குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆணையை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று விவரிக்கப்பட்டுள்ளது.
அந்தச் சட்டத்தில் தற்போது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே அந்த திருத்தம்.
மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குடியுரிமை திருத்த சட்டம் இயற்றப்பட்டது. எனினும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விதிகள் அறிவிக்கப்படவில்லை. எனவே சட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் இந்த சட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆணையை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.குடியுரிமை கோரும் விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.