நாம் வணங்கும் ஆலயம்! நாம் விரும்பும் மொழியில் பூஜை!!

0
481

அர்ச்சனை என்பது எந்த மொழியில் இருக்க வேண்டும் என்பதும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டவர்கள் சார்ந்த விஷயம். உண்மையில் தமிழகத்தில் பரவலாக இன்றும் தமிழில் அர்ச்சனை நடந்து கொண்டு தான் உள்ளது.

வைணவத் திருத்தலங்களில் திருப்பல்லாண்டு தினசரி பாடிக்கொண்டுதான் தான் இருக்கிறார்கள். அதே போல் சிவாலயங்களில் போற்றித் திருத்தாண்டகம் என்ற பதிகம் பாடி அர்ச்சனை செய்யப்படுகிறது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் சார்ந்த வழிபாட்டு மன்றங்களில் கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளாக தமிழில்தான் வழிபாடு நடைபெற்று வருகிறது.

ஆனால் இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மறைத்துவிட்டு, புதிதாக ஏதோ தமிழில் அர்ச்சனை என்று ஒரு விவாதத்தை உருவாக்கி இருக்கிறார்கள் . ஆலய வழிபாட்டில் மொழி என்பது பிரச்சனையல்ல. காரணம் ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்பிற்கும் ஒரு அதிர்வலைகள் சார்ந்த மந்திரத் தன்மை உண்டு . எந்த எழுத்தோடு எந்த எழுத்தை சேர்த்தால் அது மந்திரமாக மாறும் என்று, நமது முன்னோர்கள் மந்திர பீஜாக்ஷரங்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த மந்திரச் சொற்களை உச்சாடனம் செய்து செய்து அதற்கு ஒரு வலிமையினை உருவாக்கியிருக்கிறார்கள். அவை மந்திரங்களாக இருக்கலாம், ஸ்லோகங்களாக இருக்கலாம், அல்லது பதிகங்கள், பிரபந்தங்கள் என்றும் இருக்கலாம் அதை வெளிப்படுத்தியவர்கள் உயர்ந்த பக்தி நிலையிலிருந்து உருவாக்கியிருக்கிறார்கள்.

தமிழில் கூட பல விஷயங்கள் இருக்கின்றன. குறிப்பாக கந்த சஷ்டி கவசம் ஒருவர் பக்தி சிரத்தையோடு அதற்குரிய முறைகளோடு பூசனைகளோடு உச்சாடனம் செய்து உருவேற்றினால் அதற்கு சில சக்திகள் உண்டு . சில ஆண்டுகளுக்கு முன்பு கூட கிராமங்களில் அப்படி உச்சாடனம் செய்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் மூலமாக குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படக்கூடிய சில சங்கடங்களை கந்தசஷ்டிகவசம் மூலமாக அதை ஓதி ஓதி சரி செய்து இருக்கிறார்கள். இது பலருக்கும் அனுபவப்பூர்வமாக தெரிந்த உண்மை. அதேபோன்று கோளறு பதிகம், இடர் களையும் பதிகம் போன்ற பதிகங்களை உணர்வுபூர்வமாக ஓதி வந்தவர்கள் பலருடைய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு இருக்கிறார்கள். அதேபோன்றுதான் சமஸ்கிருதத்திலும் பல மந்திரங்களும் ஸ்லோகங்களும் உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பாக திருச்சிக்கு அருகே ஒரு முருகன் ஆலயம் நிர்மாணம் செய்யப்பட்டது. அதன் கும்பாபிஷேத்திற்கு அப்போதைய தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் வந்திருந்தார். அவர் எந்த அளவு தமிழ் ஆர்வலர் என்பது தெரியும். அதே போல் ஆலயம் உருவாக ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் தமிழ் ஆர்வலர்கள். ஆனால் கும்பாபிஷேகம் சமஸ்கிருத மந்திரங்கள் மூலமாக நடந்தது.

இது பற்றி ஆலய நிர்வாகிகள் அடிகளாரிடம் சந்தேகம் எழுப்ப, அடிகளார் கூறியது, ‘சில விஷயங்கள் எப்படி நடக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்துக் கொடுத்துள்ளனரோ அப்படித்தான் நடத்திட வேண்டும்’ என்று கூறினார். அடிகளாரைவிட சிறந்த தமிழ் பற்றாளர்களா இன்று தமிழ் அர்ச்சனைக்கு ஆலாய்ப்பறக்கிறவர்கள்.

ஆகவே அர்ச்சனை எந்த மொழியில் செய்ய வேண்டும் என்பதை பக்தர்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். இதில் தலையிட வேறு எவருக்கும் உரிமை இல்லை. ஆனால் தூய்மையான பக்தியுள்ள எவரும் இது போன்ற விவாதங்களை ஏற்கமாட்டார்கள்.

கிருஷ்ண முத்துசாமி ஜி
krishnamuthuswamy@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here