விஜயதசமி விழா பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் அவர்களின் உரையின் தமிழாக்கம்

0
127

இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர், மரியாதைக்குரிய Dr. கோபில்லில் ராதாகிருஷ்ணன் அவர்களே, மேடையில் வீற்றிருக்கும் விதர்ப ப்ராந்த மானனீய சங்கசாலக், மா. ஸஹ சங்கசாலக், நாக்பூர் மஹாநகர் மானனீய சங்கசாலக், மற்றுமுள்ள பிற அதிகாரிகளே! பொதுமக்களே, தாய்மார்களே, பெரியோர்களே! இன்றைய (கலியுகாப்தம் 5126) விஜயதசமி விசேஷ தினத்தில், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தனது பணியை துவக்கியதன் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கடந்தாண்டு இதே தினத்தில் நாம் மஹாராணி துர்காவதியை, அவரது ஒளிமயமான தியாக வாழ்வின் 500வது ஜெயந்தியை நினைவு கூர்ந்தோம். இந்த ஆண்டை, ராணி அஹில்யாபாய் ஹோல்கர் அவர்களின் 300வது பிறந்த ஆண்டாக கொண்டாடி வருகிறோம். ராணி அஹில்யாபாய் ஒரு திறமையான ஆளுமைமிக்க அரசி, மக்களின் நன்மைக்காகவே கடமையுணர்வு பூண்ட அரசி. தர்மம் – கலாச்சாரம் – தேசம் இவற்றின் மீது பக்தி பூண்டவர். ஒழுக்கத்தின் மேன்மையை லட்சியமாகக் கொண்டவர். மேலும் அரசியல் தந்திரம், போர்த்திறன் போன்றவற்றில் தீவிரமான அறிவுள்ள ராணி. இக்கட்டான எதிர்மறை சூழ்நிலையிலும் கூட அற்புதமான திறமையை வெளிக்காட்டி, நாட்டையும், வீட்டையும், சுயமாக காத்து, பாரதத்திற்கே உரிய பண்பின் அடிப்படையில், தனது ஆட்சி எல்லைக்கு வெளியிலும் கூட பல புனித ஆலயங்களையும் புனர்நிர்மாணம் செய்தார், பல புதிய ஆலயங்களையும் எழுப்பினார். அதன் மூலம் சமுதாயத்தில் சமத்துவம், பண்பாடு ஆகியவற்றை அவர் காப்பாற்றியது, மகளிர் சக்திக்கு இன்று வரை ஊக்கமளித்து வருகிறது. அத்துடன் அவரின் பணி, மாத்ருசக்தியின் திறமை மற்றும் தலைமைப் பண்பிற்கு ஒரு தலைசிறந்த உதாரணம்.

ஆர்ய சமாஜத்தின் நிறுவனர் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்த ஆண்டாகவும் இது விளங்குகிறது. அவர், நம் மக்கள் அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்காக, கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நமது ஒழுக்கம், பண்பாடு மற்றும் சமுதாய பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட சிதைவுகளை சீர் செய்து, சமுதாயத்திற்கு அதன் அடிப்படை ஆதாரம் எது என்று புரிய வைத்து, நிலை நிறுத்தினார். பாரதத்தின் எழுச்சி வரலாற்றின் உந்து சக்தியாக விளங்கியவர்களில் அவர் பெயர் பிரதான இடத்தில் இருக்கிறது.

ராம ராஜ்யம் போன்ற சூழலை உண்டாக்க மக்களின் குணம், ஒழுக்கம், சுயதர்மத்தில் உறுதி போன்றவை அவசியம். அவ்வாறான பண்புகளையும், சமுதாய பொறுப்பையும் எல்லோரிடத்திலும் ஏற்படுத்த சத்சங்கம் நடத்த, பூஜனீய ஸ்ரீ அனுகூல் சந்திர தாகூர் அவர்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இன்றைய வங்கதேசம் (அன்றைய வடக்கு வங்கம்) பாபனா என்ற இடத்தில் பிறந்த ஸ்ரீ அனுகூல் சந்திர தாகூர் ஹோமியோபதி மருத்துவர். தனது தாயின் மூலம் அத்யந்த சாதனா தீட்சை பெற்றவர். தனிப்பட்ட சொந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண தன்னை நாடி வருபவர்களிடம் இயல்பாக அவர் ஏற்படுத்திய மாற்றம், சேவை மனப்பான்மை போன்றவை பின்னாளில் சத்சங்கமாக மாறியது. பிறகு 1925-ல் ஒரு தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. 2024 – 25 ஆண்டில் அந்த சத்சங்கத்தின் தலைமையிடமான தேவ்கரில் (ஜார்கண்ட் மாநிலம்) அதன் நூற்றாண்டு கொண்டாடப்படவுள்ளது. சேவை, பண்பாடு மற்றும் முன்னேற்றம் உள்ளிட்ட பல முன்னெடுப்புக்களோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

வரும் நவம்பர் 15-லிருந்து பகவான் பிர்சா முண்டாவின் 150-ம் ஆண்டு துவங்குகிறது. பட்டியலின, மலைவாழ், பழங்குடியின மக்களை அந்நிய சக்திகளின் அடிமைத்தனம், சுரண்டல்கள் மற்றும் தாக்கத்திலிருந்து மீட்டு, இனத்தையும், பண்பாட்டையும் சுயதர்மத்தையும் பாதுகாக்க பாடுபட்ட, பகவான் பிர்சா முண்டாவை நினைவு கூர்வோம். தியாகமயமான அவரது வாழ்க்கை தான், பழங்குடியின மக்கள் தன்மான வளர்ச்சி, தேசியம் ஆகியவற்றில் பங்கேற்க முக்கிய காரணமாக அமைந்தது.

தனிப்பட்ட மற்றும் தேசிய ஒழுக்கம்

இவர்களைப் போன்று, சுயநலமின்றி, உறுதியோடு, தேசம், தர்மம், பண்பாடு மற்றும் சமுதாயத்தின் நன்மைக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்களை, நாம் அவர்களின் பொதுநல சேவைகளுக்காக மட்டும் நினைவுகூர்வதில்லை. மாறாக முன்னுதாரணமான வாழ்வை வாழ்ந்து, நமக்கெல்லாம் வழிகாட்டியிருக்கிறார்கள் என்பதற்காகவும் தான். வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு பகுதியில் பணியாற்றிய இத்தகைய மாமனிதர்களின் வாழ்வில் சில ஒற்றுமைகள் உள்ளன. பிறர் மீது வெறுப்பின்மை, பகையின்மை, பயமின்மை போன்றவை இவர்களது இயல்பாக இருந்துள்ளது. போராடும் கட்டாயம் எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அதை முழு ஆற்றலுடன், எதிர்த்துப் போராடினர். எனினும் ஒருபோதும் வெறுப்போ, பகைமையோ பாராட்டியதில்லை. அப்பழுக்கற்ற ஒழுக்கமே அவர்கள் வாழ்வின் இலக்கணமாக இருந்தது. அதன் காரணமாக தீயவர்களுக்கு அச்சுறுத்தலாகவும், நல்லவர்களுக்கு நம்பிக்கையளிப்பவர்களாகவும் இருந்தனர். நாமும் இன்றைய சூழ்நிலையில் அத்தகைய மனப்பாங்கைப் பெற முயற்சி செய்ய வேண்டும். சூழ்நிலை சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும், தனிமனித மற்றும் தேசிய ஒழுக்கத்தின் மீது அத்தகைய உறுதி கொண்டால், வலிமை மற்றும் வெற்றிக்கான அடித்தளமாக அது அமையும்.

