ஸ்வதந்தராநந்தர் சுப்ரமண்ய சிவா

0
853

நாற்பத்தோரு ஆண்டுவாழ்க்கை முழுதும் விரவிக் கிடந்த வறுமையையும் துயரத்தையும் தாய் பராசக்தி பாரதமாதாவின் ஆசி என இன்முகத்தோடு ஏற்று வாழ்ந்தவர். வீரத்தில் சாதுர்யத்தில் சத்ரபதி சிவாஜிக்கு ஒப்பாக விளங்கியதால் பாரதி முதல் பலராலும் சிவாஜி என அழைக்கப்பட்டார்.

1884 அக்டோபர் 4ல் வத்தலகுண்டுவில் சுப்புராமாகப் பிறந்தவர். உபநயனத்திற்குப் பிறகு சுப்ரமண்ய சர்மா ஆனார். மெட்ரிகுலேஷன் வரை படித்தார். சிவகாசி போலீஸ் சூப்பரின்டெண்ட் ஆபீசில் மாதம் 10 ரூபாய் சம்பளத்தில் 1901ல் உறவினர் சிபாரிசில் வேலை கிடைத்தாலும், ஒரே நாளில் ‘இது அடிமை வேலை!’ என உதறி விட்டு வெளியெறினார்.

1903ம் ஆண்டு ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகளுடன் பழக்கம் வாய்க்க, அவரால் சுப்ரமண்ய சிவம் என அழைக்கப்பட, பிறகு அதுவே நிலைத்துவிட்டது. ஆர்ய சமாஜ தொடர்பினால் ஆன்மீக விஷயங்களில் நாட்டம். சிவாஜியின் மதம் தேசியம். பாரத நாட்டில் பிறந்த அனைவரும் பாரதியர்கள். வழிபடு தெய்வம் பாரத தேவி மட்டுமே.

தடையை மீறி வ.உ.சி யோடு இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பெற்று, மேல் முறையீட்டால் 6 ஆண்டுகளாகக் குறைக்கப் பெற்று, திருச்சி சிறையில் சிறைக் கொடுமைகளை அனுபவித்ததில் தொழுநோய் நோய் முற்றியது. அவருக்குச் சிகிச்சை அளிக்க விருப்பமில்லாமல் பிரிட்டிஷ் அரசு 4 ஆண்டுகளிலேயே விடுவித்தது.

1921ம் ஆண்டு தை மகர சங்கராந்தி முதல் விவேகாநந்தரைப் போல காஷாய உடை அணிந்து கொள்ளலானார்.

அதனால் ஸ்வதந்தினாந்தர்” என அழைக்கப்பட்டார். 1921ல் மகாமகத்துக்கு வந்திருந்த காஞ்சி ஸ்ரீசங்கராச்சாரியார் சுப்ரம்ணய சிவத்தை அழைத்து ஆசி வழங்கி,, “. இவரே சிவம்! சிவமும் இவரே! இத்தகைய உண்மைத் தியாகிகளை நம் தேசத்துத் தாய்மார்கள் பெறுவார்களாயின் இதைவிடப் பெருமை வேண்டியதில்லை” என்றார்.

பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோயில் எழுப்ப பாடுபட்டார். அதற்கான நிதி திரட்டவும் ஆதரவு திரட்டும் முயற்சிகள் எடுத்தார். தனது எழுச்சியூட்டும் பேச்சால் மக்களைத் தூண்டினார் என பிரிட்டீஷ் அரசால் மீண்டும் இருமுறை சிறைவாசம். உடல் பலவீனமடைந்து இவரது உயிர் 23 ஜூலை 1925ல் பிரிந்தது.

(தகவல் ஆதாரம்: வெ சாமிநாத சர்மாவின் “நான் கண்ட நால்வர்’; ரகமி எழுதிய சுப்ரமண்ய சிவா)

 

வ ரங்கநாதன்,

சுயமுன்னேற்றப் பயிற்றுனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here