பாங்காக், சீன எல்லையில் உள்ள முக்கிய நகரத்தை, மியான்மரின் இனப்போராட்ட ஆயுதக் குழு கைப்பற்றியுள்ளதால், இரு நாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நம் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி, 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. அதற்கு அடுத்த ஆண்டே, தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி, ஆட்சியை கவிழ்த்த ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு பரவலாக ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. கோகாங் இன மக்களின் மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணி ராணுவம், மேலும் இரு புரட்சிக் குழுக்களான அராக்கன் ராணுவம், தாங் தேசிய விடுதலை ராணுவம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து வருகிறது. நம் நாட்டின் எல்லை பகுதியை ஒட்டியுள்ள சில பகுதிகளை, கடந்த மாதம் இந்தக் குழு கைப்பற்றியது. இந்நிலையில், ஷான் மாகாணத்தின் வடக்கு பகுதியில், சீன எல்லையில் அமைந்துள்ள லாக்கைங் டவுன்ஷிப்பை இந்த கூட்டணி கைப்பற்றியுள்ளது.