விஜயதசமி உரையின் தமிழாக்கம்

0
1544
।।ॐ।।
 
 
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்
 
பரமபூஜனீய சர்சங்கசாலக்
டாக்டர் ஸ்ரீ மோகன் ஜி பாகவத் அவர்களின்
விஜயதசமி உரை
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 15, 2021
 
ஹிந்திஉரையின் தமிழாக்கம்
 
————————————————————————————————
அந்நியரிடம் இருந்து விடுதலை பெற்ற 75வது ஆண்டு இது. ஆகஸ்ட் 15 1947 அன்று நாம் சுதந்திரம் பெற்றோம். தேசத்தின் சக்கரத்தை முன்னோக்கி செலுத்தும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டோம். ஸ்வா-தீனத்தாவில் இருந்து (Independence / Self-rule) ஸ்வ-தந்திரத்தை (self model of governance) நோக்கிய நமது பயணம் அப்போது துவங்கியது
ஒரே இரவில் நாம் இந்த சுதந்திரத்தை பெற்றுவிடவில்லை என நம் அனைவருக்கும் தெரியும். நமது பாரம்பரியத்தை மையப்படுத்திய சுதந்திர பாரதம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற சிந்தனையோடு, இந்த மிகப்பெரும் பூமியில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பலதரப்பட்ட சாதி மற்றும் சமுதாயத்தை சேர்ந்த எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகமும், தவமும் செய்துள்ளார்கள்.
 
18ம் நூற்றாண்டிலேயே, பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக மக்கள் ஆயுதமேந்தி போராடினார்கள். தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் தலைமையில் மக்கள் அணி திரண்டார்கள். அவரது சம காலத்தில் வாழ்ந்த வேலு தம்பி தளவாய், குண்டரா (கேரளா) எனும் ஊரில் பிரிட்டிஷாருக்கு எதிராக ஆயுதமேந்தி போராட அறைகூவல் விடுத்தார். அது குண்டரா அறைகூவல் என அழைக்கப்படுகிறது. பிரிட்டிஷ்காரனை நமது மண்ணுக்குள் விட்டால் , அவன் அரிசி மற்றும் உப்புக்கு வரி விதிப்பான், அதன் விலை உயரும் என கூறினார். இது நடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு, பிரிட்டிஷ்காரர்களை விரட்ட, கைகளில் உப்பை எடுத்தார் காந்திஜி. பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டமாக இது மாறியது
 
அடிமைத்தளத்தில் இருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கில், சமுதாயமும் இவர்கள் போன்ற மாவீரர்களுடன் நின்று போராடியது. அதனால் தான் அஹிம்சை போராட்டம் மற்றும் ஆயுதமேந்திய போராட்டம் ஆகிய இரண்டும், சுதந்திரம் எனும் உறுதி லட்சியத்தை நோக்கி கூட்டாக போராட முடிந்தது.
 
இருப்பினும், ஆங்கிலேயர்களின் நயவஞ்சகம் காரணமாக நமது உணர்வில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள பிளவுகள் மற்றும் நமது சுயதர்மம், தேசம், சுதந்திரம் குறித்து சரியான அர்த்தத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் ஏற்பட்ட பிரிவினையின் வடு, ஒவ்வொரு குடிமகனின் மனதில் இருந்து இன்னமும் ஆறவில்லை. நமது ஒட்டு மொத்த சமுதாயமும், குறிப்பாக இளைய சமுதாயம் நமது வரலாற்றை புரிந்து கொண்டு , எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். யார் மீதும் வெறுப்பு ஏற்படுத்துவதற்காக இதை கூறவில்லை, மாறாக வரலாற்றை நினைவில் கொள்வதன் மூலம், நம்முள் பேதங்களை வளர்த்து அதன் மூலம், முன்பு நடந்த கொடுமைகள் மீண்டும் நிகழ்த்த துடிப்போரின் சதியை முறியடித்து, நமக்குள் ஒற்றுமையையும், பிணைப்பையும் மீண்டும் ஏற்படுத்தவே கூறுகிறேன்.
 
சமூக நல்லிணக்கம்
சமத்துவமான, பேதம் பாராத சமுதாயம் அமைவது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பிற்கு அவசியம். பழமையான சாதி அடிப்படையிலான பிரிவினைகள் இதற்கு தடையாக உள்ளது. இந்த தீமையை அகற்ற, பல வழிகளில், பல சீர்திருத்தங்கள், வெவ்வேறு தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் இதை முற்றிலும் நீக்க முடியவில்லை. சமூகத்தில் சாதி உணர்வு சமுதாயத்தில் இன்னமும் நிலவி வருகிறது. ஆக்கபூர்வமான விவாதங்கள் மூலம் இந்த பேதங்களை குறைத்து, ஒற்றுமையை ஏற்படுத்த விரும்புவர்களை விட, அதற்கு எதிராக செயல்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த விவாதங்கள் சரியான திசையில் செல்வதை உறுதி செய்ய வேண்டும். சமத்துவம் மற்றும் அன்பான சமுதாய கட்டமைப்பு ஏற்பட வேண்டும் என விரும்புவோர், இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். குடும்பங்களுக்குள்ளும், சமுதாயங்களுக்குள்ளும் தொடர்புகள் அதிகரிக்க வேண்டும். பல குடும்பங்களுக்குள் உருவாகும் பரஸ்பர அன்பு, சமுதாய ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை மேம்படுத்தும். சமத்துவமான, அமைதியான சமுதாயத்தை உருவாக்க, சங்க ஸ்வயம்சேவகர்கள் பல்வேறு சமுதாய நல்லிணக்க வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 
 