தேசத்தின் முன்னே

இன்றைய காலம் மனித குலம் வேகமான போக்கு கொண்டதாகவும், உலகியல் வளர்ச்சியை நோக்கியும் வளரும் காலமாக உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வாழ்க்கையானது வசதிகள் நிரம்பியதாக ஆகி விட்டது. அனால் மறுபுறம் நமது சுயநலத்தால் ஏற்பட்ட குழப்பம், நம்மை வீழ்ச்சிப் பாதையில் தள்ளுகிறது. மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையேயான மோதல் இன்று எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்ற விஷயம் நம் அனைவருக்கும் தெரியும். நமது நாட்டிலும் நம்பிக்கைகள், லட்சியங்கள் ஆகியவற்றுடன் சவால்களும், பிரச்சனைகளும் நிரம்பிய சூழ்நிலையே காண முடிகிறது.

வழக்கமாக சங்கத்தின் விஜயதசமி உரையில் இந்த 2 விஷயங்கள் குறித்து இயன்ற அளவு விரிவாக விவாதிக்கப்படும். ஆனால் இன்று நான் சில சவால்களை பற்றி மட்டும் பேச விரும்புகிறேன். ஏனெனில் நம்பிக்கை மற்றும் லட்சியங்களை நிறைவேற்ற தேசம் எந்த திசையில் பயணிக்கிறதோ அது தொடரும். கடந்த சில ஆண்டுகளாக உலக அரங்கில் பாரதம் ஒரு சிறந்த வலிமையான, உறுதியான நாடாக நிலைபெற்றுள்ளதைப் பார்க்கிறோம். உலகம், நமது முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது. இயல்பாகவே பல துறைகளில் நம் பாரம்பரியம் மற்றும் உணர்வுகளின் இழையோடும், சிந்தனை பற்றிய மதிப்பு உயர்ந்துள்ளது. நமது “உலகமே ஒரு குடும்பம்” என்ற உணர்வு, சுற்றுசூழல் பற்றி நமது பார்வை, யோகா போன்றவற்றை உலகம் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டுள்ளது. சமுதாயத்தில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஸ்வ – (சுயம்) பற்றி பெருமிதம் கூடியுள்ளது. பல துறைகளில் மெதுமெதுவாக முன்னேறி வருகிறோம்.

ஜம்மு காஷ்மீரில் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேசத்தில் இளைஞர் சக்தி, மகளிர் சக்தி, தொழில் முனைவோர், விவசாயிகள், உழைப்பாளிகள், ராணுவ வீரர்கள், ஆட்சி அதிகாரம் – நிர்வாகம் போன்றவை அனைத்தும் ஒரு உறுதியுடன், கடமையுணர்வுடன் தங்களது பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள், இது நம்பிக்கையளிக்கிறது.

கடந்த ஆண்டுகளில் தேச நலனை முன்வைத்து நாம் அனைவரும் மேற்கொண்ட நற்பணிகளால், உலகத்தின் பார்வையில் பாரத தேசமானது வலிமை, புகழ், போன்றவற்றில் நிரந்தர மேன்மை அடைந்துள்ளது. ஆனால் நமது மனோதிடத்தைச் சோதிக்க சில ரகசிய சதிவேலைகளும் நடைபெறுகிறது. நம் முன்னுள்ள சதிகளை நாம் சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். தேசத்தின் இன்றைய சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்தால், அத்தகைய சவால்கள் நன்றாக விளங்கும். நாட்டின் நாலாபுறமும் அமைதியற்ற, உறுதியற்ற நிலையை தோற்றுவிக்க முயற்சி நடந்துக் கொண்டே இருப்பது தெரிகிறது.
தேச விரோத முயற்சிகள்
உலக அளவில் பாரதம் முக்கியத்துவம் பெற்றுளளதால் சுயநலவாதிகள் பாரதத்தின் வளர்ச்சியை ஒரு வரம்பிற்குள்ளே கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள். தங்களை அனைவருக்கும் உதவுபவர்களாகவும், ஜனநாயகவாதிகளாகவும், உலக அமைதிக்கான காவலர்களாகவும் கூறிக்கொள்ளும் நாடுகளின் இந்த உணர்வு, அவர்களின் பாதுகாப்பு மற்றும் சுயநலம் குறித்த கேள்வி எழுந்தவுடனேயே மறைந்து விடுகிறது. பின்னர் அவர்கள் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவோ அல்லது அந்நாடுகளின் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை சட்டவிரோத அல்லது வன்முறை வழிகளில் தூக்கியெறியவோ தயங்குவதில்லை. பாரதத்திற்கு உள்ளேயும், வெளியேயும், உலகில் நடக்கும் நிகழ்வுகளைக் கவனித்தால், இவற்றை அனைவரும் புரிந்து கொள்ள முடியும். பொய் அல்லது திரிக்கப்பட்ட செய்தியின் அடிப்படையில் பாரதத்தின் நன்மதிப்பைக் கெடுப்பதற்காக, திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்படுவது தெளிவாகத் தெரிகிறது.
பங்களாதேஷில் இப்போது நடந்த கிளர்ச்சி மற்றும் வன்முறை நிகழ்வுகளில், இது போன்ற முயற்சிகளுக்கும் பங்குள்ளது. ஆனால் ஹிந்து சமுதாயத்தின் மீது காரணமேயில்லாமல் கொடுமைகள் மீண்டும் கட்டவிழ்த்து விடபட்டுள்ளது. அந்த அட்டூழியங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அங்குள்ள ஹிந்து சமூகம் இந்த முறை ஒன்றிணைந்து, தங்களைத் தற்காத்துக் கொள்ள வீட்டை விட்டு வெளியே வந்ததால், ஓரளவு பாதுகாக்கப்பட்டது. ஆனால் இந்தக் கொடுமையான அடிப்படைவாத குணம் இருக்கும் வரை அங்குள்ள ஹிந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மை சமூகத்தினரின் தலைக்கு மேலும் ஆபத்தின் வாள் தொங்கிக் கொண்டேயிருக்கும். அதனால்தான், அந்த நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவுவதும், அதனால் ஏற்படும் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுகளும், நாட்டிலுள்ள சாமானியர்களிடையே ஆழ்ந்த கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இந்த சட்டவிரோத ஊடுருவல் காரணமாக, பரஸ்பர நல்லிணக்கம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையினராக மாறியுள்ள ஹிந்து சமூகத்திற்கு, பெருந்தன்மை, மனிதநேயம் மற்றும் நல்லெண்ணத்தை ஆதரிக்கும் அனைவரின் உதவியும், குறிப்பாக நமது அரசு மற்றும் உலகெங்கிலும் உள்ள ஹிந்துக்களின் உதவி தேவைப்படும்.

