துர்கா பூஜையை முன்னிட்டு கொல்கத்தாவில் விழாவில் மம்தா பானர்ஜி சிலையும் இடம்பெற இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு துர்கா பூஜையை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். கொல்கத்தா முழுவதும் பல்வேறு இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு பிரமாண்ட துர்கை அம்மன் சிலைகளை நிறுவி வழிபடுவர்.
இந்த ஆண்டுக்கான துர்கா பூஜை அடுத்த மாதம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி துர்கை அம்மன் சிலையுடன், மம்தா பானர்ஜி சிலையையும் நிறுவ, விழா குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக களி மண் சிலைகள் செய்யும் பிரபல சிற்பி மின்டு பால், மம்தாவின் சிலையை வடிவமைக்க உள்ளார்.
இது குறித்து பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறியதாவது: இது, துர்கை அம்மனை அவமானப்படுத்துவதை போல உள்ளது. ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் இந்த செயலை மம்தா தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.