சுதந்திரமும், தேசிய ஒருமைப்பாடும்
 
பாரதத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் சுதந்திரம் என்பதே நம் நாட்டின் மைய கோட்பாடாக பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. இதற்காக பலர் ரத்தம் மற்றும் வியர்வை சிந்தியுள்ளார்கள். இந்த ஆண்டு குரு தேஜ் பகதூர் ஜி மஹராஜின் 400வது பிறந்த ஆண்டாகும். அந்த காலத்தில் நம் நாட்டில் நிலவி வந்த மதவெறிக்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்தார். மத சுதந்திரம் மற்றும் மத பழக்க வழக்கங்களை எவ்வித அச்சமும் இன்றி கடைபிடிக்கும் உரிமையை மீட்க போராடியதால் கொல்லப்பட்டார். அவர் ஹிந்துக்களின் கவசமாக போற்றப்பட்டார்
 
பாரதத்தின் பாரம்பரியம் மற்றும் பரந்த மனப்பான்மையுடன் கூடிய மத சுதந்திரத்தை காப்பாற்ற இந்த மண்ணில் உதித்த நட்சத்திர வீரர்களில், இவர் சூரியன் போன்றவர். இவரை போன்று தாய்நாட்டிற்காக, அனைத்தையும் உள்ளடக்கிய பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாத்து, தழைக்க செய்ய தங்கள் வாழ்க்கையே தியாகம் செய்த நம் முன்னோர்கள் தான் நம் நாட்டின் அஸ்திவாரம்
 
பாரதீய எண்ண ஓட்டத்தில் சுதந்திரமான வாழ்க்கை என்பதற்கு சிறப்பு அர்த்தம் உண்டு. துறவி ஞானேஷ்வர் மகாராஜ் தனது பிரார்த்தனையில்
 
‘தீயவர்களின் தீமை அழிந்து,
அவர்கள் நற்குணம் கொண்டவர்களாக மாற வேண்டும்.
இருள் அகன்று, பிரகாசம் தோன்றி
அனைவரின் நல்ல எண்ணங்களும் நிறைவேற வேண்டும்’
 
என வேண்டுகிறார்.
 
இதே கருத்து ரவீந்திரநாத் தாகூரின் “Where the mind is without fear” என்று தொடங்கும் பிரசித்தி பெற்ற கவிதையில் சொல்லப்பட்டிருக்கிறது. சிவ மங்கல் சிங் ’சுமன்’ அதை ஹிந்தியில் மொழியாக்கம் செய்தார்; அதன் தமிழ் மொழியாக்கம்
 
 
“பயமே இல்லாத மனம், தலை நிமிர்ந்து நடைபோடமுடிகிற ஊர்,
ஞானம் தடையின்றி கிடைக்கிற சூழல்,
விசாலமான பூமியை குறுகிய உள்ளூர் பிரச்சினைகளால் துண்டு துண்டாக்கும் செயல் நடைபெறா நிலை,
சொல்லப்படும் ஒவ்வொரு சொல்லும் இதயத்தின் அடியாழத்திலிருந்து எழுகிற நிலை,
ஓய்வறியா உழைப்பு என்னும் நதி பூரணத்துவம் நோக்கி எங்கும் பொங்கி பெருக்கெடுக்கிற காட்சி,
சீரிய சிந்தனைப் பிரவாகம் பயனற்ற பழக்கங்கள் எனும்
பாலைவனத்தில் பாய்ந்து வற்றிப் போய் விடுவதில்லை என்ற நிலை,
சிந்தையும் செயலும் உன்னை அடியொற்றிய பாதையில்
அமையும் நிலை என்று இவை எல்லாம் கொண்ட சொர்க்கம் காண,
எந்தையே, இந்த பாரதம் விழித்தெழட்டும்.”
 
நம் நாட்டின் இன்றைய சூழலுடன் சுதந்திர இந்தியாவின் எண்ண ஓட்டத்தை ஒப்பிடுகையில், ஸ்வா-தீனத்தாவில் இருந்து (Independence / Self-rule) ஸ்வ-தந்திரத்தை (self model of governance) நோக்கி நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம். பாரதத்தின் வளர்ச்சி மற்றும் புகழ், உலகில் உள்ள சில விஷம சக்திகளின் சுயநலத்திற்கு ஆபத்தாக உள்ளது. இவர்களுக்கு சில வெளிநாடுகளிலும் ஆதரவு கிடைக்கிறது. சனாதன தர்மத்தை பின்பற்றி உலகிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு மதம் பாரதத்தில் மேலும் தழைக்கும் போது, இந்த சுயநல சக்திகள் காணாமல் போகும். தர்மத்தை மையப்படுத்தி உலகில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கம் ஏற்படுத்துவதில் பாரதத்தின் சக்தி அளப்பரியது. எனவே இதை தடுக்க பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
 
இதனாலே தான் உலகத்தை மட்டுமல்லாது நம் நாட்டு மக்களையும் பொய்யுரைகள் மூலம் குழப்பி வருகிறார்கள். நம் நாட்டு மக்களுக்கு எதிராகவும், குறிப்பாக நம் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரதத்திற்கு புத்துணர்வூட்டி வரும் சமூக-கலாச்சார அமைப்புகளுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்கிறார்கள். தோல்வியின் விளிம்பில் நிற்கும் அவர்கள், தங்கள் நடவடிக்கைகளை சில நேரங்களில் வெளிப்படையாகவும், சில நேரங்களில் மறைமுகமாகவும் செய்கிறார்கள். இவர்களின் சதியை புரிந்துக் கொண்டு நம்மையும், சமுதாயத்தையும் காக்க வேண்டும்.
 
