வையாபுரிப் பிள்ளை

0
382

ச.வையாபுரிப் பிள்ளை, இருபதாம் நுற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழில் சிறந்த புலமை உடையவேர், ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர், காலமொழி ஆராய்ச்சியாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், சிறந்த பதிப்பாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். வையாபுரிப் பிள்ளை, சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராகவும் செயல்பட்டார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன் பேட்டையில் 1891 அக்டோபர் 12ல் சரவணப்பெருமாள் பாப்பம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். தமிழில் ஆர்வம் அதிகமிருந்தும் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து வழக்கறிஞரானார். வழக்கறிஞராக பணியாற்றிய காலத்தில், வையாபுரிப் பிள்ளை எழுதி, வெளிவந்த பல கட்டுரைகளும் இலக்கிய ஆய்வுகளும் அறிஞர்கள் மத்தியில் பேசப்பட்டன. உ.வே. சாமிநாதய்யருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை வையாபுரிப் பிள்ளையைத்தான் சாரும்.

ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்குப் பெரும் பங்குண்டு. வையாபுரிப் பிள்ளை 1926ல் சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியின் (ஏழு தொகுதிகள்) பதிப்பாசிரியர் பொறுப்பேற்றார். 1936 முதல் 1946வரை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக விளங்கினார். பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கினார். அவர் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலத்தைப் பொற்காலம் என்று கூறுவார்கள். அந்த காலகட்டத்தில்தான் மலையாள மொழி சொற்களஞ்சியம் பதிப்பிக்கப்பட்டது.

மகாகவி சுப்பிரமணிய பாரதி, வ. உ. சிதம்பரம் பிள்ளை ஆகியோரிடம் வையாபுரிப் பிள்ளைக்கு நெருங்கிய அறிமுகம் உண்டு. சிறைவாசத்துக்குப் பிறகு, அரசியல் வாழ்வில் வெறுப்புற்றிருந்த வ.உ.சி, ஏட்டிலிருந்த இளம்பூரணரின் தொல்காப்பிய உரையைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு படியெடுத்தார். அதனை வையாபுரிப் பிள்ளையிடம் காட்டி செப்பம் செய்தார். அதனை அந்த உரைப்பதிப்பின் முன்னுரையில் வ.உ.சி நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர், மனோன்மணியம், நாலாயிர திவ்யப் பிரபந்த உரைகளை பதிப்பித்தது தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றியவர் வையாபுரிப் பிள்ளை. கம்பராமாயணத்துக்கு உரை எழுதிப் பதிப்பிக்கும் அவரது அவா மட்டும் நிறைவேறாமலே போய்விட்டது. 1956 பிப்ரவரி 17 அன்று தனது 65வது வயதில் இயற்கை எய்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here