தமிழகத்தில் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 200 குளங்கள் சீரமைக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டம் ஐந்து கட்டங்களாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ்குளங்களின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, மதகுகள், கலிங்கல் ஆகியவை பழுதுபார்க்கப்படும். வரத்துக் கால்வாய்கள், குளங்கள் தூர்வாரப்படும். இத்திட்டத்துக்கு 60 சதவீத நிதியை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்கும். இதன்படி, தமிழகத்தில் முதல்கட்டமாக 48 குளங்களும், 2ம் கட்டமாக 56 குளங்களும் ரூ. 25 கோடியில் சீரமைக்கப்பட்டன. 3ம் கட்டமாக 49 குளங்கள் ரூ. 22 கோடியில் மேம்படுத்தப்பட்டன. 4வது கட்டமாக தற்போது 83 குளங்கள் ரூ. 49 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 94, திருச்சியில் 59, மதுரையில் 47 குளங்கள் என இத்திட்டத்தின் கீழ் 23 மாவட்டங்களில் 200 குளங்கள் சீரமைக்கப்பட உள்ளன. இந்த பணிகளை 2022 ஏப்ரலில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.