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இந்த வஞ்சக புத்தி கொண்டவர்கள், தங்கள் நோக்கை அடைய, எப்போதும் போல, புதிது புதிதாக ஏதேனும் விஷயத்தை கிளப்பிக் கொண்டே இருப்பார்கள். ஆதிக்க வெறி கொண்ட இவர்கள், மக்களின் அறியாமையை தவறாக பயன்படுத்திக்கொண்டு , அவர்கள் மத்தியில் தவறான விஷயங்கள் மற்றும் பல கட்டுக்கதைகளையும் பரப்புகிறார்கள். சமுதாயத்தில் அமைதியை கெடுத்து மோதலை ஏற்படுத்தும் இவர்களின் சதித் திட்டங்கள் அம்பலமாகி வருகின்றன
சமுதாயத்தில் இருக்கும் அறியாமை, தெளிவின்மை, சந்தேகம் இவற்றுடன் சுயநலம் நிலவி வரும் அதே வேளையில், உலகில் நடைபெற்று வரும் சில நிகழ்வுகள் இவர்களுக்கு உத்வேகம் மற்றும் பலத்தை அளிக்கிறது. எவ்வித கட்டுப்பாற்கும் உட்படாத, ரகசியமாக செயல்பட்டு வரும் பிட்காயின் போன்ற க்ரிப்டோ கரன்சிகள் உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவல்லது. எவ்வித ஒழுங்குமுறையும் இன்றி ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் ஒளிபரப்புகள், யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் உள்ளது. கொரோனா பேரிடர் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் அறிமுகமாகியுள்ளன. பள்ளி மாணவர்கள் மொபைல் போனில் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. ஓ.டி.டி. தளங்களுக்கு ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு விதிக்கவிட்டால், இவை எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கணிக்க முடியாததாக உள்ளது. ஆனால் தேச விரோத சக்திகள், இவற்றை எவ்வாறெல்லாம் பயன்படுத்துவார்கள் என்பது தெரிந்த விஷயம் தான். எனவே ஓ.டி.டி. தளங்களை ஒழுங்குமுறைக்குள் கொண்டு வருவதை அரசு உடனே செய்ய வேண்டும்.
 
குடும்ப உறவுகள்
 
அதே நேரம் இந்த ஆபத்துக்களை முறியடிக்க, நல்லது, கெட்டதை பகுத்தறிய, நம் வீட்டில் இருந்தே வேலைகளை துவக்க வேண்டும். பல சமுதாய சீர்திருத்தவாதிகள், சமுதாய பெரியவர்கள், ஆன்மீகவாதிகள் இதற்காக தங்களையே அர்பணித்துள்ளார்கள். நாம் நம் குடும்பங்களில் இது தொடர்பாக ஆரோக்கியமான விவாதம் செய்ய வேண்டும். சங்க ஸ்வயம்சேவகர்கள் ஆங்காங்கே குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். மனதை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். நம் நாட்டின் கலாச்சாரத்தின்மீதும், நம்பிக்கைகள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதலை முறியடிக்க இது ஒன்றே வழி
 
கொரோனாவுக்கு எதிரான யுத்தம்
 
75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடி வரும் நாம், கொரோனா 3வது அலை வந்தால் சமாளிக்கவும் தயாராக உள்ளோம். கொரோனா இரண்டாவது அலையின் போது சமுதாயம் மீண்டும் ஒன்றிணைந்து போராடியது. இரண்டாவது அலை மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தியது, இளைஞர்களை கூட விட்டு வைக்கவில்லை. இருப்பினும் மனித குலத்தை காக்க, சுயநலமின்றி அர்ப்பணிப்போடு களமிறங்கிய ஆண்களும், பெண்களும் பாராட்டுகளுக்கு உரியவர்கள். ஆபத்து இன்னமும் விலகி விடவில்லை. கொரோனாவிற்கு எதிரான போர் தொடர்கிறது, இருப்பினும் மூன்றாவது அலை வந்தால் சமாளிக்க தயாராக உள்ளோம். தடுப்பூசி அதிகளவில் செலுத்தப்பட்டு வருகிறது, இது விரைவில் நிறைவு பெற வேண்டும். சமுதாயம் விழிப்புடன் இருக்கிறது. சங்க ஸ்வயம்சேவகர்கள், பல நல்ல உள்ளங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து, நெருக்கடியை எதிர்கொள்ள பயிற்சி பெற்றுள்ளார்கள். நாம் அரசு விதித்துள்ள கொரோனா பாதுகாப்பு நடைமுறையை கடைபிடித்து, எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக அவசியம்
 
அரசும் சரி, மக்களும் சரி மீண்டும் ஒரு ஊரடங்கிற்கு தயாராக இல்லை என தோன்றுகிறது. முதல் இரண்டு அலைகளின் போது போடப்பட்ட ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. முந்தைய நஷ்டங்களை சமாளிக்க, பொருளாதாரத்தில் முன்னேற வேகமாக செயல்பட வேண்டியுள்ளது. அதை அடைவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இதை நிறுத்தாமல் செய்ய வேண்டும். கொரோனா அச்சுறுத்தல் இருக்கும் போதிலும் நம் நாட்டு பொருளாதாரம் மீண்டு வருகிறது. பல துறைகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. அரசானது அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பையும் உறுதி செய்தால், இக்கட்டான நிலையை நாடு சமாளித்து விடும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
 
