சம்ஸ்கிருதத்துடன் ஏனிந்த சமர்?

0
330

விலை மதிக்க இயலாத வைரக்கல்லை கரித்துண்டாய் கருதி குப்பையில் வீசி எறிய முனைவதைப்போல, பாரதத்தின் பாரம்பரிய மொழியான சம்ஸ்கிருதத்தைப் புறக்கணிக்க ஓர் கூட்டம் சண்டமாருதம் செய்கிறது. பல்வேறு அறிவுச் செழுமைகளைத் தாங்கி நிற்கும் அந்தப் பண்டைய மொழியை, நமது பாரம்பரியச் செல்வத்தை, இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள மூன்றாம் மொழிப் பாடமாகக்கூட சொல்லிக் கொடுக்கக்கூடாது என இவர்கள் முழக்கமிடுவது ஏன்? இந்தியாவில் தோன்றிய தொன்மொழியை இந்தியாவில் கற்றுக்கொடுக்க இத்தனை எதிர்ப்பு ஏன்?

இதற்கு இக்கூட்டத்தார் கூறுகின்ற காரணம், தமிழ் அழிந்துவிடுமாம். அது உண்மையெனில், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அது நிகழ்ந்திருக்குமே மாறாக, தமிழின் வளர்ச்சிக்கு அல்லவா தோளோடு தோள் கொடுத்திருக்கிறது. அதனால் தான் தற்போது எஞ்சியுள்ள தமிழின் மிகத் தொன்மையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலேயே வடசொல் ஏற்கப்பட்டிருக்கிறது, புறக்கணிக்கப்படவில்லை. தமிழின் நெடுங்கணக்கும் (அரிச்சுவடி) சம்ஸ்கிருதத்தின் அரிச்சுவடியும் ஓரிரு எழுத்துகளைத் தவிர ஏறத்தாழ ஒன்றுதான். உயிர்மெய் எழுத்துகள் கூட ஒருபோலத்தான். வேறுபாடு என்னவெனில், சம்ஸ்கிருதத்தில் க,ச,ட,த,ப ஆகிய 5 வல்லெழுத்துகளுக்கும் அழுத்தி உச்சரிக்கும் கூடுதல் வர்க்க எழுத்துகள் உண்டு.

பண்டைய தமிழரசர்களின் கல்வெட்டுகளில்கூட தமிழோடு, சம்ஸ்கிருதமும் இடம்பெற்றிருக்கிறது. தொடக்கத்தில் பிராம்மி எழுத்துருக்கள்தான் தமிழுக்கும், சம்ஸ்கிருதத்துக்கும் ஒருபோல பயன்படுத்தப்பட்டுள்ளன. பிற்காலத்தில் தனி எழுத்துருக்கள் எழுந்தபோதிலும், தமிழ் – சம்ஸ்கிருத பிணைப்புக்கு அதிலும் ஓர் சிறப்பு உண்டு. அஃது யாதெனில், வடபாலிருந்தவர்கள் சம்ஸ்கிருதத்தை எழுத தேவநாகரி என்ற எழுத்துருக்களைப் பயன்படுத்தத் தொடங்கியபோது, தென்னகத்தில் இருந்தவர்கள் சம்ஸ்கிருதத்தை எழுத கிரந்தம் என்ற எழுத்துருக்களைச் சமைத்துக்கொண்டனர். இந்த கிரந்த எழுத்து, தமிழின் இன்றைய எழுத்துருக்களோடு தொடர்புடையது. தமிழில் இருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கிளைத்த மலையாள மொழி எழுத்துருக்கள் ஏறத்தாழ இந்த கிரந்த எழுத்துகளையே ஒத்துள்ளன.