ஒற்றுமையில்லாமலும், பலவீனமாகமிருப்பதும் கொடூரக்காரர்களின் அட்டூழியங்களுக்கு அழைப்பு விடுப்பதாகும் என்ற பாடத்தை ஹிந்து சமுதாயம் அறிய வேண்டும். ஆனால் விஷயம் இத்துடன் நிற்கவில்லை. இப்போது பாரதத்திடமிருந்து தப்பிக்க பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இத்தகைய தோற்றத்தை உருவாக்குவதன் மூலம் எந்தெந்த நாடுகள் பாரதத்திற்கு அழுத்தம் கொடுக்க விரும்புகின்றன என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவை அரசு சம்பந்தமான விஷயங்கள். . ஆனால், சமூகத்தில் இருக்கும் நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் அழித்து, பன்முகத்தன்மையை கெடுத்து, இடர்ப்பாடுகளை சந்தித்து வரும் சமுதாயத்தினர் மத்தியில், சட்டத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி, அதிருப்தியை எதிர்ப்பாக மாற்றும் முயற்சிகள் அதிகரித்து வருவது தான் மிகவும் கவலையளிக்கிறது.

டீப் ஸ்டேட்’, ‘வோக்கிசம்’, ‘கலாச்சார மார்க்சிஸம்’ இப்படிப்பட்ட வார்த்தைகள் இன்று விவாதத்தில் உள்ளன. உண்மையில், இவை, அனைத்து கலாச்சார மரபுகளுக்கும் எதிரானவை கலாச்சார கோட்பாடுகள், மரபுகள் மற்றும் உன்னதமான அல்லது மங்களகரமானதாகக் கருதப்படும் அனைத்தையும் முற்றிலும் அழிப்பது இந்த குழுவின் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். சமூகத்தினை மனரீதியாகத் தயார் செய்யும் வழிமுறைகள் மற்றும் நிறுவனங்கள் – உதாரணமாக, கல்வி முறை மற்றும் கல்வி நிறுவனங்கள், தகவல் தொடர்பு ஊடகங்கள், அறிவுசார் உரையாடல் போன்றவற்றைத் தங்கள் செல்வாக்கின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் மூலம் சமூகத்தின் எண்ணங்கள், மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளை அழிப்பது, இந்த முறையின் முதல் படியாகும். ஒன்றாக வாழும் ஒரு சமூகத்தில், எந்தவொரு கூறுகளும் அதன் உண்மையான அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட தனித்தன்மை, தேவை, எதிர்பார்ப்புகள் அல்லது பிரச்சனை ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்க தூண்டப்படுகின்றன. அவர்களுக்குள் அநீதியின் உணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதிருப்தியை வெளிப்படுத்துவதன் மூலம், அவர்கள் மற்ற சமூகத்திலிருந்து வேறுபட்டவர்கள் என தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. சமுதாயத்தில் நிலவும் சிறிய பிரச்சனைகளை பெரிதாக்கி நேரடி மோதல்கள் உருவாக்கப்படுகின்றன. சமூகக் கட்டமைப்பு, சட்டம், அரசு, நிர்வாகம் போன்றவற்றின் மீது அவநம்பிக்கையையும் வெறுப்பையும் தீவிரப்படுத்துவதன் மூலம் அராஜகம் மற்றும் அச்சத்தின் சூழல் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த நாட்டின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது எளிதாகிறது.

பல கட்சிகளைக் கொண்ட ஜனநாயக ஆட்சி அமைப்பில், கட்சிகள் அதிகாரத்தை அடைய போட்டியிடுகின்றன. பரஸ்பர நல்லெண்ணம் அல்லது தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் காட்டிலும் தங்களது சுயநலம் முக்கியமானதாக ஆகிவிட்டால்; கட்சிகளுக்கிடையே நடக்கும் போட்டியில், சமுதாயத்தின் நல்லெண்ணமும், தேசத்தின் பெருமையும், ஒருமைப்பாடும் இரண்டாம் பட்சமாக கருதப்படும். அப்படியான கட்சி அரசியலில், ஒரு கட்சிக்கு ஆதரவாக நின்று, பேரழிவுத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே இவர்களின் செயல் முறை. இது கற்பனைக் கதையல்ல; உலகின் பல நாடுகளில் நடந்த உண்மை. மேற்கத்திய உலகின் முன்னேறிய நாடுகளில் இந்த கிளர்ச்சியின் விளைவாக, வாழ்க்கையின் நிலைத்தன்மை, சமூக அமைதி, நாட்டின் வளம், ஆகியவற்றுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதை தெளிவாகக் காணலாம். அரபு நாடுகள் முதல் அண்டை நாடான வங்காளதேசத்தில் நடப்பது வரையில், இந்த முறையை நாம் காண்கிறோம். பாரதம் முழுவதும், குறிப்பாக எல்லைப் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் இதே போன்ற தீய முயற்சிகளை நாம் காண்கிறோம்.

நமது தேசிய வாழ்க்கை, கலாச்சார ஒற்றுமை மற்றும் உயர்ந்த நாகரிகத்தின் வலுவான அடித்தளத்தில் நிற்கிறது. நமது சமூக வாழ்க்கை உன்னதமான கோட்பாட்டால் போஷித்து வளர்க்கப்படுகிறது. நமது தேசிய வாழ்க்கைக்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது அழிக்கும் இத்தகைய தீய முயற்சிகளை முன்கூட்டியே தடுத்து நிறுத்துவது அவசியம். இதற்கான முயற்சிகளை விழிப்புணர்வுள்ள சமூகமே மேற்கொள்ள வேண்டும். இதற்கு நமது கலாச்சார வாழ்க்கைத் தத்துவம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய பாதையின் அடிப்படையில் ஒரு ஜனநாயகத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். வலுவான கருத்துக்களை உருவாக்குவதன் மூலம் கலாச்சார மாசுகளைப் பரப்பும் இந்த சதிகளிலிருந்து சமூகத்தைக் காக்க வேண்டியது காலத்தின் தேவை.