கொரோனாவினால், நமது பாரம்பரிய முறைகளின் மகத்துவம் ஆணித்தரமாக புரிந்துள்ளது. நமது ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆயுர்வேதம் ஆகியவை கொரோனாவுக்கு எதிராக போராட உதவியது. இந்த நாட்டின் ஒவ்வொரு மூலை, முடுக்கில் வாழ்பவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை, குறைவான கட்டணத்தில் கிடைத்திட வழிகள் ஏற்படுத்திட வேண்டும். பரந்து விரிந்த, ஜனநெருக்கடி மிக்க நம் நாட்டில், மருத்துவ வசதி என்பது ஒரு சிகிச்சை முறையாக மட்டுமில்லாமல், ஆயுர்வேதம் குறிப்பிடுவது போல, உடல்நலம் பேணுவதை குறிக்கோளாக வைக்க வேண்டும்
 
ஆரோக்கியம் குறித்த பாரதத்தின் கண்ணோட்டம்
 
பாரம்பரியத்தின் அடிப்படையிலான சரிவிகித உணவு, தூய்மையான சுற்றுப்புறம், உடற்பயிற்சி, தியானம் ஆகியவை நம் உடலை வலிமையாக்குவதோடு, தொற்றை எதிர்த்து போராடவும் உதவுகிறது. நமது பாரம்பரிய வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்த ஒன்றாகும், தெய்வீகத்துடன் நம்மை தொடர்பு கொள்ள செய்வதாகும்.
 
கொரோனா நோய் தொற்றின் போது பொது நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகள் மீது கட்டுப்பாடுகள் இருந்தன. அவற்றை நாம் எளிமையாக நடத்த வேண்டியிருந்தது. வெளிப்படையான உற்சாகம் கொண்டாட்டத்தில் குறைவாக இருந்தது. ஆனால் பணம், சக்தி விரயம் ஆவது தவிர்க்க முடிந்தது. சுற்றுசூழலின் மீதும் சாதகமான பலனை நாம் பார்க்க முடிந்தது. இப்போது சூழல் முன் போல திரும்பினாலும், முந்தைய அனுபவங்கள் மூலம் கிடைத்த பாடங்களின் அடிப்படையில், நமது அடிப்படை வாழ்க்கையை அதிக செலவு, ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையாக தொடர வேண்டும். சுற்றுசூழலுடன் இணைந்த வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் பலரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சங்க ஸ்வயம்சேவகர்களும் சுற்றுசூழல் மேம்பாடு, நீர் சேமிப்பு, பிளாஸ்டிக் தவிர்ப்பு, போன்ற பழக்கங்களை, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
 
ஆயுர்வேதம் மற்றும் பிற சிகிச்சை முறைகள் கொண்டு, கிராமங்களில் ஆரம்ப சுகாதார வசதிகளை ஏற்படுத்த முடியும். இரண்டாம் கட்ட சிகிச்சைகளை மண்டல அளவில் ஏற்படுத்தி விட்டால், அதற்கு அடுத்தகட்ட சிகிச்சைகளை மாவட்ட அளவிலும், சிறப்பு சிகிச்சைகளை நமது பல்நோக்கு மருத்துவமனைகள் மூலம் வழங்கிட முடியும். எந்த மருத்துவ முறை சிறந்தது எனும் வாதத்தை விடுத்து, அனைத்து சிகிச்சை முறைகளையும், தகுந்த விகிதத்தில் அளித்து , அனைத்து பொதுமக்களுக்கும் குறைந்த கட்டணத்தில், தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்
 
பொருளாதாரம் பற்றி நமது பார்வை
 
நிலவும் பொருளாதார சூழல் பல சவால்களை சந்தித்து கொண்டிருக்கிறது. அவற்றை சமாளிக்கும் தீர்வுகள் மற்ற நாடுகளில் இல்லை. இயந்திரமயமாக்கல், அதனை ஏற்பட்ட வேலையிழப்பு, நெறியற்ற தொழில்நுட்ப வளர்ச்சியால் குறைந்து போன மனித நேயம், பொறுப்பற்றவர்களிடம் குவிந்துள்ள சக்தி ஆகியவை சில உதாரணங்கள். முழு உலகமும் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியின் புதிய உத்திகள் போன்றவற்றில் பாரதத்தின் வழிகாட்டுதலை நம்பிக்கையோடு எதிர்பார்த்திருக்கிறது.
 
நமது இந்த பொருளாதார பார்வை, நமது தேசத்தின் நீண்ட நெடிய வாழ்க்கை அனுபவங்களை, உலகில் நடைமுறையில் இருக்கும் பொருளாதார கோட்பாடுகளுடன் பொருத்துகிறது.
 