கம்பர், சம்ஸ்கிருதம் தெரியாமலா வான்மீகி ராமாயணத்தைத் தழுவி தமிழில் ராமாயணம் இயற்றினார்? அதேபோல் நளவெண்பா எழுதிய புகழேந்தி, பாரதம் பாடிய பெருந்தேவனார், வில்லிபுத்தூரார் போன்றோர் எல்லாம் சம்ஸ்கிருதம் பயிலாதவர்களா? அறம் (தர்மம்), பொருள் (அர்த்தம்), இன்பம் (காமம்) ஆகிய முப்பால் இயற்றிய திருவள்ளுவர் சம்ஸ்கிருதம் அறியாதவரா? அக்காலத்தில் தமிழ்ப் புலவர்களும், அரசர்களும், அறிஞர் பெருமக்களும் ஏன் வர்த்தகர்கள் உள்ளிட்ட பொதுமக்களேகூட பாரதத்தின் பிற பகுதி மக்களோடு எந்த மொழியில் கலந்துரையாடிருப்பார்கள்? இரவல் வாங்கிய ஆங்கிலத்திலா? அன்றி, நமது இயல்பான சகோதர மொழியான சம்ஸ்கிருதத்திலா?

அக்காலத் தமிழர்கள், இன்று சிலர் வெறுப்பதைப் போல சம்ஸ்கிருதத்தை வெறுக்கவில்லை. மாறாக, தமிழை ஒக்க, சம்ஸ்கிருதமும் இறைவன் மொழி என்றே இயம்பினர். அதனால்தான் நாயன்மாரான திருஞான சம்பந்தர், சிவபெருமானை “ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்” என்று பாராட்டியிருக்கிறார். இதேபோல்தான் ஆழ்வாரான திருமங்கை மன்னரும் பெருமாள், தமிழ், வடமொழி ஆகிய இரண்டையும் விரும்புவதாக மொழிந்தார். பள்ளிகளில் தமிழில் பேசினால் தண்டனை என்று விதித்து, இன்று இல்லங்களில்கூட இளைய தலைமுறையினர் மம்மி, டாடி என்று ஆங்கிலத்தில் உரையாடப் பழக்கிய கான்வென்ட், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆங்கிலத் திணிப்பு, தமிழ்ப் புறக்கணிப்பால் தமிழர்களின் நாவில் இருந்து தமிழ் நழுவுகிறதா? அன்றி, அன்போடு சகோதார பாஷைகளைப் பயிலுவதால் பாழாகிறதா? ‘தமிழில் பேசினால் அவமானம், ஆங்கிலத்தில் பேசுவதே வெகுமானம்’ என்று இன்றைய தமிழரை ஆக்கியது யார் குற்றம்? நமது தாய்மொழியை நமது ரத்தங்களே மறந்துவரும், மறுத்துவரும் சூழலில் அவர்களுக்கு அன்போடு தமிழ்ச்சுவையை ஊட்டுவதை விட்டுவிட்டு, அரசியல் காரணங்களுக்காக மற்றொரு பண்டைய மொழியை தூற்றுவதால் பயன் என்ன?

ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டினர் ஏதேதோ உதாரணங்களைக் கூறி, சம்ஸ்கிருதத்தோடு தமது மொழிகளுக்கு உள்ள தொடர்பைக் கூறி மகிழ்ச்சி அடைகின்றனர். சம்ஸ்கிருதம் பயிலுவதை ஊக்குவிக்கின்றனர். ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளாக பாரதத்தில் தமிழோடு இணைந்து வேரூன்றியுள்ள சகோதர மொழியான சம்ஸ்கிருதத்தை ஒருசிலர் வெறுப்பது ஏன்? சம்ஸ்கிருதம் அன்னியர் மொழியா? இது நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய சூழ்ச்சிக் கருத்து. இதனை பிற்காலத்தில் அவர்களே உதறித் தள்ளிவிட்டார்கள். ஆரிய என்பது உயர்ந்த, சிறந்த என்ற பொருள் பற்றியதே அன்றி இனம் சார்ந்தது அல்ல என்ற முடிவுக்கு அவர்களே வந்து விட்டார்கள். ஆனால் நாம் இன்னமும் ஆரிய மாயையில்தான் உழன்று கொண்டிருக்கிறோம். ஆரியர் என்பது தனி இனம் எனில், புத்தர் தமது கொள்கைகளான துக்கம், துக்க சமுதாயம், துக்க நிரோதம், பிரதிபதம் ஆகிய 4 அடிப்படைக் கோட்பாடுகளை ஆரிய சத்தியங்கள் என்று அறிவித்தது ஏன்? இலங்கையில் உள்ள சில தமிழ் மன்னர்கள் ஆரிய என்ற பட்டப்பெயரைச் சூட்டிக்கொண்டது ஏன்?