கலாசார சீரழிவின் விளைவுகள்
பல்வேறு அமைப்புக்களால் பரப்பப்பட்டு வரும் திரிபு வாதங்களினால் பாரதம் பெரிய பாதிப்புக்களைச் சந்தித்து வருகிறது – மிக முக்கியமாக, நமது அடுத்த தலைமுறையினரின் மனங்களில், வார்த்தைகளில், செயலில் ஏற்பட்டு வரும் தீமைகளைக் கண்கூடாய் பார்க்க முடிகிறது. ஒருகாலத்தில் பெரியவர்கள் கையில் மட்டுமே இருந்த அலைபேசி, இன்று பல சிறார்களின் கைகளை அடைந்துவிட்டது. குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள், அவர்களால் என்னவெல்லாம் காணமுடியும் என்பதில் எந்தவிதமான கட்டுப்பாட்டுகளும் இல்லை. இன்று அலைபேசி என்பது கண்ணியமற்ற விஷயங்களுக்கான வடிகாலாகிவிட்டது என்று கூறினாலும் மிகையாகாது. ஒலி ஒளி ஊடகங்களில் வரும் விளம்பரங்களும், அருவருக்கத்தக்க படக்காட்சிகளும், பாடல்களும் நமது சமுதாயத்திலும், வீடுகளிலும், குடும்பங்களிலும் ஏற்படுத்தும் தீமைகளைக் கட்டுப்படுத்த சட்டங்கள் இயற்ற வேண்டியது ஒரு அவசர தேவையாகிவிட்டது.
இளைஞர்கள் மத்தியில் காட்டுத்தீயைப் போல் பரவி வரும் போதை பழக்கம், சமுதாயத்தை படுகுழியில் இறக்கி புதைத்துக் கொண்டிருக்கிறது. சமூகத்தை நன்னெறிப்படுத்தும் பழக்க வழக்கங்களை மீண்டும் உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
கலாசார சீர்கேட்டின் விளைவாக, பிறன்மனை நோக்காத பேராண்மை கொண்ட சமூகமாய் இருந்த நாம் இன்று நாட்டின் பல இடங்களில் பலாத்காரங்களும் கற்பழிப்புக்களும் நடப்பதைக் காண்கிறோம். கொல்கத்தாவிலுள்ள ஆர். ஜி. கார் மருத்துவமனையில் நிகழ்ந்த விஷயம், நம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலைகுனிவிற்கு ஆளாக்கிய வெட்கக்கேடான நிகழ்வுகளில் ஒன்று. இது போன்ற நிகழ்வுகள் தடுக்கப்படவேண்டும் என்றும், ஆர். ஜி. காரில் நடந்த நிகழ்விற்கு பாரபட்சமற்ற முறையில் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்றும் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ சகோதர சகோதரிகளுடன் ஒட்டுமொத்த சமுதாயமும் தோளோடு தோள் நின்றது. இது ஒருபுறமிருக்க, குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்ற சிலர் மேற்கொள்ளும் கேவலமான முயற்சிகள் – குற்றப்பின்னணி கொண்டோர், அரசியல்வாதிகள் மற்றும் கலாசார சீரழிவு ஆகிய மூன்றும் இணைந்து எப்படி நம்மை ஒருசேர பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன என்பதற்கு அத்தாட்சி.
நாம் பெண்களைப் பார்க்கும் விதம், “பிறன்மனை நோக்காத பேராண்மை” என்ற தத்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. இந்தக் கண்ணோட்டம் நம் கலாச்சாரம் நமக்களித்த கொடை. நம் சமுதாயமும், குடும்பங்களும் பொழுது போக்கு ஊடகங்கள் மூலம் தமக்கு அறியாமலே சில தீய விஷயங்களை எடுத்துக்கொள்கின்றனர். ஆகையால் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படாவிட்டால் அதற்கு சமுதாயம் கொடுக்கும் மிகப்பெரிய விலை, கலாச்சார சீரழிவு. குடும்பம், சமூகம், ஊடகங்கள் ஆகிய மூன்றும் இணைந்து நம் கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்ச்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும்.
பலத்தின் அவசியம்
இன்றைய பாரதத்தில் அனைத்து இடங்களிலும், கலாச்சாரத்தை சிதைத்து சமூகத்தை சீர்குலைக்க முற்படும் சித்தாந்தங்கள் பலவற்றைப் பார்க்க முடிகிறது. மக்களை சாதி, மதம், மாநிலம் என்று சிறு கூறாக்கி சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தி மோதல்களை உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுவதைப் பார்க்கமுடிகிறது. சிற்றின்பத்தில் தொலைந்து, தலைசுற்றி, நமக்கு என்ன நடக்கிறது என்ற உணர்வற்ற ஜடங்களாய் நிற்பதற்கான நிலைமையை நோக்கி நாம் மிகவேகமாய்ப் பயணித்து வருகிறோம். இதன் தாக்கம் முக்கியமாக பாரதத்தின் வடமேற்கு எல்லையில் அமைத்துள்ள பஞ்சாப், ஜம்மு, காஷ்மீர், லடாக். கடல் எல்லை கொண்ட மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு மற்றும் பிஹார் முதல் மணிப்பூர் வரையிலான வடகிழக்குப் பகுதிகளைப் பாதித்திருக்கிறது. நான் முன்னே குறிப்பிட்ட அனைத்து விஷயங்களின் பாதிப்பையும் இப்பகுதிகளில் காணமுடிகிறது.
காரணமின்றி பிரிவினைவாதத்தையும் வன்முறையையும் தூண்டும்படியான நிகழ்வுகள் பாரதத்தின் பல பகுதிகளில் அரங்கேற்றப்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். நாட்டு நடப்பு விஷயங்களில் கொள்கை ரீதியான எதிர்ப்புக்கள் இருக்கலாம், ஆனால் அவற்றை வெளிப்படுத்த, போராட்டம் நடத்த ஜனநாயக வரைமுறைக்குள் பல வழி வகைகள் இருக்கின்றன. இவற்றைப் புறக்கணித்து வன்முறையில் ஈடுபடுவது, காரணமில்லாமல் சமுதாயத்தின் ஒருசாரார் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடல், அச்சுறுத்துதல் ஆகியவற்றை செய்வது ரௌடித்தனமேயன்றி வேறேதும் இல்லை. இப்படித் திட்டமிட்டுத் தூண்டிவிடுவதற்கான முயற்சியை பெருமதிப்பிற்குரிய டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர், ‘அராஜகத்தின் இலக்கணம்’ (Grammar of Anarchy) என்று கூறுகிறார். சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்த விநாயக சதுர்த்தி ஊர்வலங்களின் போது நடந்த கல்வீச்சு சம்பவங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டமான சூழல் ஆகியவை அராஜகத்தின் இலக்கணமே. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பட்டதும், அப்படியே நடந்தால் அதை உடனே கட்டுப்படுத்துவதும், ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உடனே தண்டனை பெற்றுத்தருவது ஆகியவை ஆட்சியாளர்களின் கடமை மற்றும் பணி. ஆனால் அரசு களத்திற்கு வரும் வரை, தங்களுடைய மற்றும் தங்கள் உற்றார் உறவினரின் உயிர் மற்றும் உடமையைக் காப்பது சமூகத்தின் பொறுப்பு. இதனால் சமூகம் எப்போதும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, இம்மாதிரி இழிச்செயல்களில் ஈடுபடுவோரையும், ஆதரிப்பவர்களையும் அடையாளம் காண்பதற்கான முயற்சிகளைச் செய்யவேண்டும்.
நான் முன்னர் கூறிய விஷயங்களை எவரையம் பயமுறுத்தவோ, அச்சுறுத்தவோ சண்டையிடுவதற்காகவோ கூறவில்லை, சமூகம் எப்பொழுதும் விழிப்புணர்வோடும், எச்சரிக்கையோடும் இருந்தால், தற்போது சில விஷமிகளால் சமூகத்தில் ஏற்படுத்தப்படும் கலகங்களை முளையிலேயே கிள்ளி ஏறிய முடியும். அப்படிச் செய்வதன் மூலம் நாட்டின் ஒற்றுமையைப் பேணி, அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், வளமாகவும், வலிமையாகவும் மாற்றுவது நம் ஆசை மட்டுமல்லாது கடமையும் கூட. இந்தக் கடமை, ஹிந்து சமுதாயத்திற்கு அதிகம் உள்ளது. எனவே சமூகத்தில் அனைவரும் கூடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படியான விஷயங்களைச் செய்யவேண்டும். என்று ஒரு சமூகம் விழிப்புணர்வு அடைந்து தனது வருங்காலம் எப்படி இருக்க வேண்டுமென்று தீர்மானிக்க ஆரம்பிக்கிறதோ அன்று பெரிய மனிதர்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள், அரசு மற்றும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் என்று அனைவரும் நமக்கு உதவுவதற்கு ஓடி வருவார்கள். ஆரோக்கியமான உடலில் ஒரு அபாய மணி போல் அரிப்பு முதலில் வருகிறது, பின்னர் நோய்கள் தொடர்கின்றன. பலவீனமானவர்களுக்கு உதவ கடவுள் ஒருபோதும் வருவதில்லை என்று ஒரு பழமொழி உண்டு.
அஸ்வம் நைவ கஜம் நைவ வியாக்ரம் நைவ ச நைவ ச |
அஜாபுத்ரம் பலிம் தத்யாத் தேவோ துர்பல காதக: ||
(குதிரை, யானை, புலிகள் பலியிடப்படுவதில்லை, இல்லவே இல்லை |
ஆட்டுக்குட்டியையே பலி கொடுப்பர் மக்கள், கடவுளும் வறியவனையே பலியாய் கேட்பார் போலும் ||)
ஆகவேதான் நூற்றாண்டு நிறைவுக்குப் பின், சில விஷயங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான முயற்சியை ஸ்வயம்சேவகர்கள் முன்னெடுக்க உள்ளனர்.
நல்லிணக்கமும் நல்லெண்ணமும்
ஒரு சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கும் முதல் விஷயம் – சமூக நல்லிணக்கத்துடன், சமூகத்திலுள்ள பலதரப்பட்ட மக்கள் பரஸ்பர நம்பிக்கையின் பேரில் நல்லெண்ணத்தை பரிமாறிக்கொண்டு இருப்பது. எதோ பாவனையாய்ச் சில விஷயங்கள் செய்வதன் மூலம் இது வந்து விடாது. இதற்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும், குடும்பங்களிலிருந்து தனி மனிதன் வரை அனைவரும், என்று பரஸ்பரம் அன்போடு இருக்கிறார்களோ அப்போது தான் சாத்தியமாகும். எனவே நாமனைவரும் இணைந்து, தனி மனித மற்றும் குடும்ப அளவில் இம்முயற்சியை எடுக்க வேண்டும். ஒரு தனிமனிதனின் பண்டிகை ஒட்டுமொத்த சமூகத்தின் கொண்டாட்டமாய் மாறவேண்டும். கோவில்கள், நீர் நிலைகள் மற்றும் இடுகாடு ஆகியவை அனைவருக்கும் பொது என்றும், அனைத்து தரப்பு மக்களின் பயன்பாட்டிற்கும் திறந்திருக்கும் என்ற சூழல் வரவேண்டும்.
எந்தெந்த சூழ்நிலையில் பல்வேறு சமூகங்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்கும் என்பது சமூகத்தில் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் எப்படி வலிமையானவர்கள், வலிமையற்றவர்களை, தன் வலிகளையும் மறந்து தாங்கிப்பிடித்து தூக்கி விடுவார்களோ, அதுபோன்ற கண்ணோட்டத்துடன் சமூகத்திலும் வலியவர்கள் வறியவர்களுக்கு உதவவேண்டும். சமூகத்தில் அனைத்து சாதிகளுக்கும் ஒரு சங்கமும் அவர்கள் நடத்தும் நிறுவனங்களும், சமுதாயக் கூடங்களும் இருக்கும். அந்தந்த சாதிகளின் நலன்களைப் பேணி அவர்களுக்குத் தேவையான விஷயங்களைச் செய்வதே இந்த சங்கங்களின் தலையாய கடமை. சாதி சங்கங்கள் கூடிப்பேசும் போது கூடுதலாக இரண்டு விஷயங்களைப் பற்றி அவர்கள் தொடர்ந்து விவாதிப்பார்களேயானால் சமுதாயத்தை பிளவுபடுத்தும் எந்த சக்தியும் வெற்றிபெற வாய்ப்பில்லாமல் போகும். அதில் முதல் விஷயம், நாட்டின் நலனையும், சமூக நலனையும் கருதி அனைத்து சாதிக் குழுக்களையும் இணைத்து நாம் என்னென்ன விஷயங்கள் செய்யலாம், எப்படி அவற்றைத் திட்டங்கள் அமைத்துச் செயல்படுத்தலாம் என்று விவாதிக்கவேண்டும். இரண்டாவது, நம்மில் நலிந்த மக்களுக்காக, சாதிகளுக்காக, நாமனைவரும் இணைந்து என்னென்ன செய்யலாம் என்பது பற்றி ஆலோசனை செய்யவேண்டும். இது போன்ற எண்ணங்களை செயல்படுத்தத் துவங்கினால் சமூகம் ஆரோக்கியமாகவும், நல்லிணக்கத்தோடும் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் கிடையாது.
சுற்றுசூழல்