இன்பத்தின் முக்கிய மூலம், பொருள் அல்ல. இன்பம் வெறும் உடலினுடையது மட்டும் அல்ல. இன்பம் மனிதனின் உள்ளே இருப்பதாக அறியப்படுகிறது.உடல், மனம், அறிவு, ஆன்மா, இவை நான்கிற்கும் ஒரு சேர இன்பம் தரக் கூடியதும் , மனிதன், இயற்கை, ஒட்டுமொத்த உயிரினம், உயிரற்றவை, மேலும் பிரபஞ்சம், இவற்றை ஒரு சேர மேன்மை அடைவித்து, அவற்றை இறை நிலைக்கு கொண்டு செல்லக்கூடியதாகவும் இருக்க வேண்டும். பொருள், இன்பம் இவற்றை அறத்தோடு நெறியுடன் நடத்தி, மனித குலத்தின் உண்மையான சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டு, ஏற்படுத்தும் பொருளாதாரத்தையே நாம் சிறந்ததாக கருதுகிறோம். நமது பொருளாதார பார்வையில் அதீத நுகர்வுக்கு முக்கியத்துவம் இல்லை. அளவோடு செலவிடுவதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வளங்கள், சாதனங்களுக்கு மனிதன் ஒரு பொறுப்பாளி மட்டுமே, அவற்றின் முதலாளி அல்ல. அனைத்தும் இயற்கையின் அங்கமே ஆகும். தனது தேவைக்கு மட்டும் அவற்றை உபயோகித்து, அதோடு அவற்றை பாதுகாத்து வளர்ப்பதும் மனிதனுடைய கடமையாகும். இதுவே நமது கோட்பாடு.
 
இந்த பார்வை ஒரு சார்புடையது அல்ல. உற்பத்தியாளர், வியாபாரி, முதலாளி, தொழிலாளி, இவர்களில் யார் ஒருவர் சார்புடையதும் அல்ல, ஒருவருக்கு மட்டும் லாபம் தருவதும் அல்ல. மேற்கண்ட அனைவரது நலம் மற்றும் நுகர்வோர் நலம் குறித்தும் ஆராய்ந்து, ஒருவரோடு மற்றவர் ஆக்கபூர்வ தொடர்பில் இருக்க வேண்டும் என்ற நோக்கோடு கூடியது. அதன் அடிப்படையில் ஏற்பட்டது . இவற்றின் அடிப்படையில், உலகில் நாம் படித்த பாடங்களை, அவற்றோடு இணைந்து நல்லதொரு புதிய பொருளாதார ஏற்பாட்டை நாம் நம் நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும். அது இன்று மிகவும் அவசியமானதாகும் . ஒருங்கிணைந்த மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியின் புதிய மற்றும் நீடித்த சக்தியின் வெளிப்பாடு சுதந்திரத்தின் இயல்பான நிகழ்வே ஆகும்.
 
இது சுய என்பதின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விஷயமும் ஆகும்
 
 
ஜனத்தொகை கொள்கை
 
தேசத்தின் வளர்ச்சி குறித்து சிந்திக்கையில் மேலும் ஒரு சவால் நம் முன்னே வருகிறது. அது குறித்து பலரும் கவலை கொள்வதாகவே தெரிகிறது. அது தான் வேகமாக வளர்ந்து வரும் நாட்டின் ஜனத்தொகை. இது வருங்காலத்தில் பல சவால்களை ஏற்படுத்தும். . ஆகவே அது குறித்து நாம் தீர ஆராய வேண்டியுள்ளது. 2015ம் ஆண்டு ராஞ்சியில் நடந்த அகில பாரத செயற்குழுவில் ஜனத்தொகை அதிகரிப்பின் சமமற்ற தன்மையும் அதன் சவால்களும் குறித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
 
இது தொடர்பான கொள்கை முடிவுகளை அமல்படுத்துகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதுடன், நடுநிலையான நடவடிக்கையும் தேவை. இன்றளவும் சமமற்ற ஜனத்தொகை அதிகரிப்பின் காரணமாக, நாட்டின் சில பகுதிகளில் உள்ள ஹிந்து சமுதாயத்தின் மீது தாக்குதல் நடைபெறுவதும், அச்ச உணர்வோடு வாழும் அவர்கள், வேறு இடங்களுக்கு குடிபெயர்வது குறித்த செய்திகள் வருகின்றன.
 
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலுக்கு பிந்தைய கலவரத்தில் ஹிந்து சமுதாயத்தின் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. வன்முறையாளர்கள் மீது அரசின் கரிசனமும், ஜனத்தொகையின் சமமற்ற வளர்ச்சியும் தான் இதற்கு காரணம். ஆகவே அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு கொள்கை தேவை. நமது குறுகிய இனவாத சுயநலத்திற்கு மயங்காமல், ஒட்டுமொத்த தேசத்தின் நலனை தலையாயாக கொண்டு நடப்பதற்கு நாம் அனைவரும் பழகி கொள்ள வேண்டும்.
 
 
வடமேற்கு எல்லை
 
மேலும் ஒரு சூழ்நிலை நம் முன்னே வந்துள்ளது. அது முற்றிலும் எதிர்பாராதது அல்ல, ஆனால் எதிர்பார்த்ததை விட விரைவாகவே வந்துள்ளது. அது ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு அமைந்தது தான். அவர்களின் முந்தைய நடவடிக்கைளான அடிப்படைவாதம், மதவெறி தாக்குதல்கள், இஸ்லாத்தின் பேரில் நடத்திய தீவிரவாதம் தாலிபான் குறித்து கவலை கொள்ள போதுமான காரணங்கள் உள்ளன. இப்போது சீனா, பாகிஸ்தான், துருக்கி ஆகியவை ஒரு நெறியற்ற கூட்டணியை தாலிபானுடன் அமைத்துள்ளன. அப்தலிக்கு பிறகு மீண்டும் ஒருமுறை நமது வடமேற்கு எல்லையில் கவலை தரக்கூடிய சூழல் உருவாவதை நாம் பார்க்க முடிகிறது.
 
