நாட்டில் நிலையான விவசாயத்தை அடைய வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு சிறந்த விலைகளை நிர்ணயிப்பது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
வரவிருக்கும் சர்வதேச உணவு நெருக்கடி தொடர்பாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கையை சுட்டிக்காட்டிய அவர், நமது விவசாயிகளுக்கு உரிய காலத்தில் உதவிகளை வழங்கினால், இந்தியா தன்னிறைவு அடைவது மட்டுமல்லாமல், வரும் காலங்களில் உலக நாடுகளுக்கே தேவையான உணவை நம்மால் அளிக்க முடியும்.
குரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளுக்கு இடையேயும் கடந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தியை அதிகரித்தமைக்காக நமது விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவித்து, சேமிப்புக் கிடங்குகளின் திறன்களை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்துவது, வேளாண் பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் உள்ள இடர்பாடுகளைக் களைவது, மற்றும் உணவு பதப்படுத்துதலை ஊக்குவிப்பது போன்ற துறைகளில் கவனம் செலுத்த வேண்டும், என்றார்.
“குறைந்த செலவில் உற்பத்தியை அதிகரிப்பதில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். தண்ணீர், மின்சாரம் போன்ற நமது வளங்களை முறையாக நாம் பயன்படுத்த வேண்டும்”, என்று வெங்கையா நாயுடு தெரிவித்தார்.