நிலவை ஆய்வு செய்து வரும் ‘சந்திரயான்-2’ விண்கலம் பல புதிய விஷயங்களைக் கண்டறிந்து, தகவல் அளித்து வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. நிலவின் பரப்பில் குரோமியம், மாங்கனீஸ் ஆகிய தாதுக்கள் படிமங்களாக இருப்பதை சந்திரயான்-2 கண்டறிந்திருப்பதோடு, நீரேற்றம் மற்றும் பனிக்கட்டி வடிவில் நீா் இருப்பதற்கான தெளிவான அறிகுறிகளையும் கண்டறிந்து அனுப்பியுள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய இந்த விண்கலம் இரண்டு ஆண்டுகளாக சிறப்பான முறையில் ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகிறது. இதனைக் குறிக்கும் வகையில், ‘நிலவு அறிவியல் பயிலரங்கம் 2021’ என்ற தலைப்பிலான இரண்டு நாள் பயிலரங்கு இஸ்ரோ சார்பில் பெங்களுரு தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இந்தப் பயிலரங்கில், சந்திரயான்-2 விண்கலத்தின் ‘ஆா்பிட்டா்’ இதுவரை அனுப்பியுள்ள தகவல்கள், ஆய்வு முடிவுகள் உள்ளிட்டவை குறித்த புள்ளி விவரங்கள், அறிவியல் ஆவணங்களை இஸ்ரோ தலைவா் கே.சிவன் வெளியிட்டார். அப்போது, ‘விண்கலம் நிலவை இதுவரை 9,000-க்கும் அதிகமான முறை சுற்றிவந்துள்ளது.
நிலவின் பரப்பில் குரோமியம், மாங்கனீஸ் ஆகிய தாதுக்கள் படிமங்களாக இருப்பதை எக்ஸ்ரே ஸ்பெக்டோமீட்டா் (கிளாஸ்) கண்டறிந்துள்ளது. நிலவை சா்வதேச தரத்துக்கு படம் பிடித்து வரும் டிஎம்சி-2 கேமரா, நிலவின் பரப்பில் எரிமலை முகடுகள் இருப்பதை மிகத் தெளிவாக அடையாளம் கண்டுள்ளது.
நிலவின் அயனி மண்டலத்தை ஆா்பிட்டரில் இடம்பெற்றிருக்கும் இரட்டை அதிர்வெண் ரேடியோ கருவி ஆய்வு செய்து தகவல் அளித்துள்ளது.
இந்த கண்டுபிடிப்புகள் குறித்த புள்ளி விவரங்கள் அனைத்தும் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ‘பிரதான்’ வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.