ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தீரர் சாவித்திரிபாய்புலே பிறந்த தினம் இன்று

0
233

சாவித்திரிபாய் புலே ஜனவரி 3,1831ஆம் ஆண்டு மகாராஷ்ட்ராவில் பிறந்தார். இவர் கல்வி வாய்ப்பில்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே பிறந்தார். ஜோதிபாய் புலே எனும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தீரர் இவரின் கணவர். அவர் இவருக்கு கல்வி பயிற்றுவித்தார். இவர் கற்றுத்தேர்ந்ததும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை தாங்களே பிள்ளைகளுக்கு தருவோம் என்று ஒரு பள்ளியை தொடங்கினார் ஜோதிபாய். அதில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்திரி ஆனார். தவித்த வாய்க்கு தீண்டத்தகாதவர் என சொல்லி தண்ணீர் மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது. அந்த மழிக்கும் பணியை செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்க செய்தார்.விதவை மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார் சாவித்ரிபாய் புலே. சாவித்திரிபாய் நல்ல கவிஞரும் கூட. மராத்தியத்தின் நவீன கவிதைப்போக்கு இவரில் இருந்தே துவங்குகிறது. இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி என்று பல்வேறு தளங்களில் அவரின் கவிதைகள் பயணித்தன.1852ல் இவர் தொடங்கி வைத்த ‘மஹிளா சேவா மண்டல்’ (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது. 1876-1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு கடுமையாக உழைத்ததோடு மக்களின் துயரங்கள் தீர்வதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் முன்வைத்தார். பல மையங்களில் ஜாதி வேற்றுமை பாராட்டி ஒடுக்கப்பட்ட என்று மறுக்கப்பட்ட நிலையில் இருவரும் இலவச உணவு பரிமாறினர்.மகாராஷ்ட்ராவை ப்ளேக் நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று பரவாமல் இருக்க கடுமையான ப்ளேக் சட்டங்களை போட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களை பிரித்து வைத்தது. மருத்துவம் படித்து ராணுவத்தில் வேலைபார்த்து கொண்டிருந்த இவரின் மகன் யஸ்வந்த் தென் ஆப்பிரிகாவில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரை ஹடாஸ்பூரில் ஊருக்கு வெளியே மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்திரி பாய்.தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து அறுபத்தி ஆறு வயதில் உயிர் காக்கப்போராடினார். வாழ்வே சேவையாகிப்போன சாவித்திரிபாய் புலே அவர்களின் பிறந்த நாள் இன்று.
#savitribaiphule #சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here