உலகம் முழுவதும் நான்கு திசைகளிலிருந்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த செய்திகளைக் காண்கிறோம். இயற்கைச் சீற்றத்தின் தாக்கத்தைப் பார்க்கிறோம். சமீப காலமாக நமது நாட்டிலும் இவை நடக்கின்றன பருவநிலை சீற்றம் மிகுந்ததாக மாறிவிட்டது. பொருளாதார முன்னேற்றம் என்ற பேரில் மனித குலம், போகம், நகரமயமாதல் ஆகியவற்றை அடிப்படை சித்தாந்தமாகக் கொண்டு, அனைத்து படைப்பையும் அழிவின் பாதையில் அழைத்துச் செல்லும் வேலையை மனிதகுலம் செய்கிறது. நமது பாரத தேசத்தின் பாரம்பரிய வழியில், அனைத்து உயிர்கள் மற்றும் இயற்கை வளங்களை, ஒரே உயிர் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் முன்னேற்றப் பாதையை வகுத்திருக்க வேண்டும் ஆனால் நாம் அப்படிச் செய்யவில்லை இப்படிப்பட்ட கருத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டும் கேட்க முடிகிறது.

மேலோட்டமாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன; சில விஷயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது; அதற்கு மேல் ஒன்றும் நடக்கவில்லை. முன்னேற்றம் என்ற பேரில் அழிவுப் பாதையின் கொடிய தாக்கத்தை நாமும் அனுபவிக்கிறோம். அதிக வெயில், வறட்சியை தருகிறது. மழை வெள்ளம் அடித்துக் கொண்டு செல்கிறது, குளிர்காலம் உறைந்து விடுவதைப் போல் காண்கிறோம். காலநிலையின் தீவிரத்தை நாம் அனுபவிக்கிறோம்.

காடுகள் வெட்டப்படுவதால் பசுமை குறைகிறது, நதிகள் வறண்டு விட்டன, ரசாயன உரங்களால் நமது உணவு, நீர், காற்று, விஷம் தோய்ந்தவைகளாகி விட்டன, மலைகள் சரிவதைக் காண்கிறோம், பூமி பிளக்கிறது, இவை யாவும் சமீப காலமாக நாம் காண்கிறோம், ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் நமது பாரதிய சித்தாந்தத்தின் அடிப்படையில் இவற்றை சரி செய்வதற்கான தீர்வு காண்பதுதான் ஒரே வழி. தேசத்தின் வெவ்வேறு பகுதியில் தேவைகளை உணர்ந்து, அவற்றிற்கு ஏற்றார் போல் ஒட்டுமொத்த செயல் திட்டத்தை அமைத்து அதை அந்தந்த பகுதியில் செயல்படுத்தினால், வெற்றி கிடைக்கும், சாதாரண மக்களாகிய நாம் நமது வீட்டில் சிறிய தொடக்கத்தை ஏற்படுத்தினால் நன்று.

முதலில் தண்ணீர் சிக்கனம் மிகவும் அவசியம். இரண்டாவது பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை குறைப்பது, அதிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் முற்றிலும் தவிர்த்தல், மூன்றாவது நம் வீடு மற்றும் சுற்றுப்பகுதிகளில் மரம் நடுதல், செடி வளர்த்தல், காடுகளைக் காத்தல், நம் நாட்டு மரங்களை வளர்த்தல் ஆகும். சுற்றுச்சூழல் சம்பந்தமான கொள்கை ரீதியான தாக்கம் ஏற்பட காலம் தேவை. ஆனால் அதை நாம் நமது வாழ்வில் தினசரி கடமையாக உடனடியாக தொடங்க முடியும்

கலாச்சார விழிப்புணர்வு
கலாச்சார விழிப்புணர்வு ஏற்படுத்த மூன்று இடங்களில் கவனம் கொடுத்து வேலை செய்ய வேண்டும். முதலில் கல்விக்கூடங்களில் கலாச்சார பாடங்கள், நல்ல பழக்கங்கள் உரிய முறையில் கிடைக்கச் செய்ய வேண்டும். கல்வி என்பது வெறும் வயிற்றை நிரப்பும் கருவியாக இல்லாமல், மாணவர்களின் சுய முன்னேற்றத்தையும் கவனத்தில் கொள்வதாக இருக்க வேண்டும். பெண்களைத் தாயாகப் பார்ப்பது. மற்றவர் செல்வத்தை தூசுக்குச் சமமாகப் பார்ப்பது. மற்றவர்களின் துன்பத்தைத் தன் துன்பமாக பார்ப்பது போன்ற நற்குணங்களை கொண்டவரையே நாம் சான்றோர் என்று கருதுகிறோம். இது பல நூற்றாண்டுகளாக போதிக்கப்பட்டு வருகிறது.

புதிய கல்விக் கொள்கையில், பாடத்திட்டங்களில் இவற்றைக் கொண்டு வர முயற்சிகள் தொடங்கியுள்ளன. ஆனால் தொடக்கக் கல்வி முதல் மேற்படிப்பு வரையுள்ள ஆசிரியர்கள் அதற்கு உதாரணங்களாக மாறாதவரை பாடத்திட்டங்கள் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆதலால் ஆசிரியர்களின் பயிற்சிக்கு புதிய முறையை ஏற்படுத்துவது அவசியம்.

இரண்டாவது, சமுதாய சூழ்நிலை. சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் மற்றும் முன்னோடிகளாக உள்ளவர்களை மற்றவர்கள் பின்பற்றுகிறார். அவர்களின் வாழ்க்கையிலும் அனைத்தும் காணப்பட வேண்டும். அவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவது, அவர்களின் சிந்தனையை; செயல்களை ஒருமுகப்படுத்துவது போன்றவற்றை முன்னெடுக்க வேண்டும். சமூக ஊடகம் மூலம் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் (Social Media influencers) சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்துவதிலும், சீர்ப்படுத்துவதிலும், கலாச்சாரத்தை முன்னெடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு மாற்றான எதிர்மறைகளைத் தவிர்க்கவும் வேண்டும்.

மூன்றாவதாக, வீடுகளில் கலாச்சாரத்தின் படிப்பினை இயல்பான தேவையாகிறது. 3 முதல் 12 வயது வரை குழந்தையின் அடிப்படைக் கல்வியும் அதன்மூலம் பண்புப் பதிவுகளும் வீடுகளில் நடக்கிறது. வீடுகளில் பெரியவர்களின் நடத்தை. வீட்டுச் சூழல். வீடுகளில் இணக்கமான பேச்சுக்களின் மூலம் இந்த படிப்பினை நன்கு நடக்க முடியும். நாம் அனைவரும் நமது வீட்டின் சூழலைக் கருத்தில் கொண்டு. வாரம் ஒரு முறையாவது நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். நமது கலாச்சாரத்தின் கௌரவம், தேச பக்தி, அறவழி வாழ்க்கை, உயரிய கருத்துக்கள், கடமை உணர்வு போன்றவை இந்த பேச்சுக்களில் இடம்பெற வேண்டும் இவற்றை உணர்ந்து நமது வீடுகளில் தொடங்க வேண்டும்

குடிமக்கள் கடமை

குடிமக்களின் நன்நடத்தை கலாச்சாரத்தின் மற்றுமொரு வெளிப்பாடு. இது நாம் சமுதாயத்தில் நடந்து கொள்ளும் விதமாகும். நாம் சமுதாயத்தில் ஒன்றாக வாழ்கிறோம், இணக்கமாக இருக்க நாம் சில சட்ட திட்டங்களை வகுக்கிறோம், காலத்திற்கு ஏற்றார் போல் அவற்றின் மாற்றங்களும் நடக்கின்றன. ஆனால் இணக்கமாக வாழ அந்த சட்ட திட்டங்களை முழு மனதோடு கடைப்பிடிப்பது அவசியமாகிறது. ஒன்றாக வாழ வேண்டுமெனில், நாமனைவரும் அடுத்தவர் விஷயத்தில், கடமையும் நன்னடத்தையும் கடைபிடிப்பது அவசியமாக அமைந்து விடுகிறது. சட்டங்கள், அரசியலமைப்பும் அவ்வாறே. அவை சமுதாயத்தில் அனைவரும் ஒற்றுமையாக, இணக்கமாக முன்னேற்றப் பாதையில் சிதறாமல் செல்ல சட்டங்கள் அடிப்படையாகும் .பாரதத்தின் குடிமக்களாகிய நாம் இந்த அரசியல் அமைப்பை மதித்து அதன் அடிப்படையில் வாழ்கிறோம்.

