ராஷ்ட்ர சேவிகா சமிதி (ஆர்.எஸ்.எஸ்) எனும் அகில பாரத பெண்கள் அமைப்பானது பரம் பூஜனீய டாக்டர்ஜீயால் பெயர் சூட்டப்பட்டு, வந்.மௌஸிஜீ லக்ஷ்மி பாய் கேல்கரால் 1936ஆம் ஆண்டு விஜயதசமி நன்னாளில், வர்தா எனும் சிறிய கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
பெண் சக்தியை ஒன்றிணைத்து பாரதத்தை விஷ்வ குருவாக்கும் லட்சியத்தை முன் நிறுத்தி இவ்வமைப்பானது செயல்படத் தொடங்கியது. இன்று இந்த அமைப்பானது உலகின் மிகப்பெரிய பெண்கள் அமைப்பாக விளங்குகிறது. இதற்கு காரணம் அன்று வந்தனீய. மௌஸிஜீ விதைத்த லட்சியமும், அவரது குணாதியசமும் தான் பல பெண்களுக்கு தேச சேவை செய்ய ஊக்கமாக இருந்து வருகிறது. தேசத்தையும், தர்மத்தையுமே பெண்களின் மனதில் முதன்மை ஆக்கினார்.
1947ஆம் தேசம் துண்டாடப்பட்ட போது, பாக்கிஸ்தானின் அரக்கர்கள் ஹிந்து பெண்களின் கற்பை சூரையாடினர், பாரதத்தை தூற்றினர். இன்னும் சொல்ல முடியாத பல கொடுமைகள் அரங்கேறின. பிரிவினையின் கோர தாண்டவத்தை கண்டு மௌஸிஜீ மனம் வெதும்பும் வேளையில் தான் பாகிஸ்தானில் இருந்து ஒரு சேவிகாவின் கடிதம் மௌஸிஜீயின் கரங்களுக்கு வந்தது. அதில் அங்கு நடக்கும் கொடுமைகள் பற்றியும், உயிரை இழப்பதற்கு முன்பு மௌஸிஜீயை ஒரு முறையாவது அங்கிருக்கும் சேவிகாக்கள் பார்த்துவிட வேண்டுமென்ற இச்சையையும் வெளிப்படுத்தி உணர்வுபூர்வமான கடிதம் ஒன்றை எழுதி இருந்தனர்.
சேவிகாக்களை தனது குழந்தைகளாக பாவிக்கும் தாயுள்ளம் கொண்ட மௌஸிஜீயால் தனது மகளின் வேண்டுதலை எவ்வாறு மறுக்க முடியும். எனவே, தனது சுயபாதுகாப்பை பற்றி கூட கவலை கொள்ளாமல் தனது கையில் ஒரு குறுவாளை எடுத்துக்கொண்டு மற்றொரு சேவிகாவையும் கூட்டிக்கொண்டு பாகிஸ்தானுக்கு சென்றார். நள்ளிரவில் பாகிஸ்தானிற்கு சுதந்திரம் கிடைப்பதை அங்கிருப்பவர் கொண்டாடும் வேளையில் ஒரு வீட்டின் மாடியில் 1200 சேவிகாக்கள் கூடியிருக்க, புனிதக் கொடியாம் காவிக்கொடி முன்னில் மௌஸிஜீ அனைத்து பெண்களிடமும் தர்மத்தை இழக்காது இருக்கவும், மானத்தை காத்துக்கொள்ள துர்கையாக மாறும்படியும், பாரதத்தில் சேவிகாக்களின் வீடுகள் அவர்களுக்காக திறந்தே இருக்கும் என்று நம்பிக்கை தந்து எழுச்சியுரையாற்றினார்.
அந்த எழுச்சியுரையை கேட்ட பெண்கள் அனைவரும் புனிதக் கொடியாம் காவிக்கொடியின் முன்னிலையில் குறுவாளினை கொண்டு தங்களது கைகளை கீறி காவிகொடிக்கு தங்களது ரத்தத்தை சமர்ப்பித்து ரத்த திலகமிட்டு தர்மத்தை காப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அந்த காட்சியானது சித்தூர் கோட்டையில் ராணி பத்மினியின் சாகசத்திற்கு இணையானதாக இருந்தது. ஹிந்து தர்மத்திற்கும், பாரதத்திற்கும் என்றுமே சேவிகாக்கள் தங்களது வாழ்வையே சமர்ப்பணம் செய்துள்ளார்கள். பெண்களை பத்மினியாகவும், ஜீஜீ மாதாவாகவும் உருவாக்கி வரும் சமிதியின் ஸ்தாபகர் காலத்தை கடந்தும் சேவிகாக்களின் மனதில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்.