சாவித்திரி பாய் பூலே

0
538

வேதகாலத்தில் அறிவில் சிறந்த ரிஷி பத்தினிகள், புராணகாலங்களில் மதியுக ஆளும் திறன்படைத்த வீராங்கனைகள், சங்க காலங்களில் அரசமரியாதைக்கும் இலக்கியங்களுக்கு ஆதாரமாகவும் விளங்கிய நம் பாரதிய பெண்கள், அந்நியர்களின் கொடுங்கோல் ஆட்சி நடந்த பல நூற்றாண்டுகளில் கல்வியறிவு நிராகரிக்கப்பட்டு, பல்வேறு அடக்குமுறைகளை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.

இத்தகைய நிலைமையை மாற்றிட எத்தனையோ பேர்கள் சமுதாய பணியை வாழ்நாளை முற்றிலுமாக அர்ப்பணித்து பாடுபட்டுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்க மாதரசி ‘‘சாவித்ரிபாய் பூலே’’. நைகான் என்ற ஊரில் பிறந்து 9 வயதில், 12 வயது நிரம்பிய ஜோதிராவ் பூலேவை மணந்து அவருடன் சேர்ந்து கல்வி கற்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகுந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆசிரிய பயிற்சி படிப்பு முடித்து பூனா அருகே பிடேவாடாவில் பள்ளிக்கூடம் ஒன்றை துவக்கினார். விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கான பள்ளி அது. இதனால் ஏராளமான பெண்கள் கல்வியறிவு பெற்றனர்.

பள்ளிக்கு செல்லும்வழியில் சாவித்ரி பாய் கற்களாலும், சாணத்தாலும் மனித கழிவுகளாலும் தாக்கப்பட்டார். அப்படியும் மனம் தளராமல், கணவரது வழிக்காட்டல்படி தினம் கையோடு மாற்று சேலையையும் எடுத்துச்சென்று பள்ளியை அடைந்ததும் சுத்தம் செய்து மாற்றுசேலை உடுத்தி பணியை தொடந்தார். கல்வி மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக தனது வீட்டில் கிணறு தோண்டி அனைவருக்கும் வழங்கியுள்ளார். “மகிளா சேவா மண்டல்” என்ற அமைப்பை நிறுவி சேவைபணிகளை செய்தார். விதவைகளுக்கு மொட்டையடிக்கும் வழக்கத்தை ஒழித்துகட்ட முடிதிருத்தும் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து போராடினார். 1876ல் கடும் பஞ்சம் நிலவியபோது கணவருடன் நாள்தோறும் உணவுசமைத்து மக்களுக்கு விநியோகித்தார். கணவர் இறந்த பின் அவரது விருப்பத்தின்படி விதவை கோலம் ஏற்காமல் இறுதிவரை மங்கல அணிகளுடன் வாழ்ந்தார். பெருந்தொற்றுநோயாக பிளேக் பரவியபோது ஊருக்கு வெளியே மருத்துவமனை நிறுவி வளர்ப்பு மகனும் மருத்துவருமான யஷ்வந்துடன் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தார். நோயுற்ற குழந்தைகளை ஒரு தாயாய் தோளில் சுமந்துசென்று மருத்துவமனையில் சேர்ப்பித்து வந்த அவருக்கும் பிளேக் நோய் தாக்கியதால் மரணித்தார்.

சாவித்ரிபாய் பூலேவின் வாழ்க்கை நாம் அனைவரும் போற்றி வணங்கத்தக்கது மட்டுமல்ல, சமுதாயப்பணியில் தடைகளை தகர்த்து இறுதி மூச்சு வரை பணியாற்றவிழையும் அனைவருக்கும் ஓர் உந்துசக்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here