அனைவரும் அரசியலமைப்பை மனதில் கொண்டு. அதில் கொடுக்கப்பட்டுள்ள கடமைகளை சரியாக கடைப்பிடிப்பது அவசியம். நமது வரிகளை நேரத்திற்கு செலுத்த வேண்டும், தனிப்பட்ட மற்றும் பொது கணக்கு வழக்குகளில் வெளிப்படைத்தன்மையும், நேர்மையும் தேவை. இதுபோன்ற பல தரப்பட்ட சட்டங்களை சரியாக கடைபிடிக்க வேண்டும். சட்டங்களை முழுமையாகக் ( லெட்டர் அண்ட் ஸ்பிரிட்டில்) கடைபிடிப்பது அவசியம்.

குடிமக்களின் கடமை மற்றும் அதிகாரம் ஆகியவை பற்றிய விழிப்புணர்வு அனைத்து தரப்பிற்கும் ஏற்பட வேண்டும்.
தனிநபர் மற்றும் தேசத்தின் நடத்தை சிறக்க குடும்பத்தில் இருக்கும் இணக்கமான உறவு முறை, நன்னடத்தை, நல்ல எண்ணங்கள் மற்றும் சமுதாயத்தில் கிடைக்கும் தேசபக்தி, சட்டங்களை மதித்தல் போன்றவை அவசியமாகின்றன. தேசத்தின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்கு இவை இரண்டும் முழுமை பெறுவது அவசியமாகிறது. நம் அனைவருக்கும் தனிநபர் மற்றும் தேசத்தின் நடத்தை உயர்வடைய நாம் இடைவிடாது தொடர்ந்து முயற்சிகளைச் செய்ய வேண்டும்.
சுயகௌரவம்
இவை அனைத்தும் தொடர்ந்து பின்பற்றப் பட தேவையான உத்வேகம் நமக்கு, நாம் / நமது (ஸ்வ) என்ற பெருமையிலிருந்து தான் கிடைக்கும். நாம் யார்? நமது பாரம்பரியம் மற்றும் நமது வாழ்வின் லட்சியம் என்ன? பாரதியர்களாக, நம்மிடையே பல்வேறு வேறுபாடுகள் இருந்தபோதிலும், பண்டைய காலந்தொட்டு தொடரும் ஒரு பெரிய, அனைத்தையும் உள்ளடக்கிய, மனித குல அடையாளத்தின் தெளிவான வடிவம் என்ன? இவற்றையெல்லாம் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். இந்த அடையாளத்தின் மிகவும் நல்ல குணங்களை ஏற்றுக் கொண்டு பின்பற்றுவதின் மூலம், அதன் பெருமை மனதிலும் புத்தியிலும் ஆழமாகப் பதிகிறது. இதுவே நமது சுய கௌரவத்தின் அடிப்படையாகிறது.
இந்த சுயகெளரவம் தரும் உத்வேகமே நமது தன்னம்பிக்கைக்கும், உலகில் நாம் முன்னேறுவதற்கும் தேவையானவற்றைச் செய்யத் தூண்டுகோலாக அமைகிறது. இதைத்தான் நாம் சுதேசி என்கிறோம். தேசியக் கொள்கையில் அதன் வெளிப்பாடு, பெருமளவில் சமூகத்தின் அன்றாட வாழ்வில் தனிநபர்களின் நடத்தையைச் சார்ந்தே அமைகிறது. வீட்டில் செய்ய முடிவதை, வெளியிலிருந்து வாங்காமல் வீட்டிலேயே செய்து கொள்ள வேண்டும்; வெளியிலிருந்து வாங்கும் போதும், அதனால் நமது நாட்டினருக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கிறதா என்பதை கவனித்து வாங்குவோம்.
நம் நாட்டில் தயாராகும் பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக்கூடாது. நாட்டில் உற்பத்தி ஆகாத பொருட்கள், இல்லாமல் வாழ பழகுவோம். அவற்றில் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் ஏதேனும் இருக்குமானால் அதை மட்டுமே இறக்குமதி செய்வோம். நம் வீட்டிற்குள் மொழி, உடை, பஜனை பாடல்கள், வீட்டின் அமைப்பு, நமது சுற்றுப்பயணங்கள் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள், நமது குடும்ப பாரம்பரியத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதுவே சுதேசி வாழ்க்கைமுறை ஆகும். நாடு எல்லாத் துறைகளிலும் தன்னிறைவு பெற்றால், சுதேசி சிந்தனையை செயல்முறை படுத்துவது எளிதாகிறது. எனவே, ஒரு சுதந்திர நாட்டின் கொள்கையானது, நாடு தன்னிறைவு பெறத் தேவையான கொள்கையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதோடு கூட சமுதாயம் சுதேசி வாழ்க்கைமுறையை தனது இயல்பாக மாற்றிக் கொள்ள விடாமுயற்சி எடுக்க வேண்டும்.
எண்ணம் – சொல் – செயல் விவேகம்
தேசியப் பண்பின் மற்றொரு முக்கிய அம்சம், எந்த வகையான பிரிவினவாதம் மற்றும் சட்ட விரோதமான நடைமுறையிலிருந்தும் நாம் விலகி நிற்பதாகும். நமது நாடு பன்முகத்தன்மை நிறைந்த நாடு. நாம் அவற்றை வேறுபாடுகளாகக் கருதுவதும் இல்லை, கருதவும் கூடாது. நமது பன்முகத்தன்மை, படைப்பின் இயல்பான அம்சம். இவ்வளவு தொன்மையான வரலாறும், பரந்த நிலப்பரப்பும், அதிக மக்கள் தொகையும் கொண்ட நாட்டில் இந்தப் பன்முகத்தன்மை அனைத்தும் இயற்கையே. அவரவரின் தனித்தன்மைகளின் மீது அவரவருக்கு பெருமித உணர்வு இருப்பது இயற்கையே.
இந்தப் பன்முகத்தன்மையின் காரணமாக, சமூக வாழ்க்கையிலும், நாட்டின் இயக்கத்திலும் நடக்கும் அனைத்து விஷயங்களும், எப்போதும், அனைவருக்கும் சாதகமாகவும், மகிழ்ச்சியளிப்பதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இவை குறிப்பிட்ட சமூகத்தால் செய்யப்படுகின்றன என்பதுமில்லை. எனவே இவற்றுக்கு பதிலடியாக, சட்டம் ஒழுங்கை மீறுவதும், சட்டத்துக்குப் புறம்பாக அல்லது வன்முறை வழிகளில் பிரச்சனைகளை உருவாக்குவதும், ஏதோவொரு சமூகத்தினரை அதற்கு பொறுப்பாக்குவதும், எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் ஒழுக்கத்தை மீறுவதும், நாட்டுக்கும் – நாட்டிலுள்ள எவருக்கும் கேடுதான் விளைவிக்கும்.
