படித்ததில் பிடித்தது 2

0
401

ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கை நிறைய உப்பை போட்டு கலக்குவோம். இப்பொழுது அந்த உப்பு எங்கே என்றால் என்று கேட்டால் தண்ணீரில் இருக்கிறது என்று சொல்வோம்.

அந்த உப்பை இப்பொழுது காட்ட முடியுமா அல்லது போட்ட இரண்டு கையில்n உப்பிலிருந்து ஒரு கை கொடுக்க முடியுமா என்றால் முடியாது, ஏனெனில் அது தண்ணீரில் கரைந்து விட்டது. தண்ணீரில் கரைந்து விட்ட அந்த உப்பை பார்ப்பது கடினம், ஆனால் அந்த உப்பின் தன்மையை உணர முடியும். அந்த தண்ணீரை எடுத்து சுவைத்து பார்த்தால் அந்த உப்பின் தன்மையை உணர முடியும்.

இறைவனும் தண்ணீரில் கலந்து விட்ட அந்த உப்பு போல்தான்! அவனை உணரத்தான் முடியும்! இறைவனை நாம் உணர்வதற்கு நமக்கு ஒரு வழிகாட்டி தேவை. யார் அந்த வழிகாட்டி என்பதை திருமுருக கிருபானந்த வாரியாரின் ஒரு குட்டிக் கதை மூலம் பார்ப்போம்.

கடவுளைக் கண்ணால் காண முடியுமா….? என்று ஒரு மாணவன் வாரியாரை பார்த்து கேட்டான்.

“உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ.

இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா.

எனக்கென்ன கண் இல்லையா?

இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.

“தம்பீ, கண் இருந்தால் மட்டும் போதாது.

கண்ணில் ஒளியிருக்க வேண்டும்,

காது இருந்தால் மட்டும் போதுமா?

காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும்.

அறிவு இருந்தால் மட்டும் போதாது.

அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருக்க வேண்டும்…!! உடம்பை நீ பார்க்கின்றாய்….!!
இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா….?” “ஆம். நன்றாகத் தெரிகின்றது.” “அப்பா…! அவசரப்படாதே…..!!
எல்லாம் தெரிகின்றதா? என்ன ஐயா. தெரிகின்றது. தெரிகின்றது. என்று எத்தனை முறை கூறுவது? எல்லாம்தான் தெரிகின்றது….?”

“அப்பா….! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா…?”
“ஆம்! தெரிகின்றன.”…..!!

“முழுவதும் தெரிகின்றதா…?”
அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில்,
“முழுவதும் தெரிகின்றது” என்றான்….!!
“தம்பீ…!
உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா….?”
மாணவன் விழித்தான்.
“ஐயா…! பின்புறம் தெரியவில்லை.” “என்றான்.
தம்பீ…! முதலில் தெரிகின்றது.. தெரிகின்றது.. என்று பலமுறை சொன்னாய்….!!
இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே….!!
சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா…?”
“முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.’…!!
நிதானித்துக் கூறு….!!.”
“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன்.

எல்லாம் தெரிகின்றது.

“தம்பீ…! முன்புறத்தின் முக்கியமான, ” முகம் தெரிகின்றதா”…..?
மாணவன் துணுக்குற்றான்.
பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன்,
“ஐயனே…! முகம் தெரியவில்லை.!” என்றான்.
“குழந்தாய்…!
இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை…..!!
முன்புறம் முகம் தெரியவில்லை……!!
நீ இந்த உடம்பில் சிறிது தான் கண்டிருக்கிறாய்…..!!
இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்….!!

அன்பனே…!
இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால்,
இரு நிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.”
இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு,
இரு நிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல்,
ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.”
ஒரு கண்ணாடி…..
திருவருள்….!! மற்றொன்று…. குருவருள்…….!! திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால்,

“ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்”….!!

“தம்பீ…..! “திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும்”……,
அதனைக் “குருவருள் மூலமே பெறமுடியும்”…..!!