தாலிபான்கள் சில நேரம் அமைதி வேண்டியும், சில நேரம் காஷ்மீர் குறித்தும் மாறி மாறி பேசுகிறார்கள். விஷயம் என்னவென்றால், நாம் கவலையற்று இருக்க முடியாது. நமது ராணுவம் எல்லை பகுதிகளிலும் முழுவதுமாகவும், தயாராகவும், விழிப்போடும் இருப்பது அவசியமாக உள்ளது. அதே நேரத்தில், உள்நாட்டிலும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நிலைத்திருக்க அரசும், சமுதாயமும் கவனத்தோடும், தயார் நிலையிலும் இருக்க வேண்டியுள்ளது.
 
பாதுகாப்பில் தற்சார்பு, சைபர் பாதுகாப்பு போன்ற புதிய விஷயங்களில் உயர்நிலையை அடைய நமது முயற்சிகளின் வேகத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. இவ்விஷயத்தில் நாம் மிக விரைவாக சுயசார்பு அடைய வேண்டியுள்ளது. மடைமாற்றம் நிகழலாம் என்று நம்பிக்கையோடு பேச்சுவார்த்தைக்கு வழி திறந்திருந்தாலும், எல்லா சூழ்நிலைக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
 
இந்நேரத்தில் ஜம்மு-காஷ்மீர் மக்களின் உணர்வுகள் , பிற மாநில மக்களோடு ஒன்றாக கலப்பதற்கு, வேண்டிய முயற்சிகளின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.
 
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள், தேசிய சிந்தனை கொண்ட மக்கள் மீது குறிப்பாக ஹிந்துக்களை குறி வைத்து தாக்குதல் நடத்துவதை மீண்டும் தொடங்கியுள்ளார்கள். பல குடிமக்களின் நம்பிக்கையை உடைப்பதற்கும் , மேலும் தங்களது தீவிரவாத செய்லகளை மீண்டும் கட்டமைப்பைதற்கும் முயற்சிக்கிறார்கள்.
 
அங்குள்ள மக்கள் தைரியமாக இவற்றை எதிர்க் கொள்கிறார்கள், நிச்சயம் அவற்றை முறியடிப்பார்கள். தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் , கட்டமைப்புகள் ஆகியவற்றை முறியடித்து, அவற்றை அழிக்கும் நடவடிக்கைகள் மேலும் வேகம் எடுக்க வேண்டியுள்ளது.
 
 
ஹிந்து ஆலயங்கள்
 
தேசத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தேசத்தின் ஒற்றுமை, பாதுகாப்பு, வளர்ச்சி, வளம் மற்றும் அமைதிக்கு அபாயம் ஏற்படுத்தும் பல்வேறு விஷயங்களோடு ஹிந்து சமுதாய மக்களுடைய சில மனக்குறைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியம். ஹிந்து ஆலயங்களின் தற்போதைய நிலை அத்தகைய குறைகளில் ஒன்று. தெற்கு பாரதத்திலுள்ள ஹிந்து ஆலயங்கள் மாநில அரசுகளின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளன. நாட்டின் மற்ற பகுதிகளில், சில ஹிந்து ஆலயங்கள் அரசாங்கத்தாலும், சில ஆலயங்கள் கூட்டுக் குடும்ப அறக்கட்டளை மூலமாகவும், சில ஆலயங்கள் கூட்டுறவு பதிவு சட்டத்தின் படி அறக்கட்டளைகளாலும் நிர்வகிக்கப்படுகின்றன.
 
சில ஆலயங்கள் எந்த நிர்வாகமும் இல்லாமல் உள்ளன. கோவிலுக்கு சொந்தமான பல அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் துஷ்ப்ரயோகம் செய்யப்படும் நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஒவ்வொரு ஆலயத்தின் மூல விக்கிரக ஆகம விதிப்படி நியமங்கள் உள்ளன. அந்த ஆகம விதிகளில் தலையீடும் விதி மீறலும் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஹிந்துக்களிடையே எந்த ஜாதி மற்றும் பிரிவு அடிப்படையில் பாகுபாடின்றி அனைவரும் ஆலயத்திற்குள் நுழையவும் வழிபடவும் சூழ்நிலை எல்லா ஆலயங்களிலும் தற்பொழுது இல்லை. எல்லா ஹிந்துக்களும் ஆலயத்திற்குள் நுழையவும் தரிசனம் செய்யவும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். பல ஆலயங்களில் அந்த ஆலயத்திற்கான ஆகம விதிமுறைகள் ஹிந்து தர்ம குருமார்களை கலந்து ஆலோசிக்காமலும் ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமலும் எதேச்சதிகாரமாக எடுக்கப்படுவதை நாம் காண்கிறோம்.
 
ஹிந்து ஆலய இடங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தும், ஹிந்து ஆலய நிர்வாகத்தை பக்தர்கள் அல்லாதவர்கள் மற்றும் ஹிந்து மத நம்பிக்கை அற்றவர்கள் கைகளிலும் “மதச்சார்பற்ற” அரசு கொடுக்கும் அநீதி உடனடியாகக் களையப்பட வேண்டும். ஹிந்து ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஹிந்து பக்தர்களிடமும், ஆலய சொத்துக்கள் ஹிந்து சமுதாய மக்கள் நலனிற்கே பயன்பட வழிவகை செய்வது மிக அத்தியாவசியமாகும். ஹிந்து சமுதாயத்தின் சக்திக்கேற்ப ஆலய நிர்வாகத்தை சீர்படுத்துவதோடு, மீண்டும் நமது ஹிந்து ஆலயங்கள் சமுதாய-கலாச்சார மையமாக திகழவும் திட்டம் தீட்டப்படவேண்டியது அவசியம்.
 