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலமொழியில் இருந்துதான் தோன்றியிருக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிறிஸ்தவப் பாதிரியாரான சுவாமி ஞானப்பிரகாசர் தாம் எழுதிய ‘சொற்பிறப்பு – ஒப்பியல் தமிழ் அகராதி’ (1941) என்ற நூலில் தெளிவுபட எழுதியிருக்கிறார். இரண்டு மொழிகளுக்கும் பொதுவான மூலங்களான தாதுச் சொற்களையும், கொடுக்கல்-வாங்கல்களையும் அவர் அந்நூலில் எடுத்துரைத்திருக்கிறார். ஆனால், அவற்றையெல்லாம் அறியாமலோ அல்லது அறிந்தும் அறியாததுபோல் நடித்தோ இவர்கள் கிளப்பும் எதிர்ப்பால் யாது பயன்? தமிழ்தான் சம்ஸ்கிருதத்துக்கும் மூலமொழி அல்லது மூத்தமொழி என்று நிறுவுவதற்கும்கூட சம்ஸ்கிருதம் கற்றால்தான் இயலும்.

 “நல்லதோர் வீணை செய்தே அதை நலம்கெடப் புழுதியில் எறிவதுண்டோ” என்று மகாகவி சுப்ரமணிய பாரதியார் எழுப்பிய கேள்வி இவர்களுக்குத்தான் போலும். உண்மைத் தமிழன், சம்ஸ்கிருதம் பயிலும்போது தமிழைப் புறந்தள்ளிவிடமாட்டான். மாறாக, தமிழுக்கு சம்ஸ்கிருதம் அளித்துள்ள பங்களிப்பை ஏற்றுக்கொள்வதோடு, சம்ஸ்கிருதத்துக்கு தமிழும், தமிழர்களும் ஆற்றியுள்ள பங்கையும் உயர்த்திப் பிடிப்பான். போலித் தமிழின்தான் பொய்ப் போர் தொடுப்பான்.

இந்த வேண்டாத போருக்குக் காரணம், சம்ஸ்கிருதத்தின் மீது தேவையின்றி படிந்துவிட்ட காழ்ப்புணர்வு. ஒரு குறிப்பிட்ட சாதியினரின் மொழி, குறிப்பிட்ட மதம் சார்ந்த மொழி, வெளியிலிருந்து வந்த மொழி, நவீனத்துவம் இல்லாத பத்தாம்பசலித்தனமான மொழி, வழக்கொழிந்த மொழி என்றெல்லாம், குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்த கதையாய், அறியாமையால் விளைந்த அவலம் இது.

