திருவள்ளுவரின் நான்கு வரி பாடல்

0
641

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர். ஒரே ஒருவருக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார். அந்த பெருமைக்குரியவர் அவரது மனைவி வாசுகி. அந்த அம்மையார். தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. வள்ளுவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். அது ஏன் என்று அந்த அம்மையாருக்கு விளங்கவில்லை. ஆனாலும் அதுகுறித்து கேட்கவில்லை.

அம்மையார் இறக்கும் தருவாயில்தான் கணவரிடம் இதனை கேட்டாராம். அதற்கு வள்ளுவர், சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே அவை இரண்டும். ஆனால், நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதுகுறித்து உனக்கு தெரியவில்லை என்று சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது, விசிறு என்றார். பழைய சோறு எப்படி சுடும்? ஆனால், அந்த அம்மையார் விசிற ஆரம்பித்து விட்டார். அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் அந்தக் கயிறு அப்படியே நின்றதாம். இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!

அந்த அன்பு மனைவி இறந்து போனார். “நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு” என்று அறிவுரை சொன்ன அந்தத் தெய்வப்புலவரே மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கினார். தனது கருத்துப்படி மனைவியின்மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், “அடியிற்கினியாளே அன்புடையாளே படிசொல் தவறாத பாவாய் அடிவருடி பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய் இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு” என்று நாலு வரி பாட்டெழுதினார்.

அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் பொருள்.

எஸ். சங்கீதா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here