சகிப்புத்தன்மையும் நல்லிணக்கமும் பாரதத்தின் பாரம்பரியம். சகிப்பின்மையும், துன்மார்க்கமும் பாரதத்திற்கு எதிரான மற்றும் மனித விரோத தீய குணங்களாகும். எனவே, எத்தகைய கோபம் வந்தாலும், அந்த கோபத்தை நாமும் தவிர்க்க வேண்டும், நம் சமூகத்தயும் கோபத்திலிருந்து காக்க வேண்டும். நமது எண்ணம், சொல், செயல் யாருடைய நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் உரிய, இடங்களையோ மஹா புருஷர்களையோ, வேதத்தையோ, அவதாரத்தையோ, ஆன்மீகவாதிகளையோ அவமதிக்காமலிருப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற ஏதாவது வேறு யாருக்காவது நடந்தாலும், நாம் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். சமுதாயத்தின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நன்னடத்தை ஆகியவை எல்லாவற்றுக்கும் மேலானது என்பதை நினைவில் கொள்வோம். இதுவே, எந்த தேசத்திற்கும், எந்தக் காலத்திற்கும், ஆதாரமான உண்மை, மனிதர்களின் மகிழ்ச்சியான கூட்டு வாழ்விற்கான ஒரே வழி.
ஒன்றிணைந்த சக்தியும், தூய ஒழுக்கமும் தான் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படை
இந்த நவீன உலகில், உலகம் உண்மையை அதன் சொந்த மதிப்பில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. உலகம் சக்தியை/வலிமையை மட்டுமே ஏற்றுக் கொள்கிறது. பாரதத்தின் வளர்ச்சி சர்வதேச பரிவர்த்தனைகளில் நல்லிணக்கமும் சமநிலையும் ஏற்பட்டு உலகம் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை நோக்கி நகர வழிவகுக்கும் என்பதை உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அறிந்ததே. ஆயினும்கூட, சக்தி வாய்ந்த நாடுகள் தங்கள் குறுகிய சுயநலம், அகங்காரம் அல்லது தீயஎண்ணங்கள் காரணமாக பாரதத்தை ஒரு வரம்புக்குள் வைத்திருக்க முயற்சிப்பதை நாமனைவரும் அனுபவிக்கிறோம். பாரதம் எந்த அளவுக்குப் பலம் பெறுகிறதோ, அவ்வளவு அதிகமாக இவ்வுலகம் பாரதத்தை ஏற்றுக்கொள்ளும்.
‘உலகம் பலவீனமானவர்களைக் கேட்பதில்லை, வலிமையானவர்களை உலகம் வணங்குகிறது’
இதுதான் இன்றைய உலகத்தின் கொள்கை.
எனவே, மேற்குறிப்பிட்ட நல்லிணக்கத்தையும், கட்டுப்பாடான சூழலையும் நிலைநாட்ட, நல்ல மனிதர்கள் சக்தி பொருந்தியவர்களாக வேண்டும். சக்தியானது ஒழுக்கத்துடன் இணையும் போது, ​​அது அமைதியின் அடிப்படையாக அமைகிறது. தீயவர்கள் சுயநலத்திற்காக ஒன்று கூடி விழிப்புடன் இருக்கிறார்கள். அவர்களை வலுவான சக்தி கொண்டே கட்டுப்படுத்த முடியும். நல்லவர்கள் எல்லோரிடமும் நல்லெண்ணத்தோடு இருக்கின்றனர், ஆனால் அவர்களுக்கு ஒருங்ணைந்திருப்பதின் முக்கியத்துவம் தெரிவதில்லை.
அதனால்தான் அவர்கள் பலவீனமாகக் காணப்படுகிறார்கள். இந்த ஒருங்கிணைந்து வேலை செய்யும் திறனை உருவாக்கும் கலையை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இந்து சமுதாயத்தின் இந்த நல்லொழுக்க சக்தி சாதனையின் பெயர் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம். இவ்வுரையில், முன்பு கூறிய நன்னடத்தைக்கான ஐந்து விஷயங்களை எடுத்துக் கொண்டு சமுதாயத்தில் உள்ள மனிதர்களை இணைக்கும் வேலையில் சங்க ஸ்வயம்சேவகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாரத்தை முன்னேற விடாமல், தன் சுயநலத்துக்காக, நம்நாட்டின் விரோதிகளுடன் இணைந்து, இயல்பிலேயே வெறுப்பிலும், துவேஷத்திலும் இன்பம் காணும் சக்திகளிடமிருந்து பாதுகாப்பாக நாடு முன்னேற வேண்டும்.
எனவே, நல்லொழுக்கத்துடன் கூடிய சக்தியை வளர்ப்பது அவசியம். எனவே தான், சங்கத்தின் பிரார்த்தனையில், யாராலும் வெல்ல முடியாத சக்தியும், உலகமே தலை வணங்கக்கூடிய ஒழுக்கத்தையும் கடவுளிடம் வேண்டுகிறோம். இந்த இரண்டு குணங்கள் இல்லாமல், சாதகமான சூழ்நிலையில் கூட, உலக நலனுக்காகவும், மனித குலத்தின் நலனுக்காகவும் எந்த வேலையும் செய்ய முடியாது. நவராத்ரி உற்சவத்தில் அனைத்து தேவர்களும் தத்தமது சக்திகளை ஒரே தேவதையின் மேல் ஒருங்கிணைத்தனர். அதிலிருந்து தோன்றிய தேவதை சின்மயி ஜெகதம்பாவின் ஒருங்கிணைந்த சக்தியால் தீயவர்கள் அழிக்கப்பட்டனர், நல்லவர்கள் காக்கப்பட்டனர் உலக நலம் பெற்றது.
இந்த உலக நன்மைக்கான சாதனையில், சங்கம் ஒரு மௌனமான பூசாரியாக ஈடுபட்டுள்ளது. இந்த தவம் தான் நம் அனைவருக்கும் நமது புனிதமான தாய்நாட்டை மகோன்னதமான நிலைக்குக் கொண்டு செல்லத் தேவையான வலிமையையும் வெற்றியையும் தரும். இந்தத் தவத்தின் மூலம், உலகின் அனைத்து நாடுகளும் தங்கள் சொந்த முன்னேற்றத்தை அடைந்து, மகிழ்ச்சி, அமைதி மற்றும் நல்ல உணர்வுகள் நிறைந்த புதிய உலகை உருவாக்குவதில் பங்களிக்கும். இந்த தவத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
ஹிந்துபூமியின் ஒவ்வொரு துகள்களிலும், இப்போது சக்தியின் அவதாரம் எழுந்துள்ளது,
நீர், நிலம், வானத்திலிருந்து இப்பொழுது எழுகிறது ஹிந்துவின் வெற்றி முழக்கம்!
ஜகத் ஜனனியின் வெற்றி முழக்கம் !!
பாரத் மாதா கி ஜெய்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here