சேவாபாரதி வென்றது

0
696

கேரள மாநிலத்தில் சேவாபாரதி அமைப்பு, மழை, வெள்ளம், கொரோனா உள்ளிட்ட பாதிப்புகளில் தொடர்ந்து மக்கள் நிவாரணப் பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில், சேவா பாரதி தொண்டர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சின்னம், அடையாளங்களைப் பயன்படுத்தி நிவாரணப் பணிகளை செய்கிறார்கள் என கிராம பஞ்சாயத்து தலைவர், வார்டு கவுன்சிலர் மற்றும் சிலர் புகாரளித்தனர் என்று கூறி கண்ணூர் மாவட்ட ஆட்சியர், சேவாபாரதியை ஒரு நிவாரண நிறுவனமாக நியமித்த உத்தரவை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்தார்.

இதனை எதிர்த்து தேசிய சேவாபாரதி சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதில், சேவா பாரதி 1,270 உதவி மையங்கள், 72 தனிமைப்படுத்தல் மையங்கள், 12 கோவிட் பராமரிப்பு மையங்கள், 156 அரசு கோவிட் பராமரிப்பு மையங்களில் சேவை, 1,531 கோவிட் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உணவு விநியோகிக்கும் மையங்கள், 616 இரத்த தான மையங்கள் கேரளா முழுவதும், 782 இடங்களில் நோயெதிர்ப்பு மருந்து வழங்கும் மையங்கள், 42 ஆலோசனை மையங்கள், 128 ஆம்புலன்ஸ் மற்றும் 552 பிற சேவை வாகனங்கள் ஆகியவற்றை நடத்தி வருகிறது என சேவா பாரதியின் கேரள பொதுச்செயலாளர் டி. விஜயன் மனுத்தாக்கல் செய்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், சேவாபாரதி நியமனத்தை ரத்து செய்வதற்கு முன்பு மனுதாரருக்கு எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. அரசியல் சின்னத்தை யார் பயன்படுத்தினார்கள், அது எங்கே பயன்படுத்தப்பட்டது, நிவாரணப் பணியின் போது எந்த அரசியல் கட்சியின் சின்னங்கள், அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. சேவா பாரதிக்கு எதிரான புகார்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை அல்ல என்பதை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகம் எந்த ஆரம்ப விசாரணையும் செய்யவில்லை’ என்று கூறி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here