ஜி டி நாயுடு-கட்டுரை

0
796

ஜி.டி.நாயுடு

ஜி.டி. நாயுடு என்று பிரபலமாக அழைக்கப்படும் திரு கோபால்சாமி துரைசாமி நாயுடு அவர்கள் தமிழகம் தந்த  அறிவியல் மாமேதைகளுள் ஒருவர். இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில்எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர்.

வாழ்க்கை குறிப்பு

     இவர் கோயம்புத்தூர் மாவட்டம் கலங்கல் கிராமத்தில் பிறந்தார். ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார்.

வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார்.

தனித்திறன்கள்

இளம் வயதில் ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துகொண்டார்.

சிறிது காலத்திலேயே வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தி தொழிற்சாலையை நிறுவினார்.

அப்போது முதலாம் உலகப்போர்  துவங்கிய காலமாயிருந்ததால் அவருடைய பருத்தி தொழில் சூடு பிடித்தது. அவருடைய அபரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார்.

சாதனைகள்

தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். அந்நாளிலேயே பயணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு.

முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்.

இத்தகைய கண்டுபிடிப்புகள் நாயுடுவிற்கு கைவந்த கலையாகும். பல்கலைக்கழகப் படிப்பில்லாதிருந்தும் அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் பல.

மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.

எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க (அதிர்வு சோதிப்பான்) Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு.

அவர் செய்து வந்த மோட்டார் வாகனத் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறைகளிலும் அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.[3]

நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் காப்புரிமைஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத் தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து தருவிக்க பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை. அதனால் நாயுடுவின் அரும்பெரும் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் செய்ய முடியாமலே போய்விட்டன.

ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. “பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்”. அதற்கு அவர் கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’

மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துகொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார்.

நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது.

எனவே, மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார்.

அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார்.

விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார்! சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன!

அதன் பிறகு பருத்திச் செடி, துவரைச் செடி என அவருடைய ஆராய்ச்சி தொடர்ந்தது.

அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள அவருடைய அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர். ஆயினும் இந்திய அரசாங்கம் அவரை கண்டுகொள்ளவேயில்லை.

1938 ஆம் ஆண்டு பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார்.

தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார்.

அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய சுயமுயற்சியினால் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். அக்கல்லூரி தற்போது அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் (GCT) என அறியப்படுகிறது.

இவருடைய மகன் ஜி.டி. கோபாலையும் கலைக்கல்லூரிக்கு அனுப்பாமல் தொழிற் கல்வி படிக்கச் செய்தார். அவர் இப்போது தன் தந்தை உருவாக்கிய தொழில் ஸ்தாபனங்களைக் கவனித்துக் கொள்கிறார்.

நாயுடுவின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது பல ஸ்தாபனங்களும் நிறுவனங்களும் பயிற்சி அளிக்கும் சாதனங்களையும், கருவிகளையும் இவருடைய கல்லூரிக்கு இலவசமாக அளித்தன.

இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here