்த வெற்றியின் நினைவாகவே விஜய் திவாஸ் ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் எனும் தேசம் உருவாக இந்திய ராணுவம் காரணமாக அமைந்தது. இதே நாளில், வங்கதேசத்தில் பிஜோய் திவாஸ் என்ற பெயரில், ராணுவ வீரர்களின் துணிச்சல், வீரம், தியாகம் ஆகியவற்றை போற்றும் விதத்தில் கொண்டாடப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் மேஜர் ஜெனரல் கவுரவ் கவுதம் மரியாதை செலுத்தினர். டில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, கடற்படைத் தளபதி ஆர்.ஹரிகுமார், இந்திய விமானப்படையின் துணைத் தளபதி ஆகியோர் தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.