டி.எஸ்.சொக்கலிங்கம்-நினைவு தினம் ஜனவரி 6

0
308

டி. எஸ். சொக்கலிங்கம் (மே 3, 1899 – சனவரி 6, 1966) இதழியலாளரும், எழுத்தாளரும் ஆவார். ‘பேனா மன்னன்’ என்று அழைக்கப்பட்ட இவர் இந்திய விடுதலைப் போராளி. காந்தியின் அறைகூவலை ஏற்று பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்.

வாழ்க்கை சுருக்கம்
சொக்கலிங்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியில் பிறந்தார். பெற்றோர் சங்கரலிங்கம் பிள்ளை – லெட்சுமியம்மாள். மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகளுடன் பிறந்தவர் சொக்கலிங்கம். மடத்துக்கடை” என்ற புகழ்பெற்ற பல்பொருள் அங்காடியை சொக்கலிங்கத்தின் தந்தை நடத்தி வந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு சொக்கலிங்கத்தின் சகோதரர் சிதம்பரம்பிள்ளை அங்காடியை நடத்தி வந்தார். ஆஷ் கொலை வழக்கில், சிதம்பரம்பிள்ளையைத் தொடர்புபடுத்தி அவரைக் கைது செய்தனர். குடும்பத்தினர் நடத்தி வந்த “மடத்துக்கடை”யை சொக்கலிங்கம் மேற்பார்வைப் பொறுப்பை ஏற்றார். இதனால் அவர் கல்வி தடைப்பட்டது.
இதழியல் துறையில்
காந்தியத்தில் தீவிர பற்றுக்கொண்ட சொக்கலிங்கம், 1920களில் தனது 21ஆவது வயதில் இதழியல் துறையில் காலடி வைத்தார்.
சேலம் வரதராஜூலு தொடங்கி நடத்திவந்த “தமிழ்நாடு” இதழில் இவர் முதன் முதலில் பணியாற்றினார். பிறகு, வ.ரா, சீனிவாசன் ஆகியோரோடு இணைந்து மணிக்கொடி இதழைத் தொடங்கினார்.
‘காந்தி’ என்ற வாரம் இருமுறை இதழை தொடங்கினார்.
பின்னர், சதானந்த் தொடங்கிய தினமணி இதழின் முதல் ஆசிரியராகப் பொறுபேற்றார். ‘இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும் தன்னைத் தமிழர் என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு வெளியே சென்றால் தன்னை இந்தியன் என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் – தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டை தன் வசிப்பிடமாகக் கொண்ட, இந்து, முஸ்லீம், கிறித்தவர்கள் மற்றும் தமிழ்பேசும் அனைவரும்தான்’ என்று தினமணியின் முதல் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இவர் தினமணி ஆசிரியராக இருந்தபோது, ஏ.என்.சிவராமன், புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி உள்ளிட்டோர் துணை ஆசிரியர்களாக இருந்தனர். தினமணி பின்னர், கோயங்கா குழுமத்துக்கு கைமாறியது. 1943 இல், தினமணியில் இருந்து வெளியேறினார் சொக்கலிங்கம். புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி ஆகியோரும் அப்போது வெளியேறினர். சொக்கலிங்கத்துக்கு பின்னர் தினமணி ஆசிரியர் பொறுப்புக்கு அவரின் நெருங்கிய நண்பரான ஏ.என்.சிவராமன் வந்தார். தினமணியில் இருந்து வெளியேறிய சொக்கலிங்கம், இக்கட்டான ஒரு நேரத்தில் மீண்டும் தினமணியில் ஒரு பணிக்கு வர நேர்ந்தது. அதற்கு காரணமாக இருந்ததும் ஏ.என்.சிவராமனே. அந்தச் சூழலில் தினமணி நிர்வாகம் சொக்கலிங்கத்துக்கு நிர்வாகத்தில் ஒரு பணியை அளித்தது குறிப்பிடத்தக்கது.
1944 இல் தினசரி என்ற நாளிதழைத் தொடங்கினார். சிறிது காலத்துக்கு மேல் அந்த இதழ் தாக்குப்பிடிக்காமல் திணறியது. ஒரு கட்டத்துக்கு மேல் நின்று போனது. ஆனாலும் மனம் தளராத சொக்கலிங்கம், ஜனயுகம், பாரதம், நவசக்தி உள்பட பல பத்திரிகைகளை நடத்தினார்.

புரவலர்
புதுமைப்பித்தன் என்ற எழுத்தாளன் தமிழ் இலக்கிய உலகுக்கு கிடைக்க காரணமாக இருந்தவர் சொக்கலிங்கம். தினமணி, மணிக்கொடி, காந்தி உள்ளிட்ட, தான் பணியாற்றிய அத்தனை இதழ்களிலும் புதுமைப்பித்தனுக்கு வாய்ப்பளித்தார்.

படைப்பிலக்கியம்
சிறந்த இதழியலாளர் மட்டுமல்ல, சொக்கலிங்கம் சிறந்த படைப்பிலக்கியவாதியும்கூட. லியோ டால்ஸ்டாயின் புகழ்பெற்ற நாவலான போரும் அமைதியும் என்ற நாவலை தமிழாக்கம் செய்தார். இது தவிர, சிறுகதை, நாவல், கவிதை என இலக்கியத்தின் அத்தனை துறைகளிலும் சிறப்பான பங்கினை நல்கியுள்ளார் சொக்கலிங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here