உண்மையில், சாதிகளைக் கடந்து சமத்துவம் படைத்த மொழி சம்ஸ்கிருதம். வேடர் வால்மீகி எழுதிய ராமாயணமும், மீனவப் பெண்ணின் மகன் வியாசர் எழுதிய மகாபாரதமும், இடைச் சாதியைச் சேர்ந்த ஶ்ரீகிருஷ்ணர் போதித்த பகவத் கீதையுமே இதற்குச் சான்றுகள். ஹிந்துக்களின் வேத, உபநிஷதங்கள் மட்டுமின்றி, சமண, பௌத்த மத அறநூல்களும் சம்ஸ்கிருதத்தில் இருப்பது அதன் மதம் கடந்த மாட்சிமைக்குச் சான்று. அவ்வளவு ஏன், முழு நாத்திகம் பேசும் சார்வாகமும், ஆண்டவனை மறுக்கும் சாங்கியமும், உலகிலேயே முதன்முறையாக பொருளியல் வாதம் பேசிய லோகாயதமும் சம்ஸ்கிருத மொழியில்தான் இயற்றப்பட்டுள்ளன.

வேத காலம் தொட்டே பாரதத்தில் உருவான சம்ஸ்கிருதம்தான் பல்வேறு காலகட்டங்களில் அன்னிய தேசங்களுக்கு பயணப்பட்டு, அந்நாட்டு மக்கள் பேசும் மொழிகளோடு கலந்து அவற்றை செழிக்கச்செய்தது என்பது அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்ற அசைக்க முடியாத முடிவு.

பல்வேறு தர்ம சாஸ்திரங்கள் மட்டுமல்ல, சாணக்கியரின் பொருளியல்- அரசு நிர்வாக நூலான அர்த்த சாஸ்திரமும், வாத்ஸ்யாயனரின் இன்பவியல் நூலான காமசாஸ்திரமும் இன்றளவிலும் அறவியல், பொருளியல், மானுடவியல், உளவியல், அரசியல் நிபுணர்களுக்கு புதுப்புது அர்த்தங்களை போதித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆர்யபட்டரின் வானவியல் சாஸ்திரமும் (ஆர்யபட்டியம்), பாரத்வாஜரின் வைமானிக சாஸ்திரமும் இன்றைய மேல்நாட்டு அறிவியல் கருத்துகளைவிட மேலானவை.

அதுமட்டுமல்ல, கணினிப் பயன்பாட்டுக்கு மிகவும் ஏற்ற மொழி சம்ஸ்கிருதம் என்பதும் தற்கால வல்லுனர்கள் உரைக்கின்ற உண்மை. ஆனால் இந்த உண்மை உரைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காய், நம்மவர் சிலரின் செவிகளில் விழவில்லை, சிந்தனையில் சேரவில்லை. அதனால்தான், இந்தியர்கள் அனைவரும் முதல் மொழிப் பாடமாகப் படிக்க வேண்டிய சம்ஸ்கிருதத்தை மூன்றாம் மொழிப் பாடமாகப் படிப்பதற்குக்கூட எதிர்ப்பு. 

இந்தியாவின் பல்வேறு மொழிகளுக்கு மட்டுமல்ல, ஜெர்மானியம், பிரெஞ்சு போன்ற ஐரோப்பிய மொழிகள் பலவற்றுக்கும் தாய் அல்லது செவிலித்தாய் போன்றது சம்ஸ்கிருதம். சம்ஸ்கிருதம் என்றால் நன்கு சமைக்கப்பட்டது அதாவது நன்கு உருவாக்கப்பட்டது என்று பொருள். பிராகிருதம் என்ற கொச்சையான இந்திய மூல மொழியை செம்மைப்படுத்தியதோடு, தமிழ் உள்ளிட்ட சகோதர மொழிகளின் வளம் நிறைந்த சொற்களையும் தன்னகத்தே கொண்டது சம்ஸ்கிருதம்.

இந்த சம்ஸ்கிருதத்திடமிருந்து இரவல் வாங்கிய சொற்கள், ஏறத்தாழ உலக மொழிகள் அனைத்திலும் உள்ளன. இதில் ஐரோப்பிய மொழிகள், சம்ஸ்கிருதத்திடமிருந்து கடன் பெற்றது அதிகம். இதற்கு நன்றிக்கடனாக, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் சம்ஸ்கிருதத்தைக் கொண்டாடுகின்றன. ஜெர்மனியில் முதன்மை நிலையில் உள்ள 14 பல்கலைக்கழங்களில் சம்ஸ்கிருதம் பயிற்றுவிக்கப்படுகிறது.

