மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா செய்தியாளர்கள் சந்திப்பில், ‘அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் மாநிலத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. சில சமயங்களில் வன்முறைகள் ஏற்படுகின்றன. இதனால், பொது சொத்துகளும் தனியார் சொத்துக்களும் சேதப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு ஏற்படும் சேதத்தின் மதிப்பைவிட இரண்டு மடங்கு வசூலிக்க புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. போராட்டத்தை நடத்தும் கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து இத்தொகை வசூலிக்கப்படும். இதற்கான மசோதாவுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும். இதைத்தவிர தனியாக கிரிமினல் வழக்கும் தொடரப்படும்’ என தெரிவித்தார். தமிழகத்திலும் இதைப்போன்றதொரு சட்டம், 1992ல் அறிமுகம் செய்யப்பட்டது. மரக்காணத்தில், பா.ம.கவினர் கடந்த 2013ல் வன்முறையில் ஈடுபட்டபோது இந்த சட்டத்தின்கீழ் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால், 29 ஆண்டுகளாக இந்த சட்டம் இருந்தாலும் முறையாக அமல்படுத்தப்படவில்லை. இந்த சட்டத்தின் அடிப்படையில் எத்தனை பேரிடம் இழப்பீடுகள் வசூலிக்கப்பட்டது என்பதும் தெரியவில்லை. இனிவரும் காலங்களில் இந்த சட்டத்தைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கூறியிருந்தது.