குருவருள் மூலம் தான் திருவருளை பெற முடியும் என்பதற்கு மாணிக்கவாசகர் ஒரு அற்புத உதாரணம். மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்லப்படுவதின் உண்மை பொருளை பார்ப்போம். தன் குழந்தைக்கு இவர்தான் உனது தந்தை என்று அடையாளம் காட்டுவது தாய். இதற்கு நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு அற்புத உதாரணம் குந்திதேவி குந்திதேவி சொன்ன பிறகுதான் கர்ணனுக்கு தன்னுடைய தந்தை சூரியன் என்பது தெரியும்.

அதேபோல் தெய்வத்தை நமக்கு அடையாளம் காட்டுபவர் தான் குரு. ஆனால் இன்று பெரும்பாலானோர் மாதா பிதா குரு தெய்வம் என்பதை தவறாக புரிந்து கொண்டு முதலில் தாய், பிறகு தந்தை, பிறகு குரு, பிறகு தெய்வம் என்று வரிசைப் படுத்துகின்றனர்.

“சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறு ஒன்றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே.”
– திருமந்திரம் 2119

ஆ என்றால் அடையும் வழி. மாறு என்றால் மோட்சம்.

எண்ணிலடங்காத தேவர்கள், வானவர்கள் சிவனை வழிபட்டனர் சிவனை வழிபடும் அவர்களுக்கு மோட்சம் அடைய வழி ஒன்றும் தெரியவில்லை. அவனை வழிபட்டு மோட்சம் அடையும் வழியை, குருவை நாம் வழிபட்டால், கைகூடிவரும் என்று திருமூலர் சொல்கிறார்.

கீழே உள்ள மூன்று அவ்வையார் குரலும் குரு நமக்கு தேவை என்பதை அழகாக உணர்த்துகிறது.

குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க்
கருவமாய் நிற்குஞ் சிவம். (203)
தலைப்பட்ட சற்குருவின் சன்னிதியி லல்லால்
வலைப்பட்ட மானதுவே யாம். (204)
நெறிபட்ட சற்குரு நேர்வழி காட்டில்
பிறிவற் றிருக்குஞ் சிவம். (205)

அருணகிரிநாதருக்கு முருகப் பெருமானே குருவாக வந்தார். வள்ளலார், மாணிக்கவாசகர் போன்ற பிறவி ஞானிகளுக்கு இறைவனே குருவாக வந்தார். நம்மைப்போன்ற பிறவிகளுக்கு யார் குரு? என்ற கேள்வி நம் அனைவருக்கும் இருக்கிறது.

அருணகிரிநாதரை தேடி முருகன் குருவாக வந்தார் மாணிக்கவாசகரை தேடி இறைவன் குருவாக வந்தார் அது போல், நம்மையும் குரு தேடி வருவார். மாணிக்கவாசகருக்கு இறைவன் அந்தணர் வடிவில் வந்த போது மாணிக்கவாசகர் தன்னுடைய குருவை உணர்ந்துகொண்டார். நம் வாழ்வில் நமக்கு குரு அருள் வருவதை நாம் உணர்ந்து கொள்கிறோமா? மகா பெரியவா மகான் சேஷாத்திரி சுவாமிகள் யோகி ராம்சுரத்குமார் , சத்ய சாய் என நாம் வாழ்ந்த நூற்றாண்டிலும் குருக்கள் இருந்தனர். இவ்வாறு நம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த இவர்கள், இன்னமும் குருவாக பல்லாயிரம் அடியவர்களுக்கு வழிகாட்டி கொண்டிருக்கின்றனர்.

இவர்களைப் போலவே பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மகான் ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீ தத்தாத்ரேயர், ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி சுவாமிகள், சமர்த்தர் என்று அழைக்கப்படும் அக்கல்கோட் மகராஜ், கஜானன் மஹராஜ், மானிக் பிரபு, சீரடி சாய்பாபா போன்றவர்கள் இன்னமும் பல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு வழிகாட்டி கொண்டிருக்கின்றனர்.

