பெருமைமிகு பாரத குடிமக்கள் நாம்!

0
881

பாரதம் சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு இது. சுதந்திர பாரதத்தின் ஜனநாயகத்தை வலுப்படுத்த டாக்டர் அம்பேத்கர், முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் படேல், பாபு ராஜேந்திர பிரசாத் போன்ற தலைவர்கள் அரசியல் நிர்ணய சபையை உருவாக்கினார்கள். இந்த சபையின் தலைவராக டாக்டர் அம்பேத்கர் செயல்பட்டார். தமிழகத்தில் இருந்தும் டி.டி. கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் கோபாலசுவாமி ஐயங்கார் காளியண்ணன் கவுண்டர் என அனைத்து மாநிலங்களில் இருந்தும் 299 உறுப்பினர்கள் சபையில் இடம் பெற்றார்கள். அரசியல் நிர்ணய சபை உருவாக்கத்தை தடுத்து நிறுத்த முயன்ற முஸ்லிம் லீக், அந்த முயற்சியில் தோல்வி அடைந்ததால் சபையை நிராகரித்துவிட்டது.

இங்கிலாந்து நாட்டின் அரசியல் சாஸனத்தை ஒட்டியே பாரதத்தின் அரசியல் சாஸனமும் உருவாக்கப்பட்டாலும் உலகின் பல்வேறு நாடுகளின் அரசியல் சாதனங்களும் அலசி ஆராயப்பட்டன. அதைவிட முக்கியமாக பாரதத்தின் தர்ம சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய சட்டத்திட்டங்கள், அவற்றின் தற்காலத்திய தேவைகள் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

பல்வேறு மாநிலங்களின் கூட்டமைப்பு என்று அமெரிக்காவை வர்ணித்தாலும் அதன் அரசியல் சாஸனம் வெறும் கையேடு அளவே இருக்கும். ஆனால் பல்வேறு அம்சங்களைக் கொண்ட பாரத அரசியல் சாஸனமானது ஒரு முழுமையான, ஜனநாயக ரீதியிலான அரசியல் சாஸனமாக கருதப்படுகிறது. வழிபாட்டு உரிமை, பல்வேறு சம்பிரதாயங்களின் சடங்குகள், மதரீதியான உரிமைகள் ஆகியவற்றை அவரவரது விருப்பங்களுக்கேற்ப கடைப்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பசுவதைத் தடைச் சட்டத்தை பிற்காலத்தில் அமல்படுத்த யோசனை அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்துப் பிரிவு மக்களும் உரிமையுடன் வாழ உறுதி செய்யப்பட்டுள்ளது. பிற நாட்டு அரசியல் சாஸனங்களில் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன; மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள் (Obligations) வலியுறுத்தப்பட்டுள்ளன. ஆனால் பாரத அரசியல் சாஸனத்தில் உரிமைகளை வழங்கப்பட்டுள்ள அதே நேரத்தில் நாட்டு மக்களுக்கான பொறுப்புகள் (Duties) உணர்த்தப்பட்டுள்ளன. இது நமது நாட்டின் தர்மத்தின் அடிப்படையிலான சிறப்பம்சம் எனலாம். நமது நாட்டின் சின்னத்தில் ‘ஸத்யமேவ ஜயதே’ என்ற வாக்கியம் இணைக்கப்பட்டுள்ளது.

பாரதத்தின் அரசியல் சாஸனத்தை சிதைக்க இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு பலமுறை முயன்றது. பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி சாதுக்களும் சந்நியாசிகளும் போராடினார்கள். அந்தப் போராட்டத்தை கடுமையாக ஒடுக்கியது. 1975ல் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை அரசியல் சாஸனத்தின் மீதான கொடூரமான தாக்குதல் எனலாம். அனைத்து எதிர்க்கட்சிகளையும் தடை செய்து எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்த இந்திரா காந்தி அரசு, அரசியல் சாஸனத்தின் மீதும் கை வைத்தது. இரு அவைகளிலும் போதிய உறுப்பினர்கள் இல்லாதபோதும், அரசியல் சாஸனத்தின் முகப்பில் சோசலிஸம், மதச்சார்பின்மை ஆகிய இரண்டு வார்த்தைகளை பலவந்தமாக சேர்த்தது. இது டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாஸனத்துக்கு எதிரானது.

அதேபோல மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பு மூலமாகவே நமது நாட்டின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமல் இந்திய துணை கண்டம் என்று சில அரசியல் கட்சிகள் பேசுவது அரசியல் சாஸனத்துக்கு விரோதமானது. பாரத அரசு என்பது பல அரசுகளின் கூட்டமைப்பு (Union of states, இங்கு states என்றால் அரசாங்கங்கள்) என்று டாக்டர் அம்பேத்கர் தெளிவுபட கூறியுள்ளார். நிர்வாக ரீதியிலான மாநிலங்களை உருவாக்கவும் மாற்றிமைக்கவும் அவற்றின் சட்டம், ஒழுங்கு குறித்து நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாரதம் கலாசார ரீதியில் ஒருங்கிணைந்த நாடு என்பதை தொடர்ந்து அரசியல் சாஸனம் உறுதிபடுத்துகிறது.

நவம்பர் 26, 1949ல் பாரத அரசியல் சாஸனம் அங்கீகரிக்கப்பட்டது. இன்றுடன் 72 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. பாரதம் ஜனநாயக நாடாக அறிவிக்கப்பட்ட இந்த நாளை அரசியல் சாஸனத்தை தலைமையேற்று நடத்திய டாக்டர் அம்பேத்கரைப் போற்றும் விதமாக அரசியல் சாஸன தினமாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. பாரத நாட்டின் பெருமைமிகு குடிமக்களான நாமும் கொண்டாட்டங்களில் பங்கேற்போம்.

– சந்திர. பிரவீன்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here