 “சம்ஸ்கிருதத்தை குறிப்பிட்ட மதம் அல்லது அரசியல் சித்தாந்தத்தோடு தொடர்புபடுத்துவது முட்டாள்தனம் மட்டுமல்ல, அதன் வளமான பாரம்பரியத்துக்கு தீங்கு விளைவிப்பதுமாகும். பௌத்த மதத்தின் மிகப் பழைமை வாய்ந்த தத்துவ நூல்கள் சம்ஸ்கிருத மொழியில்தான் உள்ளன. கீழை நாடுகளின் தத்துவம், வரலாறு, மொழிகள், கலாசாரம், அறிவியல் ஆகியவற்றை அறிந்துகொள்ள வேண்டுமானால் சம்ஸ்கிருதத்தை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் சம்ஸ்கிருதத்தில்தான் மிகப் பழங்கால ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன”  என்கிறார் ஜெர்மனியன் ஹெய்டெல்பெர்க் பல்கலைக்கழகத்தின் பாரம்பரிய இந்தியவியல் (கிளாசிக் இண்டாலஜி) துறைத் தலைவர் டாக்டர் அக்ஸெல் மைக்கேல்ஸ்.

“அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களும், ஹம்பி உள்ளிட்ட சிற்பக் கலைக் கூடங்களும், கோனார்க் உள்ளிட்ட புராதன கோவில்களையும், அவற்றின் மகத்துவம் புரியாமல் இந்தியர்கள் மண்ணோடு புதைய விட்டனர். பின்னர் ஆங்கிலேய காலனி ஆட்சியில்தான் அவை அகழ்ந்தெடுக்கப்பட்டு உலகுக்கு அவற்றின் பெருமை தெரிய வந்தது. அதேபோல், இலக்கியம், கலாசாரம், தத்துவம், அறிவியல் ஆகியற்றில் வளம் பொருந்திய, வாழும் மொழியாகிய சம்ஸ்கிருதத்தின் மகிமை தெரியாமல் அதனை இந்தியர்கள் அழிய விடுகின்றனர். ஆனால், சம்ஸ்கிருதத்தை கற்றறிவதன் மூலம், அழிந்துபோன சிந்து சமவெளி நாகரிகம் போன்ற பல புராதன விஷயங்கள் குறித்த உண்மைகளை ஆராய்ந்து மீட்டெடுக்க முடியும் என்பதே உண்மை. ஆகையால் குறுகிய அரசியல், மதச் சண்டைகளை விட்டுவிட்டு சம்ஸ்கிருதத்தைப் பேண இந்தியர்கள் முயல வேண்டும்” என்கிறார் டாக்டர் அக்ஸெல் மைக்கேல்ஸ்.

ஆகையால், தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களே, நமது சொந்த மொழியான சம்ஸ்கிருதத்தோடு வீண் சண்டை வேண்டாம். இதுபோன்ற கீழ்மைத்தனத்தில் நம் முன்னோர்கள் ஈடுபட்டதில்லை. சம்ஸ்கிருதம் இந்தியாவின் எந்தப் பகுதியினருக்கும், பிரிவினருக்கும் தாய் மொழியல்ல. ஆனால், பல தாய் மொழிகளுக்கு தாயாகவோ, செவிலித் தாயாகவோ விளங்குகின்ற மொழி. நமது சங்கத் தமிழ் இலக்கியங்களில் நற்றாயும் உண்டு, செவிலித் தாயும் உண்டு. இன்றைய தமிழருக்கு நற்றாய் தமிழ் என்றால், செவிலித் தாய் சம்ஸ்கிருதம் அன்றோ!

பத்மன்
napnaban1967@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here