என்னுடைய குரு யார் என்று தேடும் அடியவர்கள் ஆயிரம் ஆயிரம். இவ்வாறு தேடும் அடியவர்களுக்கு சொல்லும் ஒரு குறிப்பு. எந்த ஒரு அடியவர் வாழ்வில் திடீரென மகான்களைப் பற்றி கேட்கும் வாய்ப்பு, அல்லது அவர்களைப் பற்றி படிக்கும் வாய்ப்பு, அவர்கள் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு என்று தற்செயலாக அவர்கள் நினைக்காமல் இந்த விஷயங்கள் நடக்கும் பொழுது அவர்களுடைய வாழ்வில் குரு வழி காட்ட வந்து விட்டார் என்பதுதான் பொருள். இதனை புரிந்து கொள்ளாத அடியவர்கள் நிறைய உண்டு.

குரு என்பவர் கையில் ஒரு மந்திரக் கோலை வைத்துக் கொண்டு நம்முடைய வாழ்வில் வசதிகளையும், பொருளையும் அள்ளி கொடுப்பவர் அல்ல. குரு என்பவர் நம்முடைய வாழ்வில் வரும் பொழுது நம் வாழ்வில் என்ன மாற்றம் ஏற்படும்? தன் வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் கர்மா என்பது முதலில் நமக்கு புரிய ஆரம்பிக்கும். துன்பங்கள் வரும் பொழுது அதையும் தாண்டி ஒரு அமைதியை, அந்த துன்பத்தை பொறுத்துக் கொள்ளும் சக்தியை குரு நமக்குத் தருகிறார். ஒவ்வொருவரும் நம்முடைய கர்மாவை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்று புரியும் பக்குவத்தை கொடுக்கிறார். இறைவனைப் புரிந்து கொள்வதற்கு, நாம் உடல் அல்ல! நாம் ஒரு ஆத்மா! என்பதை புரிந்து கொள்ளும் பக்குவம் குருவின் மூலம் கிடைக்கிறது.

இந்தப் பக்குவம் வருவதற்கு நான் என்கின்ற அகங்காரம் நீக்கப்பட வேண்டும். குருவின் அருளினால், செய்வது அனைத்தும் இறைவன் நாம் இல்லை என்கின்ற உணர்தல் உணரப்படுகிறது. குரு வந்தால் மட்டும்தான் இந்த “நான்” என்கிற அகந்தை நம் வாழ்வில் இருந்து அழிக்கப்படுகிறது. அனைத்தும் கர்மவினை என்று புரிந்து கொள்ளுதல், நான் என்ற அகங்காரம் அழிதல், நான் ஆத்மா என்று புரிந்து கொள்ளுதல். இந்த மூன்றையும் தான் சைவ சித்தாந்தம் ஆணவம் கன்மம் மாயை என்று குறிப்பிடுகிறது.

குரு நம் வாழ்வில் வரும் பொழுது ஆணவம் கன்மம் மாயை இந்த மூன்றும் நீக்கப்படுகிறது. இவை அனைத்தும் ஒரு பிறவியில் பெரும்பாலும் நடந்துவிடாது. குருவின் வழிகாட்டுதல் ஒவ்வொரு பிறவியிலும் தொடர்கிறது. குருவை உணர்ந்து கொள்ளும் பக்குவம், குருவின் வழிகாட்டுதல் படி நடத்தல் இவற்றின் அடிப்படையில் நம்முடைய ஆன்மீக முன்னேற்றம் நடக்கிறது.

குருவாய் வந்து இறைவன் ஆட்கொள்ள, திருவாசகத்தை நமக்கு தந்தருளிய மாணிக்கவாசகர் திருப்பாதம் பணிந்து, குரு இல்லாதவர்களுக்கு சிவபுராணத்தை உணர்ந்து படிக்க குருவருள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் படிக்க குருவருள் சித்தியாகும்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here