நமது ஒற்றுமையின் ஆதாரம்
 
அரசாங்கம் மற்றும் நிர்வாகத்துறையில் பணி புரிபவர்கள் தங்கள் பணி செய்தாலும் கூட சமுதாயத்தின் மனரீதியான, உடல்ரீதியான மற்றும் ஆன்மீக ரீதியான பங்களிப்பு தேசியப் பணியில் மிக முக்கியம். சமுதாய முனைப்பினால் மட்டுமே சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். மேற்சொன்ன சவால்களை சந்திக்க சமுதாய விழிப்புணர்வுடன் கூட சமுதாயத்தின் சொல் செயல் ஆகியவற்றில் பழக்க வழக்க மாற்றும் வர வேண்டியது அவசியம். ஒட்டுமொத்த சமுதாய விழிப்புணர்வில் நமது சனாதன ராஷ்ட்ரத்தின் அழிவில்லா சிந்தனை பின்னிப் பிணைய வேண்டும். பாரதத்தில் உள்ள பல்வேறு மொழி, தர்மங்கள் மற்றும் பிராந்தீய வழிமுறைகள் போற்றப்பட்டும் ஒரே அங்கமாக அடையாளம் காணப்பட்டும் அனைவருக்கும் சமரீதியிலான முன்னேற்ற வாய்ப்புகள் ஏற்படுத்துவதே பாரதிய கலாச்சாரமாகும். நமது செயல்பாடுகள் இந்த பண்பாட்டை ஒட்டியே இருக்க வேண்டும்.
 
அரசியல், மத, ஜாதி, மொழி மற்றும் பிராந்தீய குறுகிய கண்ணோட்டத்தில் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும். பாரத தேசத்திற்கு வெளியே இருந்த வந்த மதங்களைச் சார்ந்தவர்கள், நம்முடைய மத நம்பிக்கைகள் வேறுபட்டாலும் நாம் வழிபடும் முறை வேறுபட்டாலும் நாம் அனைவருக்கும் ஒரே நாகரிகம், ஒரே கலாச்சாரம் மற்றும் ஒரே முன்னோர்கள் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புரிதலே நமது மதச் சுதந்திரத்திற்கான அடிப்படை. ஒவ்வொருவரும் தன் விருப்பத்திற்கேற்ப வழிபாட்டு முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ள சுதந்திரம் உள்ளது.
 
அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுடன் பல்வேறு மதப் பிரிவுகளும் நமது நாட்டிற்குள் வந்தது என்பது வரலாற்று உண்மை. ஆனால் இன்று அந்த மதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பாளர்களின் வம்சமாக இல்லாமல் அந்த ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்த ஹிந்து முன்னோர்களின் வம்சமாக உள்ளனர். நமது முன்னோர்களே நமக்கெல்லாம் பொதுவான முன்னோடி. இந்த எண்ணம் இருப்பதால் தான் இந்த நாட்டில் ஹசன்கான் மேவாடி, ஹாகிம்கான் சூரி, குடபக்ஷ், கவுஸ்கான் மற்றும் புரட்சியாளர் அஷஃபாகுல்லாஹ்கான் போன்றவர்கள் தோன்றினார்கள். இவர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.
 
மத ரீதியான தாக்குதல், தான் மட்டுமே உயர்ந்தவன் என்கிற எண்ணம் மற்றும் குறுகிய சுயநல ஆர்வம் காரணமாக ஏற்படும் பிரிவு மனப்பான்மையை உதறித் தள்ளும் பொழுதுதான், பாரதத்தின் சனாதன ஹிந்து மதக் கலாச்சாரம் மற்றும் அனைவரையும் ஏற்றும் கொள்ளும் ஹிந்து மதத்தின் பரந்த ம்னப்பான்மை பற்றி புரிதல் ஏற்பட்டு, நமது பாரத நாடு மட்டுமே இன்று உலகைப் பீடித்திருக்கும் பல கொடிய நோய்களான பயங்கரவாதம், சகிப்புத்தன்மையின்மை, மோதல் மற்றும் ஆக்கிரமிப்பு எண்ணம் ஆகியவற்றிக்கு தீர்வு அளிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்.
 
ஒருங்கிணைந்த ஹிந்து சமுதாயம்
 
வரலாற்றிலோ, தற்காலத்திலோ இருதரப்பிற்கும் மனக்கசப்பு ஏற்படும் வகையில் நிகழ்வோ, அநீதியோ, வன்முறையோ, பிரிவினைவாதமோ, சந்தேகமோ, ஏற்றத் தாழ்வுகளோ, எதிரி மனப்பான்மை தோன்றி இருந்தாலோ, இந்தப் பிரச்சினைகளின் மூலத்தைக் கண்டறிந்து மீண்டும் நேரா வண்ணம் நமது சொல்லும் செயல்பாடும் இருப்பது அவசியம். நமக்குள் ஏற்படும் வேற்றுமையையும் மனக்கசப்பையும் பயன்படுத்தி நமக்குள் பிரிவை ஏற்படுத்தி ஆதாயம் தேட நினைக்கும் பிரிவினை தீய ஊழல் சக்திகள் நாம் எப்பொழுது சறுக்குவோம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
பாரதீய தேசிய நீரோட்டத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் ஹிந்து சமுதாயம் சமூக ரீதியில் ஒன்று பட்டு, பலப்பட்டு, தன்னம்பிக்கை உடைய, அஞ்சாத எண்ணத்தை உணர்ந்தால் மட்டுமே இதை தாக்குப் பிடிக்க முடியும். ஹிந்து என்று கூறிக் கொள்ளும் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த, குடும்ப, சமுதாய மற்றும் தொழில்ரீதியிலான வாழ்க்கையில் ஹிந்து கண்ணோட்டத்தில் நடந்து காண்பிப்பது கடமை ஆகும். எல்லா விதமான அச்சத்தில் இருந்தும் நாம் விடுபட வேண்டும். பலமின்மையே கோழைத்தனத்திற்கு வித்திடுகிறது.
 
நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் நம்முடைய உடல் பலம், மனோபலம், அறிவு பலம், தைரியம், முனைப்பு, எதையும் தாங்கும் உறுதி ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள தவம் செய்ய வேண்டும். ஒற்றுமை, கூட்டு பலனில் நாட்டம், புத்திகூர்மை மற்றும் அர்பணிப்பே எந்த ஒரு சமுதாயத்திற்கும் பலம். மோதல்கள், வேற்றுமையைப் பரப்பும் சித்தாந்தங்கள், நபர்கள், குழுக்கள், நிகழ்வுகள் ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பது அவசியம். இந்த அறைகூவல் எதிர் வினையானதோ அல்லது அடங்க மறுத்தலோ இல்லை.
 
ஒவ்வொரு சமுதாயத்தில் இருந்தும் ஏற்படும் இயற்கையான எதிர்பார்ப்பு. ஒற்றுமையான, உறுதியான, அறிவார்ந்த, தேசிய சிந்தனை உள்ள சமுதாயமே உலக அரங்கில் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முடியும். உண்மையையும் அமைதியையும் நிலைநாட்ட பலம் அவசியம். பலம் பொருந்தியவர்களாகவும் அஞ்சா நெஞ்சர்களாகவும் நாம் ஒவ்வொருவரும் மாறி “நான் யாரையும் அச்சப்படுத்துவதில்லை ; எனக்கும் அச்சமில்லை” என்ற வாசகத்தைப் போல் நமது ஹிந்து சமுதாயத்தின் அடையாளமாக ஆகுவோம். விழிப்புணர்வுள்ள, இணைந்த, பலம் பொருந்திய, துடிப்பான சமுதாயமே இன்றுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு.
 
இந்த லட்சியத்திற்காகவே ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் கடந்த 96 ஆண்டுகளாக பணி செய்து கொண்டிருக்கிறது. இலட்சியத்தை அடையும் வரை தொடர்ந்து பணி செய்து கொண்டே இருக்கும். நாம் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த புனித விழாவின் நோக்கமும் அதுவே. கடந்த 9 நாட்களும் எல்லா தெய்வ அம்சங்களும் சக்தி வழிபாடு செய்து வந்தனர். அதன் பிறகே மனித சமுதாயத்தை பீடித்த அரக்க சக்திகள் அழிக்கப்பட்டன. இன்று உலக நாடுகள் அனைத்தும் மனிதகுலத்தை சூழ்ந்துள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்விற்க்காக பாரதத்தை எதிர் நோக்குகின்றன.
 
இதற்கு பாரதம் தன்னைத் தானே தயார் செய்து கொள்ள வேண்டும். பாரதீயர்கள் அனைவரையும் பிணைக்கும் கயிறாக நமது நாட்டின் பண்பாடு, நமது முன்னோர் பற்றிய உயர்ந்த எண்ணம் மற்றும் நமது தாய் நாட்டின் மீது நாம் கொண்டுள்ள தூய்மையான பக்தி ஆகியவை உள்ளன. இந்த உணர்வுகளின் வெளிப்பாடே “ஹிந்து” என்கிற சொல். இந்த மூன்று அம்சங்களின் சனாதன பெருமையை பறைசாற்றிக் கொண்டே நாம் நமது தேசத்தை உயர்த்த பணியாற்றுவோம்.
 
நாம் இதை செய்தே ஆக வேண்டும். இதுவே ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் செயல் வடிவம். தங்கள் அனைவரையும் இந்தப் புனித பணியில் இணைத்துக் கொள்ளக் கேட்டுக் கொண்டு என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன்.
 
“ப்ராந்த்தி ஜன மன கீ மிட்டாத்தே, க்ராந்த்தி கா சங்கீத் காத்தே
ஏக கே தச லக்ஷ ஹோகர், கோடியோங்கோ ஹைம் புலாத்தே
துஷ்ட்ட மா ஹோகீ தபீ தோ விஸ்வ மே சம்மான் பாக்கர்
 
பட் ரஹே ஹைம் சரண அகணித பஸ இஸீ துன மே நிரந்தர
சல ரஹே ஹைம் சரண அகணித த்யேய கே பத பர நிரந்தர”
 
மக்களின் மனதில் எழும் சந்தேகங்களைத் தீர்த்து, மாற்றத்தின் கீதம் இசைத்து, ஒருவர் பத்து லட்சம் பேர் ஆனோம்; கோடிக்கணக்கானோரை அழைக்கிறோம்; அப்போது தான் உலக அரங்கில் மரியாதை பெற்று அன்னை அகம் மகிழ்வவாள்.
 
இந்த ஒரே ராகம் இசைத்து எண்ணற்ற பாதங்கள் இடையறாமல் முன்னேறிக் கொண்டிருக்கின்றன; எண்ணற்ற பாதங்கள் லட்சியப் பாதையில் இடையறாமல் நடைபோடுகின்றன.
 
பாரத் மாதா கீ ஜெய் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here